ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                  
     யானையின் பிளிறல் 

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? யானையின் பிளிறல்

குறிஞ்சி நிலத்து மக்களின் வாழ்க்கை மலையும், மலை சார்ந்த இடங்களையும் கொண்டது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில்கள் அனைத்தையும் அந்நிலத்திற்கேற்றபடிதான் அமைத்துக்கொண்டனர். உணவு, உடை, இருப்பிடம் என ஒவ்வொரு தேவையும் குறிஞ்சி நிலத்தின் இயல்பின் அடிப்படையில்தான் இருந்தது. மண்ணின் தன்மையை அறிந்து தங்கள் தொழில்களைச் செய்தனர். கிழங்கு தோண்டுதல், தேன் எடுத்தல், தினைக்காடு காவல் செய்தல் போன்ற தொழில்களும், உணவாகத் தினையும், மலைநெல்லும், மூங்கிலரிசியும் பயிர் செய்தனர்.

பயிர்செய்வது என்பது அத்தனை எளிதல்ல. என்ன பயிர் செய்வது. அதற்கேற்ப நிலத்தைச் சரிசெய்து தயார்செய்வது எனத் தொடங்கிப் பல முன்னேற்பாடுகளும், அதைத் தொடர்ந்து பயிர் செய்தவற்றை முழுமையாக்கி முடிப்பது வரை பெரும் உழைப்புத் தேவையாக இருக்கும். ”உயிரைக் கொடுத்துக் காத்தோம்” என்று சொன்னாலும் மிகையாது. அப்படியான சூழலில் வாழும் மக்களுக்கு இடையூறாக விலங்குகளின் தொல்லையும் குறைவில்லாது இருந்தது. தொல்லை தரும் விலங்குகளை மிரட்டி விரட்டுவது பெரும்பாடாக இருந்தது.

தினை பயிரிடுவதும், அதைக் காத்து வீடு சேர்ப்பதுக்குமான போராட்டம் பெரும்கதை. அந்தக் காலத்தில் மக்களுக்குள் நடக்கும் உணர்வாட்டங்களை அழகுத் தமிழில் சுவை நிறைத்துக் கபிலர் கண்முன் நிறுத்துகின்றார். தினை, குறிஞ்சிநில மக்களின் உணவு மட்டுமல்ல யானைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் காவலாளி ஏமாந்த நேரத்தில் பசியாற்ற வரும் யானைகள், தினை தின்று பசியாறுவதோடு தினைக்காட்டினை அழித்தும் விடுவது வழக்கம். உணவு தேடி வரும் யானைகளை விரட்டுவது எளிதல்ல. அவை பயந்தால் பெருங்கோபம் கொண்டு வழிமுழுவதும் மதங்கொண்டதுபோல் ஓடும். எதிரில் வருபவர்கள் ஓடி மறைந்தால் தப்பிக்கலாம், இல்லையென்றால் யானைதான் எமனாக மாறும்.

அத்தினைக்காடு, அதைக் காவல் செய்கின்றான் காவலன் ஒருவன். நாள் முழுவதும் காத்துக் கிடந்த கண்கள் கலைத்துப் போயின. தினைகள் எடுத்த தாளினைக் கொண்டு செய்த குடிசை. அதில் மானின் இரு கண்கள் கொண்டவள் தந்த தேனில் செய்த கள்ளினைக் குடித்துவிட்டு ஓய்வெடுத்தான். அந்த நேரத்தில் யானை தினைக்காட்டுக்குள் புகுந்து அழித்தது போக மீதியைப் பார்த்தவன் உடல் முழுவதும் கோபத்திற்கான அடையாளங்கள் தோன்றியது. அந்த யானையை எப்படி விரட்டினான், யானைக்கு என்ன ஆனது, யானை என்னவெல்லாம் செய்தது என்பதைக் கபிலர் வரிகளில் காணலாம்.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர் 
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும் 
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும் 
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம் 
தெய்வம்- சேயோன் – முருகன் 
துறை – அறத்தொடு நிற்றல் 
பாவகை - ஆசிரியப்பா 
கூற்று- தோழி 
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)


யானை வந்ததும்…

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்பத் 
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ்சிறந்து 
சேமம் மடிந்த பொழுதின் வாய்மடுத்து 
இரும்புனம் நிழத்தலின் சிறுமை நோனாது 
அரவுறழ் அஞ்சிலை கொளீஇ நோய்மிக்கு 
உரவுச்சின முன்பால் உடற்சினஞ் செருக்கிக் 
கணைவிடு புடையூக் கானங் கல்லென 
மடிவிடு வீளையர் வெடிபடுத்து எதிரக், (153-161)

அருஞ்சொற்பொருள்

இருவி வேய்ந்த – இருவி- தினை, தினைகள் நீக்கிய தாளில் செய்த 
குறுங்கால் குரம்பைப்  குறுகிய கால்களை உடைய குடிசை, குரம்பை- குடில், குடிசை 
பிணை ஏர் நோக்கின் - பெண்மானின் அழகான பார்வை உடைய 
மனையோள் மடுப்பத் – மனைவி உண்ணக் கொடுத்த, மடுக்க- உண்பதற்கு 
தேம்பிழி தேறல் மாந்தி – தேனால் செய்யப்பட்ட கள்ளினைக் குடித்து, தேறல்- கள், மாந்தி- குடித்து 
மகிழ்சிறந்து – மிகுந்த மகிழ்ச்சி அடைந்து 
சேமம் மடிந்த பொழுதின் – காவலை நிறுத்திய நேரத்தில் 
வாய்மடுத்து – வாயால் உண்டு 
இரும்புனம் நிழத்தலின் – பெரிய தினைப்புனத்தினை யானை தின்று அழித்த, நிழத்தல்- அழித்தல் 
சிறுமை நோனாது – துன்பத்தினைப் பொறுக்க முடியாமல், சிறுமை- துன்பம் 
அரவு உறழ்– பாம்பைப் போன்ற 
அம் சிலை கொளீஇ – அழகிய வில்லில் நாண் ஏற்றி 
நோய்மிக்கு – வருத்த அதிகமானதால் 
உரவுச்சின முன்பால் – மிகுந்த கோபமுற்று வலிமையுடன் 
உடல் சினம் செருக்கிக் – உடலில் கோபத்திற்குரிய அடையாளங்கள் 
கணைவிடு – அம்பினைச் செலுத்தி 
புடையூ – தட்டை போன்ற கருவிகளைத் தட்டி ஒலி உண்டாக்கி 
கானம் கல் என – காட்டுக்குள் கல் என்ற ஒலி ஏற்படுத்தி 
மடிவிடு வீளையர் – வாயை மடித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகின்றவராய், வீளை- சீழ்க்கை 
வெடிபடுத்து எதிரக் – மிகுந்த ஓசையினை எழுப்பி யானையை விரட்ட

பாடலின் பொருள்

தினைகள் நீக்கிய பின்னர் இருக்கும் தாள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் வாழும் பெண்மானின் அழகான பார்வை கொண்ட தன் மனைவி கொடுக்கும் தேனால் செய்யப்பட்ட கள்ளினைக் குடித்து நிறைந்த மகிழ்ச்சியுடன் தினைக்காட்டைக் காவல் செய்கின்றான். அவன் சிறிது கவனம் சிதறித் தன் வேலையை மறந்த நேரத்தில், யானை தினைக்காட்டிற்குள் புகுந்து தினைகளைத் தின்று அழித்துவிட்ட பின்னர் மிஞ்சி இருக்கும் தினை அளவினைக் கண்டு வருத்தம் அடைகின்றான்.

பின்னர் துன்பம் தாங்காமல், கோபத்திற்குரிய அடையாளங்கள் அவன் உடலில் உண்டாக, பாம்பினைப் போன்ற வில்லினில் நாண் ஏற்றி அம்பைச் செலுத்தி, தட்டை போன்ற கருவிகளைத் தட்டி ஒலியெழுப்பி, கல் என்று காட்டுக்குள் கேட்குமாறு வாயை மடித்துச் சீழ்க்கை ஒலியிட்டு அவன் யானையை விரட்டினான்.

எளிய வரிகள்

தினையை நீக்கிய தாளினால் வேய்ந்த 
குடிசையில் வாழ்கின்றனர் இருவரும்.

பெண்மான் போல அழகான பார்வை 
பெற்ற அவன் மனைவி குடிக்கத் தந்தாள் 
தேனில் செய்த கள்.

கள் குடித்துத் தன்னை மறந்தவன் 
தினைக்காடு காவல் கவனம் இழந்தான் 
நேரம் பார்த்திருந்த யானை காட்டுக்குள் 
நுழைந்து தினை தின்று அழித்து விட்டது.

கவனம் திரும்பியவன் மிஞ்சி இருப்பதைப் 
பார்த்தவனுக்குக் கோபம் கொதித்தது, 
துன்பம் தாங்காமல் கோபத்திற்கான 
அடையாளங்கள் உடலில் தெரிந்தது.

ஆத்திரம் கொண்டவன் பாம்பு போன்ற 
வில்லில் நாண் ஏற்றி அம்பெய்தான்.

தட்டை முதலான கருவிகளைத் தட்டி 
கல் எனும் ஒலி காட்டுக்குள் கேட்க 
வாயை மூடிச் சீழ்க்கையடித்தான்.

இவன் முயற்சி வெற்றி பெற்றது 
யானை பயந்து வெகுண்டு ஓடியது.

 

தப்பிக்க இடம் தேடி

கார்ப்பெயல் உருமின் பிளிறிச் சீர்த்தக 
இரும்பிணர்த் தடக்கை இருநிலம் சேர்த்திச் 
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு 
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர 
உய்வு இடம் அறியேம் ஆகி ஒய்யெனத் 
திருந்துகோல் எல் வளை தெழிப்ப நாணுமறந்து 
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து அவர் பொருந்திச் 
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க, (162-169)

அருஞ்சொற்பொருள்

கார்ப்பெயல் உருமிற் பிளிறி – உரும்-இடி, கார்கால இடியைப் போலப் பிளிறி 
சீர்த்தக – தன் தலைமைக்குத் தகுந்தபடி 
இரும்பிணர்த் தடக்கை – கரிய சொரசொரப்பை உடைய தும்பிக்கை 
இருநிலம் சேர்த்திச் – பெரிய நிலத்தில் சேர்த்து 
சினந்திகழ் கடாம் – சினம் உருவாவதற்குக் காரணமான மதம் 
செருக்கி மரம் கொல்பு – செருக்குடன் மரங்களை முறித்து 
மையல் வேழம் – கலங்கிப் போன யானை 
மடங்கலின் எதிர்தர – கூற்றுவனை போன்று எங்களைப் பார்த்து வர 
உய்விடம் அறியேம் ஆகி – தப்பித்துச் செல்வதற்கு இடம் அறியாமல் 
ஒய்யென – விரைவாக 
திருந்துகோல் எல்வளை – திருத்தமுடைய திரண்ட ஒளி பொருந்திய வளையல்கள் 
தெழிப்ப – ஒலி எழுப்ப 
நாணுமறந்து - நாணத்தை மறந்து 
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து – நடுங்கும் மனது கொண்டவர்களாக 
அவர் பொருந்தி – அவனை அடைந்து 
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க – கடவுள் ஏறிய மயிலைப் போன்று நடுங்க

எளிய வரிகள்

கார்காலத்து இடிபோல காட்டுக்குள் இறங்கியது.
வெகுண்டு ஓடிய அந்த யானையின் பிளிறல்.

வரிகளோடும் கரிய தும்பிக்கையைப் 
பெரிய நிலத்தில் ஓங்கி அறைந்து அடித்து, 
மதம் கொண்ட கோபத்தால் வழியெங்கும் 
மரங்களை நிலத்தில் இருந்து பிய்த்து 
உதறிக் கொண்டு எங்களை நோக்கி 
கூற்றுவனைப் போல் வந்தது யானை.

தப்பித்து செல்ல இடம் தேடி 
அலைந்து வேகமாய் ஓடினோம் 
கை வளையல்கள் சத்தத்துடன்.

நடுங்கும் உள்ளத்துடன் வேகமாக 
வெட்கம் மறந்து அவனிடம் சென்ற 
நாங்கள் நடுங்கியபடி இருந்தோம் 
கடவுள் ஏறிய மயிலினைப் போல.

வைத்த குறி தப்பாது

வார்கோல் உடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை 
அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின், 
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப் 
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது 
அயர்ந்து புறம் கொடுத்த பின்னர், நெடுவேள் 
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்பத் (169-175)

அருஞ்சொற்பொருள்

வார்கோல் – நீண்ட கோல் 
உடுவுறும் – உடு- அம்பு நாணைக் கொள்ளும் இடம், நாணை ஏற்றுக் கொள்வதற்காகக் கணையில் அமைந்த இடத்தில் சேர்ந்த 
பகழி வாங்கிக் – அம்பு இழுத்து 
கடுவிசை – விரைந்து செல்லும்படி ஏவி அண்ணல் யானை – தலைமை உடைய யானை 
அணிமுகத்து அழுத்தலின் – அழகிய முகத்தில் புகுத்தியதால் 
புண் உமிழ் குருதி – புண்ணில் இருந்து கொட்டுகின்ற குருதி 
முகம்பாய்ந்து இழிதரப் -முகத்தில் பரவி, பின்னர் கீழே வடிய 
புள்ளி வரி – புள்ளி வரியும் 
நுதல் சிதைய – நெற்றியின் அழகு அழிய 
நில்லாது – நிற்காது, 
அயர்ந்து – தன்னை மறந்து 
புறம் கொடுத்த பின்னர் – புறமுதுகிட்டு ஓடிய பின்னர் 
நெடுவேள் – முருகன் 
அணங்கு உறு மகளிர் – தீண்டியதால் வருந்தும் பெண்கள் 
ஆடுகளம் கடுப்ப – வெறியாட்டுக் களத்தைப் போன்று.

பாடலின் பொருள்

நீண்ட கோலை உடைய அம்பு நாணைக் கொள்ளும் இடத்தில் அம்பினை வைத்து இழுத்து விரைவாகச் செல்லும்படி ஏவி விட்டு தலைமை உடைய யானையின் அழகிய முகத்தில் புகுத்தியதால் புண்ணிலிருந்து கொட்டும் இரத்தம் முகத்தில் வழிந்து பரவிக் கீழே வடிந்து புள்ளியும், வரியும் உள்ள நெற்றியின் அழகு மறையும்படிச் செய்தது. தன்னை மறந்து புறமுதுகிட்டு யானை ஓடிய பின்னர், அந்த இடம் முருகன் தீண்டியதால் துன்புறும் பெண்களின் வருத்தத்தைப் போக்க உருவாக்கிய வெறியாட்டுக் களத்தைப் போல் காட்சி அளித்தது.

எளிய வரிகள்

நீண்ட கோலில் நாண் கட்டிய 
வில்லில் அம்பைச் சேர்த்தான், 
தன் முழுவலிமை கொண்டு 
யானையை நோக்கி எய்தான்.

வைத்த குறி தப்பாது யானையின் 
அழகு முகத்தில் பொதிந்தது. 
புண்ணிலிருந்து இரத்தம் வழிந்து 
முகமெங்கும் ஓடியது.
கீழே வடிந்ததால் புள்ளியும் வரியும் 
உள்ள நெற்றியின் அழகு அழிந்தது.

அம்பு தைத்த யானை புறமுதுகிட்டுத் 
தன்னை மறந்து ஓடியபின் அந்த இடம், 
முருகன் தீண்டியதால் துன்புற்ற 
பெண்களுக்குரிய வெறியாட்டுக் 
களம் போலக் காட்சி அளித்தது.

யானை, குழந்தைப் பருவம் முதல் மனிதனுக்கு ஆசையான விலங்கு. யானைச் சவாரி, சர்க்கஸ் விளையாட்டு, மனிதனால் செய்ய முடியாத வேலைகள் செய்வது என யானை பல்வேறு வழிகளில் மனிதனோடு வாழ்ந்தது. உருவத்தில் பெரியதானாலும் மனிதனால் பழக்கப்படுத்த முடிந்தது. நன்றியோடும், அன்போடும் மனிதனுடன் வாழ்ந்திடப் பழகிய விலங்குகளில் வியப்பைத் தருவது யானை. அன்றைய நாளில் தங்களுக்குத் தீங்கு செய்த யானையை மிரட்டி ஓடச் செய்தனர் என்பதைப் பாடல் காட்டுகின்றது. ஆனால் காலத்தின் மாற்றத்தில் காட்டை அழித்து வீட்டைச் செய்தான் மனிதன். விலங்குகள் வாழிடத்தில் சிறிதும் கூச்சமின்றி வாழுகின்ற நிலையிலும், சிறிது மனிதமின்றி, இரக்கம் துளியுமின்றிக் கொல்லும் செயல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது. சிந்தித்துச் செயலாற்றூம் திறனில்லாத விலங்குகளைக் கொல்லும் ஒவ்வொருவரையும் மனிதர்கள் என்று சொன்னால் அச்சொல் மதிப்பிழக்கும். அத்தனைபேர்களும் இரும்பர்கள் என்பதே பொருந்தும்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிரிது 
இன்னுயிர் நீக்கும் வினை. (327)

என்னும் குறளில் சொன்னதை மறந்தான் மனிதன். சொல்வதைக் கேட்டு, பழகி சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை மட்டுமல்ல, உருவத்தில் பெரியதும், மிகுந்த பலம் கொண்டதுமான யானையும் தான். மிரட்டும் உருவத்தில் சின்னக் குழந்தையைப் போல் சொன்னதைச் செய்யும் யானைகளின் வாழ்விடத்தை அழிப்பதோடு, இருந்தாலும், இறந்தாலும் பயன் அளிக்கும் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதை அறிந்தும், அறியாதது போலவே உலகம் இயங்கி வருவது துன்பத்தைத் தருகின்றது. காடு அழிக்கும் மனிதர்கள் வாழும் நாடு அழியும், மலை வளம் குன்றின் மழை வளம் குன்றும் என்பது போன்று பல அறிவுரைகள் வழியாகச் சுட்டிக் காட்டினாலும், ஆங்காங்கே இயற்கை மீதான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல இயற்கை நல ஆர்வலர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பு. மனிதமற்ற செயல்களை நிறுத்திய பின் வரும் நாள்கள் மாற்றத்தில் மலரட்டும். இயற்கையின் மீதான காதல் அனைவருக்குள்ளும் வளரட்டும்.

                                                                                கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : காதலாடும் வண்டுகள்

A1TamilNews