ஓவியர் மருதுவின் தூரிகையில் 
           காதல் கதை சொல்லட்டுமா?
                                 க
ள் குடித்த(தா) மயில்?

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? கள் குடித்த(தா) மயில்?

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ( 737) 

ஊற்று நீர், மழைநீர் என்ற இரண்டு நீர்வளமும், ஆற்று நீரும், வளம் தருகின்ற வலிமையான மலையும், பாதுகாப்புத் தரும் அரணும் நாட்டிற்கு உறுப்பு என வள்ளுவம் சொல்லும் அனைத்தையும் கொண்டதே கபிலர் சொல்லும் கதை நாயகன் வாழும் நாடு. அந்த நாட்டில், பெண் கடவுள்கள் ஆடுவதால், தன்னுடைய அழகு நலம் அழிந்து, காண்போர் ஆசைப்படும்படி விண்ணைத் தொடும் மலைச்சிகரங்களில் குளுமையான மணம் வீசுகின்ற செங்காந்தள் மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடந்ததைப் பார்க்கும்போது நல்ல பலவகையான துணிகளைச் சேர்த்து விரித்த கம்பளைத்தைப் போன்று அழகுடைய பொலிவு கொண்ட மலை பொருந்திய நாட்டை உடைய தலைவன்.

அவன், ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல் சொல்கின்றான். அவள் சம்மதம் சொல்லும் வரை விடாது பின் தொடர்கின்றான். படிப்பவர்க்கு இவன் யார்? இவன் சிறப்பு என்ன? எந்த ஊரைச் சேர்ந்தவன்? என்றெல்லாம் கேள்விகள் தோன்றும். அக்கேள்விகளுக்கான பதிலாகக் கபிலர் அவன் வாழும்நாட்டின் சிறப்புகளை, வளத்தினைச் சொன்ன முறை, அந்தப் பெண் அறிந்திருப்பாளா? தெரிந்துதான் காதல் கொண்டாளா? இத்தகைய நாட்டைக் காண யாருக்குத்தான் ஆசை வராது? காண்பவர் கண்கள் இனித்திடும் இயற்கை வளங்கள் நிறைந்த மலைநாட்டின் அழகைச் சொல்கின்றது கபிலரின் சொல்லோவியம்.

ஒரு கவிஞன் இத்தனை துல்லியமாக நாட்டில் நடக்கும் செய்திகளைக் கூர்ந்து கவனித்து இரசித்து அனுபவித்ததோடு, தான் கண்ட இயற்கை தரும் அதிசயங்கள் அனைத்தையும் தன் பாடல்களில் அழகுணர்ச்சி மாறாமல் பதிவு செய்த சங்கப் புலவர்களில் கபிலருக்கு இணை கபிலர். இதுபோன்ற ஆதித் தமிழ்நாட்டில் செழித்தோங்கியிருந்த அரியதான வளங்களைத் தொகுத்து வைத்துள்ளது சங்க இலக்கியப் பெட்டகம். அதில் குறிஞ்சிப்பாட்டு என்னும் காதலைச் சொல்லும் கதைப்பாடலில் குறிஞ்சி நிலத்திற்கே உரிய சிறப்புகளைக் காதலோடு சேர்த்துக் கபிலர் சொல்லியிருப்பதைப் படிப்பது தனிச்சுவை.

மலை நாட்டு அழகன்

அவ்வழி
பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை 
முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச் 
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக, 
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் (186-199)

அருஞ்சொற்பொருள்

அவ்வழி – அப்பொழுது
பழு மிளகு உக்க பாறை – பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கும் பாறை
நெடுஞ்சுனை – நீண்ட சுனை 
முழுமுதல் – பெரிய அடிப்பகுதி 
கொக்கின் தீங்கனி உதிர்ந்தென – மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்து கிடந்தன 
புள் எறி பிரசமொடு ஈண்டி – வண்டுகள் தேனுடன் சேர்ந்து
பலவின் – பலா மரத்தின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் – விரிந்து தேன் சொரிகின்ற நறுமணம் தருகின்ற பழம்
விளைந்த தேறல் – விளைகின்ற தேறல்
நீர் செத்து அயின்ற தோகை – நீர் என்று நினைத்துக் குடித்த தோகை 
வியல் ஊர்ச் சாறு கொள் – பெரிய ஊரில் திருவிழா கொண்ட. வியல்- பெரிய, சாறு- திருவிழா
ஆங்கண் விழவுக் களம் – அங்கு விழாக் களம்
நந்தி- தழைத்தல்
அரி – ஒரு தாள வகை
இன்னியம் கறங்க - இசைக்கருவிகள் ஒலிக்க
ஆடுமகள் - ஆடும் பெண்
கயிறு ஊர் பாணியின் – கயிறு மேல்  ஏறி ஆடுகின்ற ஒலியினால்
தளரும் – தளரும்
சாரல் – மலைச்சரிவு 
வரையர மகளிரின் – மலையில் உள்ள பெண் கடவுள்கள் 
சாஅய் – சிறிது கெட்டு 
விழைதக – விரும்பும்படி 
விண் பொரும் – விண்ணைத் தொடும் 
சென்னி – சிகரங்கள் 
கிளைஇய காந்தள் – கிளையை உடைய காந்தள் செடிகள்
தண் கமழ் அலரி – குளிர்ச்சி தருகின்ற மணம் மலர்கள் 
தாஅய் – உதிர்ந்து 
நன் பல – நல்ல பல 
வம்பு விரி களத்தின் – துணியை விரித்து வைத்த களத்தைப் போன்று 
கவின் பெறப் பொலிந்த – அழகுறப் பொலிந்த, 
குன்று கெழு நாடன் – மலைகள் கொண்ட நாட்டின் தலைவன்.

பாடலின் பொருள்

அங்கு, பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கும் பாறையின் மேல் உள்ள பெரிய சுனையில், பெரியதான அடிப்பகுதியைக் கொண்ட மாமரத்தின் சுவையான இனிய கனிகள் உதிர்ந்தன. அந்தக் கனிகளுடன் வண்டுகள் சிதறிய தேனும், பலாமரத்திலிருந்து வெடித்துச் சிதறிய தேன் சிந்துகின்ற நறுமணம் உள்ள பழங்களின் சாறும் கலந்து, அந்தத் தெளிவான நீருக்குச் சுவை கூட்டியதால் அச்சுனை நீர் கள் போன்றாகியது. அங்கு வந்த மயில் ஒன்று சுவை மிகுந்த கள்ளினை நீர் என்று நினைத்துக் குடித்துவிட்டுப் பெரிய ஊரின் விழாக்களத்தில் தாளத்துடன் வரும் ஓசையுடன் கூடி இனிய இசைக்கருவிகள் ஒலித்திட, கயிற்றின் மேல் ஆடும் பெண், தாளத்திற்கு ஏற்றபடி ஆடி ஆடிக் களைத்துப் பின் தளர்ந்ததுபோல் தளர்ந்தது.

மலையில் உள்ள பெண் கடவுள்கள் ஆடுவதால், தன்னுடைய நலம் அழிந்து, காண்போர் ஆசைப்படும்படி விண்ணைத் தொடும் மலைச்சிகரங்களில் குளுமையான மணம் வீசுகின்ற செங்காந்தள் மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடந்தது. அதைப் பார்க்கும்போது நல்ல பலவகையான துணிகளை விரித்த கம்பளைத்தைப் போன்று  பொலிவான அழகுமிகு மலை பொருந்திய நாட்டை உடைய தலைவன்.

எளிய வரிகள்

பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கும் பாறை
அதில் வற்றாது நீர் கொடுக்கும் சுனை,
சுனையில் விழுந்தது தித்திக்கும்
மரத்தின் சுவைமிகு கனிகள்.
அதனோடு சேர்ந்து கொண்டது 
வண்டுகள் சிதறிய தேன் துளிகள், 
பலாமரத்தின் வெடித்துச் சிதறிய 
தேன் சிந்தும் பழச்சாறுடன் கலந்து 
சுனை நீருக்குச் சுவை கூட்டியது

தெளிந்த நீரில் கலந்த சுவைகள் 
சுனையில் தங்கி மயக்கம் தரும் 
கள்ளின் சுவை போன்றாகியது. 
விழாக் களத்தில் தாளங்கள் முழங்க, 
இசைக்கருவிகள் இசையொலி எழுப்ப 
கயிற்றில் மேல் ஏறி ஆடும் பெண் 
ஆடி ஆடிக் களைத்துத் தளர்ந்ததுபோல் 
கள்ளுண்ட மயக்கத்தில் தளர்ந்தது 
நீரென்று நினைத்துக் கள்ளாய் 
மாறிப்போன சுனைநீரைக் குடித்த 
தாகக் கொண்ட மயிலொன்று

மலையில் வாழ்கின்ற பெண்கடவுள்கள்
ஆடுகின்ற அதிர்வுகளினால்,
மலை உச்சியில் உள்ள குளுமையான,
கண்டவர் ஆசைப்படும் சிறப்புடைய,
நறுமணம் வீசுகின்ற மலர்கள் கொண்ட
கிளைகள் உடைய காந்தள் செடிகள்
நிலத்தில் படர்ந்து கிடக்கின்றன

அந்தக் காட்சி பல நல்ல துணிகளை
விரித்து வைத்த களத்தைப் போன்று,
அழகான பொலிவுடைய மலையைக்
கொண்ட நாட்டின் தலைவன் அவன்.

கள் குடித்ததா மயில்? ஆம், கள் போன்றதொரு நீரினைக் குடித்தது. அவர் வாழ்ந்த நாட்டினைப் பற்றிக் கபிலர் கொண்டிருந்த அறிவு வியப்புக்குரியது. அவர் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் தனிச்சிறப்பும், தனித்தன்மையும், தனித்துவமும் கொண்டவை. இப்பகுதியில் சொல்லும் செய்திகள் அனைத்தும் இப்படி ஒன்று நாம் வாழ்ந்த காலத்தில் இல்லையே என்ற எண்ணத்தைத் தூண்டுபவை. இந்த ஒரு காட்சி மட்டுமே போதும் தமிழன் வளம்நிறைந்த வாழ்வினை வாழ்ந்தவன் என்பதை உறுதிப்படுத்திட. சீரிளமைப் பெருமை உடையது தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு.

அத்தைகைய பேறு கொண்ட நாட்டின் மலையின் சுனையில் உள்ள தண்ணீர், பல நாள்களாகத் தேங்கி நின்று, பழச்சாறுகளில் ஊறித் தீஞ்சுவை கொண்டு கள்ளாகின்றது. அந்நீரைக் குடித்த மயில் தள்ளாடி நடந்து மயங்கிக் கிறங்கி, தள்ளாடித் தள்ளாடி நடை தளர்ந்த கதையைக் கயிற்றின் மேல் ஆடும் பெண்ணின் ஆடலுக்குள் உவமையாக்கிக்  காட்சிப்படுத்திய பாடலைப் படிக்கும் போதே கபிலர் சொற்கள் மயக்கும்; அக்காட்சியைக் காண கண்கள் ஏங்கும்.

                                                                                                                                                                                                                                           கதை வளரும் - சித்ரா மகேஷ்

 முந்தைய வாரம் : காதலின் புதுமொழி