ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                    குறிஞ்சிப்பாட்டு

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? குறிஞ்சிப்பாட்டு

மொழி என்பது மனிதனின் அடையாளம். மனித இனத்தின் வரலாறு, காலம், சிறப்புகள் ஆகியவற்றைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் அறியச் செய்வது இலக்கியங்கள் ஆகும். மனிதன் வாழத் தொடங்கிய காலத்து வாழ்வியல் முறைகளைக் காதல், வீரம் எனப் பாகுபடுத்திச் சுவையூட்டிப் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கியங்கள் சங்ககாலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், தற்காலம் எனக் காலக்குறிப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் இலக்கியத்தினை எளிமைப்படுத்தி விளக்குவதே இத்தொடரின் நோக்கம்.

ஆரிய அரசனும், கபிலரும்

முன்னொரு காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரைக்கு வந்திருந்த ஆரிய நாட்டு அரசன் பிரகத்தன், சங்கப் புலவர்கள் வழியாகத் தமிழர் நாகரீகம், இலக்கிய வளம் எனத் தமிழ்நாட்டின் பெருமைகளைக் கேட்டறிந்தான். மேலும் கபிலருடன் சில நாள்கள் பழகிடும் வாய்ப்பில், தமிழ் இலக்கியத்தில் ஆணும், பெண்ணும் சந்தித்துக் காதல் கொண்டு திருமண வாழ்வில் இணையும் முறை குறித்து இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதை அறிந்தான்.

காதல் வாழ்வினைக் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை எனப் பிரிக்கப்பட்டுக் களவுக்கெனெத் தனி இலக்கணம் உள்ளது வியப்பையும், ஆர்வத்தையும் தூண்டியதால் கபிலரிடம் களவுக் காதலைக் (காதல் செய்யும் காலத்து நாள்கள்) குறித்து மட்டும் கதையைப் போல ஒரு இலக்கியம் எழுதித் தரக் கேட்டுக் கொண்டான்.

ஆணும், பெண்ணும் சந்தித்துக் காதல் கொண்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளும் தமிழர் வாழ்வினை அதன் இலக்கணம் மாறாமல் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழர்முறை இதுவெனச் சொல்வதற்காகக் கபிலர் 261 வரிகளில் குறிஞ்சிப்பாட்டு என்ற நூல் ஒன்றை எழுதினார்.

அகப்பாடல்

அகப்பாடல்கள் முழுமையாகக் காதல் செய்திகளை உள்ளடக்கியதாகும். அவை எப்படி இருக்க வேண்டும் என்று அகப்பாடல்களுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகின்றது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்பர் (அகம்-1) இவற்றில் கைக்கிளை-ஒருதலைக்காமம், பெருந்திணை – பொருந்தாக்காமம் ஆகிய இரண்டும் தமிழ் அறிஞர்களால் பெரிதும் வரவேற்கப்படாதவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இந்த ஐவகை நிலங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் மூன்றும் அகப்பாடல்களில் சிறப்பித்துக் கூறப்படும். அவை,

  முதல் பொருள் – ஐந்து வகை நிலங்களையும், பொழுது எனப்படும் காலத்தையும் குறிப்பிடுவது. கார்காலம். கூதிர் காலம் (குளிர்காலம்).

  கருப்பொருள் – ஐந்து வகை நிலப்பகுதிகளில் வாழுகின்ற மக்களில் பழக்கங்கள், தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, தொழில், யாழ், பண், பூ. உயர்ந்தோர், உயர்ந்தோர்  அல்லோர், ஊர், நீர் போன்ற அனைத்தும் பாடல்களின் இடம்பெறும்.

  உரிப்பொருள் – மூன்று உரிப்பொருள்களிலும் வாழ்க்கை ஒழுக்கமே முதலாக இடம்பெறும். (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல்).

போன்றவையோடு வேறு பல கோட்பாடுகளைக் கொண்டும் இயங்கிக் கொண்டிருந்த காதல் வாழ்வினைக் கதைவடிவில் கபிலர் குறிஞ்சித்திணைக்குரிய தகவல்களோடு எழுதியுள்ளார். காதலர்கள் இருவரின் முதல் சந்திப்பில் தொடங்கி அவர்களோடு இணைந்து பயணித்துக் காதலெனும் இன்பத்தை உணர்த்துவதே “குறிஞ்சிப்பாட்டு”.

குறிஞ்சித்திணை - அறத்தொடு நிற்றல்

ஐந்திணைகளில் முதலாவது குறிஞ்சித்திணை. காதலனும், காதலியும் மகிழ்ந்து இருப்பதும், அது சார்ந்த செய்திகளையும் சொல்வது குறிஞ்சித்திணை. அத்திணைக்குரிய இலக்கண விதிகளோடு எழுதிய ஒன்றே குறிஞ்சிப்பாட்டு. அறத்தொடு நிற்றல் என்பது குறிஞ்சிப்பாட்டின் துறை. அறத்தொடு நிற்றல் என்பதற்குக் காதலை உரியவர்களுக்கு முறையாகத் தெரியப்படுத்துதல் எனப் பொருள் தருகிறது தமிழ்ப் பேரரகராதி.

காதலியைக் காதலன் சந்தித்துக் காதலன்பு நிறைத்து, ஒருவர் உள்ளத்தில் ஒருவர் நிறைந்து மகிழ்ந்திருக்கின்றனர். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாதபடி அன்பு கொண்டு பழகிவருவதைக் களவுக்காதல் என்று அழைத்தனர் நம் முன்னோர். அப்படிக் காதல் கொண்டுள்ள காதலி தன் காதலனை எல்லா நாள்களிலும் சந்திக்க முடியாது. அந்நாள்களில் வருந்தித் தவிக்கும் அவளால் உண்ணவும், உறங்கவும் முடியாமல் தவிப்புடன், தன்னுடைய காதல் யாருக்காவது தெரிந்தால் என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது என அஞ்சுகிறாள். இப்படிக் கழியும் நாள்களினால் அவள் உடல் மெலிந்து, பொலிவிழந்து இருப்பதைக் கொண்டதும், அதன் காரணத்தை அறியக் குறி சொல்பவர்களை அழைக்கிறாள் அம்மா.

தாயின் மனநிலையை உணர்ந்தவள் அதைத் தோழியிடம் சொல்ல, தோழி காதலியின் வளர்ப்புத் தாயான செவிலித் தாயிடம் சென்று அவளின் காதல் கதையையும், அதற்கு வழிவகுத்த நிகழ்ச்சிகளையும் பக்குவமாக எடுத்துச் சொல்கின்றாள். காதலர்களின் வாழ்வை திருமண வாழ்விற்குள் தொடங்கி வைப்பதே அறத்தொடு நிற்றலின் பயனாகும். இது போன்று தோழி எடுத்துச் சொல்வதற்கு “அறத்தொடு நிற்றல்” என்ற இலக்கணப் பெயர் உண்டு.

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி
அறத்தியல் மரபு இலள் தோழி என்ப (தொல் -204)

செவிலியிடம் தோழி அறத்தொடு நிற்பதாகப் பாடல்கள் குறிஞ்சிப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தோழி செவிலித் தாயிற்கும், செவிலித்தாய் நற்றாயிடமும் (காதலியின் தாயிற்கும்), நற்றாய் தந்தைக்கும், சகோதரனுக்கும் அறத்தொடு நிற்கும் செயலைச் செய்வர். அறத்தொடு நிற்றலுக்குப் பின்னர் நடப்பது காதலர்களைக் களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கைக்கு அதாவது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகும்.

குறிஞ்சி நிலத்தில் நடப்பதைக் கூறுவதால் அந்நிலத்தின் பெயரைக் கொண்டே பெயரிட்டுள்ளார் கபிலர். கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு காதலியைக் காதலன் சந்திப்பதையும், அவள் மீது தீராத அன்பு கொள்வதையும் கதையாகச் சொல்கிறதுஅப்பாடல்களைச் சில நிகழ்கால நடப்புகளோடு பொருத்திப் பார்த்து எளிய வரிகளில் சொல்லுவதே காதல் கதை சொல்லட்டுமா என்னும் இத்தொடர். வண்ணங்களால் வாசகர் எண்ணங்களில் நிறைந்திருக்கும் டிராட்ஸ்கி மருது அய்யா அவர்கள் ஓவியங்கள்  என் பேறு.

1. பெத்த மனம் பித்து

2. சொல்லின் அழகி தோழி

3.  மறுபடி பொறந்து வந்து 

4. தூது சொல்ல வந்தேன்

5. காதல் என்பது பொதுவுடைமை

6. மூங்கில் நெல் அரிசி

7. சூரியன் சுடும் மாலைநேரம்

8. முருகனின் சீற்றம்

9. அழகின் அழகு அருவி

10. பூக்கள் பூத்த தருணம்

11.  பூவே பூச்சூடவா

12. ஆணழகே பேரழகே

13. நாய்கள் ஜாக்கிரதை

14. காதலாடும் வண்டுகள்

15. யானையின் பிளிறல்

16. காதலின் புதுமொழி

17. கள் குடித்த(தா) மயில்?

18. பூப்பூப்பூ பூப்பூத்த சோலை

19. வழித்துணைக்கு நானும் வரவா?

20. காதலியல் பாடம் இது

21. இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை?

சங்க இலக்கியம் படியுங்கள், வீரம் தெரியும், காதல் புரியும்
                                                                                                                   - சித்ரா மகேஷ்