ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? 
                              
மறுபடி பொறந்து வந்து         

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? 
                              மறுபடி பொறந்து வந்து

உலகில் தனி மனித ஒழுக்கம் பாழ்படாத வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும். ஒழுக்கம் பிறழ்ந்துவிடின் மீண்டும் அதைப் புதுப்பித்துக் கொள்வது எளிதல்ல. ஒருமுறை இழந்த நற்பெயரை முமுமையாக மீட்டெடுப்பது எக்காலத்திலும் முடியாது. இதை நன்குணர்ந்தவளாகக் குறிஞ்சிப்பாட்டின் கதை நாயகியைக் காட்டுகின்றார் கபிலர்.

தன் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல், தன் தந்தையின் காவலையும், கண்காணிப்பையும் மீறிக் காதலிக்கத் தொடங்கியவள், தான் காதலிக்கும் செய்தியைப் பெற்றோரிடம் எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் என்ன சொல்வார்கள்? ஏற்றுக் கொள்வார்களா? பழித்துப் பேசுவார்களா? காதல் கதையைச் சொன்ன பின்னர் நடக்கப் போவது என்ன? இப்படி எண்ணித் தவிக்கும் உள்ளத்துடன் காதலிப்பதனால் தன் ஒழுக்கத்தைப் பழி போட்டனர் என்றால், அந்தப் பழியினைப் போக்கிட முடியாது என்பதை உணர்ந்தவளாக இருக்கின்றாள். இதுபோன்ற சிறந்த தெளிவும், திண்மையும் கொண்டவள் தன் கதையின் நாயகி என்பதைக் கபிலர் உணர்த்துவதே இப்பாடல்.

தனிமனித ஒழுக்கம்

முத்தினும் மணியினும் பொன்னினும், அத்துணை,
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்,
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்,
மாசறக் கழீஇ வயங்க புகழ் நிறுத்தல்,
ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந்நிலை,
எளிய என்னர், தொல் மருங்கு அறிஞர். (13-18)

அருஞ்சொற்பொருள்

முத்தினும் மணியினும் பொன்னினும் – முத்து, மணி, பொன்
அத்துணை நேர்வரும் – ஆகிய அனைத்தையும் முறையாக இணைத்த
குரைய - அசைச்சொல்
கலம் கெடின் – அணிகலன்கள் கெட்டால், அணிகலன்கள் பழுதுபட்டால்
புணரும் – இணைக்க முடியும்
சால்பும் – சான்றாண்மை, சிறப்பு
வியப்பும் – ஆச்சரியம், பெருமை,
இயல்பும் - ஒழுக்கம்
குன்றின் – ஆகியவை குறைந்தால்
மாசறக்– அழுக்கு இல்லாமல்
கழீஇ – சுத்தம் செய்து கழுவி
வயங்க - விளங்கிய
புகழ் நிறுத்தல் –புகழைக் கொண்டுவருதல்,
ஆசு அறு- குற்றம் இல்லாத
காட்சி – காட்சி உடைய
ஐயர்க்கும் - சான்றோர்க்கும்
அந்நிலை – அந்த நிலை
எளிய என்னார் – எளிமையானது என்று கூற மாட்டார்கள்
தொல் - பழைமையான
மருங்கு – பகுதிகளை, நூல்களை (நூல்களைக் குறிக்கின்றது)
அறிஞர் – அறிந்த அறிஞர்கள்

காதல் உள்ளம் பேசுவது

மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந்தேர் எந்தை அருங் கடி நீவி,
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என,
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கென
மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று,
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும், (19-26)

அருஞ்சொற்பொருள்

மாதரும் –பெற்றோரின் ஆசை, விருப்பம்
மடனும் – அறியாமை, (ஒருவர் சொன்னது தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்வது – மடம்)
ஓராங்குத் தணப்ப – ஒன்றாக அழிந்திட/கெட
நெடுந்தேர் – உயர்ந்த தேர்
எந்தை – என்னுடைய தந்தை
அருங் கடி நீவி - அரிய காவலைக் கடந்து, (அருங் – அரிய, கடி – காவல், நீவி – கடந்து)
இருவேம் – நாம் இருவரும்
ஆய்ந்த – ஆராய்ந்த,
மன்றல் இது என – களவு மணம் இது என்று
நாம் அறி உறாலின் – நாம் தாயிடம் கூறுமிடத்து
பழியும் உண்டோ? – பழியும் உள்ளதோ
ஆற்றின் – அறிவுறுத்திச் சொல்லிய பின்னர்
வாரார் ஆயினும் – வராமல் இருப்பினும்
ஆற்ற - பொறுத்திருக்க
ஏனை உலகத்தும் – மறு உலகத்திலும்
இயைவதால் – பொருந்துவதால், கிடைப்பதால்
நமக்கு - நமக்கு
மான் அமர் நோக்கம் – மான்கள் ஆசை கொள்ளும் கண்கள் (அமர்- விருப்பம், நோக்கம் – கண்கள்)
கலங்கி – வருத்தம் கொண்டு
கையற்று - செயலற்று
ஆனா – நீங்காத, நீக்க முடியாத
சிறுமையள் – நோயை உடையவள் (சிறுமை- நோய்)
இவளும் - இவளும்
தேம்பும்- வருந்துகின்றாள், தேம்பி அழுகின்றாள்.

பாடலின் பொருள்

முத்து, மணி, பொன் ஆகியவற்றைச் சேர்த்து மிக அழகாகச் செய்யப்பட்ட நகைககள் பழுதடைந்தால், அவற்றை மீண்டும் சரிசெய்து கொள்ளமுடியும். ஆனால் ஒருவர் வாழ்வில் கொண்டிருக்கும் சிறப்பும், பெருமையும், ஒழுக்கமும் கெட்டுப்போனால், கறைகள் இல்லாமல் கழுவி, பொலிவுதரக் கூடிய புகழை மீண்டும் அடைதல் என்பது குற்றமற்ற சிறந்த அறிவினை உடைய பெரியோர்களுக்குக் கூட எளிமையான செயல் என்று தொன்மையுடைய நூல்களைக் கற்றறிந்தோர் சொல்ல மாட்டார்கள்.

என்னைப் பெற்றவர்களின் விருப்பமும், என்னுடைய அறியாமையும் ஒன்றாக விலகிப் போகட்டும். நெடிய தேரினையுடைய என் அப்பாவின் மிகுந்த காவலையும் மீறி நானும், என் காதலனும் தேர்வு செய்து, கொண்ட களவு மணம் இது என்று என் அம்மாவிடம் சொன்னால் பழி உண்டாகுமோ?

அப்படிச் சொல்லிய பின்னர் நான் விரும்பிய என் காதலனுக்கே திருமணம் செய்து தர மறுத்துவிட்டால், சாகும் வரை நாங்கள் காத்திருப்போம்;பொறுத்திருப்போம். எங்கள் மறுபிறவியிலாவது இருவரும் சேர்ந்திடுவோம் என்று மான்கள் விரும்பும் கண்களையுடையவள், கண்ணீர் நிறைத்து, வருத்தம் கொண்டு செயலற்றவளாகித் தீர்க்க முடியாத துன்பம் கொண்டவளாய் அழுகின்றாள்.

எளிய வரிகள்

முத்தும் மணியும் பொன்னும் சேர்த்துச் செய்த
நகைகள் கெட்டால் மீண்டும் சரி செய்ய முடியும்,
சிறப்பு, பெருமை, ஒழுக்கம் கெட்ட பின்னர்
கறை போகக் கழுவிப் புகழை மீட்டெடுப்பது
குற்றமிலா அறிவுடைய பெரியோராலும்
செய்ய முடியாத ஒன்றெனச் சொல்வர்
பழைமையான நூல்களைக் கற்றோர்கள்.

என் பெற்றோர்களின் ஆசையும்
என்னுடைய அறியாமையும் நீக்கியபின்,
நெடிய தேரை வைத்திருக்கும் அப்பாவின்
காவலைத் தாண்டி, காதலனும், நானும்
தேர்ந்தெடுத்த காதல் வாழ்க்கை இதுவென்று
என் தாயிடம் சொன்னால் பழி வருமோ?

சொன்னாலும் நான் விரும்புவரோடு
திருமணம் செய்து வைக்க் மறுத்தால்,
நாங்கள் சாகும்வரை காத்திருப்போம்
மீண்டும் பிறந்து சேர்ந்திடுவோம்,
என்று சொல்லிவிட்டு,

மான்கள் விரும்பும் கண்களையுடைய
காதலி கண்களில் நீர் நிறைத்து,
வருந்திச் செயலழிந்து
தீர்க்கமுடியாத துன்பத்தால்
அழுகின்றாள் தேம்பி…

மேற்சொன்ன கபிலரின் கதை நாயகியின் சொற்களைப் போலவே, திரைப்படத்தின் நாயகி பாடுவதாகக் கீழுள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு ஜென்மம் நான் மறுபடி
பொறந்து வந்து உனக்காகக் காத்திருப்பேன் …  என்றும்,                                                       

இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போடு இருப்போம்”.

இது போன்ற செய்திகள் பாடல்களாகவும், கதை வசனங்களாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அன்றும், இன்றும், என்றும் காதலர்கள் உள்ளத்தில் எழும் ஒரு கேள்வி திருமண வாழ்வு அமையுமா? அமையாதா? என்பதுதான். அந்தச் சூழலில் இந்தப் பிறவியில் முடியாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழவேண்டுமென்ற எண்ணம் தோன்றும்; காதல் உள்ளம் ஏங்கும். இது காதலின் பொதுவுடைமை.                                                                                                                                     

                                                                                             கதை வளரும் - சித்ரா மகேஷ்

A1TamilNews

முந்தைய வாரம் :

சொல்லின் அழகி தோழி