ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? 
                       முருகனின் சீற்றம்     

                   

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? 
                       முருகனின் சீற்றம்

இயற்கை பேராற்றல் கொண்டது. தன் இயல்போடு இணைந்து வாழும்படி உயிர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு கொண்டாடி, அளவின்றி வியப்புகளை நிறைத்து நிற்கும் மாபெரும் ஆற்றல் இயற்கை. மூச்சாகி உயிர் வளர்க்கும் காற்று முதல் மனிதன் வாழ்ந்திட உதவும் அவ்வளவும் இயற்கையின் கொடையே. உலகின் மொத்தச் செயல்பாடும் இயற்கையோடு இணைந்தும், இயற்கையைப் புரிந்தும் நடத்தப்படுகின்றது. அவ்வகையில் நீரும், நெருப்பும் மனிதனின் அன்றாடத் தேவைகளில் இன்றியமையாதவை.

“நீரின்றி அமையாது உலகு” என்பதற்கேற்ப உணவின்றித் தவித்தாலும் தண்ணீரைக் குடித்துச் சிறிது காலம் உயிர் வாழ்ந்திட முடியும். நீரோடு மனிதனுக்கான அனுபவம் ஒவ்வொருமுறையும் புதிது. சங்க காலம் தொடங்கி இன்றுவரை நீர்வளம் என்பது மழை, அருவி, குளம் எனத்தொடங்கி அழகுபடுத்தும் நீரூற்றுகளாக மாறி நிற்பது வியப்பில்லை. நீரின் தேவை தீர்வதில்லை என்றும்.

வானில் நடக்கும் பலவித முன்னேற்பாடுகள் வழியாகத் தான் வருவதற்கு முன்னர் சொல்லிவிட்டு வரும் மழை தனி அழகு. அப்படி வரும் மழையின் அழகைப் பாடாத கவிஞர்கள் இல்லை. அம்மழையில் ஆடாது மனிதர்கள் இல்லை. மேகங்கள் நகர்வதை ஊர்வலமாக்கி, இடியை இசையாக்கி, மின்னலை வான வேடிக்கையாக்கி, மழைக்கவிதை பாடாத, மழைக்கவிதை பிடிக்காதவர் மண்ணில் இல்லை. ஒரு இசைக் கச்சேரி செய்வதுபோல வானில் நடத்திக் காட்டிப் பின்னர் தன் வரவால் மகிழ்வோருக்கும், மழையில் நனையும் குழந்தைகளுக்கும் அன்பின் பரிசாக வண்ணங்களில் பேரழகான வானவில்லையும் தரும் மழை இயற்கையின் இரகசியம். உலகின் அதிசயம்.

குறிஞ்சிப்பாட்டிலும் கபிலர் மழைவருவதற்கு முன்னர் தொடங்கி மழை மண்ணில் சேருவது வரையிலான நிகழ்வினைத் தோழியின் பேச்சில் சொல்கின்றார். மழை வருவதை முதலில் அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட விலங்குகளும், பறவைகளும் தங்கள் இருப்பிடங்களுக்கு விரைவாகத் திரும்பும். பறவைகளின் வழியாகவும் இயற்கை சில குறிப்புகளை உணர்த்துவதைச் சங்ககாலம் தொடங்கி மனிதர்கள் உணர்ந்து, அறிந்து கொண்டாடி வருகின்றனர் என்பதை இப்பாடலில் வரும் குறிப்புகளில் வழியாகக் காண முடிகின்றது.

கபிலர், இடி இடித்து மழை பொழிவதை முருகனின் வீரச்செயலுக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார். இப்பாடலில் உள்ள முருகனின் குறிப்புகளைக் கொண்டு முருகன் தமிழனின் மூதாதையன் என்றே புரிந்து கொள்ள முடிகின்றது. ஆதிச் சமூகமாக வாழ்ந்த தமிழர்கள் முருகனைப் பற்றிச் சொன்னவை கற்பனையாக இருந்திட வாய்ப்பில்லை. முருகன் பகைவர்களை வெல்லும் ஆற்றல் மிகுந்தவனாகவும், அவனின் ஆயுதம், தோற்றம் பற்றிய குறிப்புகள் என அனைத்தும் தம்மோடு வாழ்ந்த ஒருவரைப் பற்றியதாகவே உணர்த்துகின்றது. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்தவரின் ஆற்றலைப் பார்த்து, வியந்து போற்றிப் பதிவு செய்யும் விதமாக முருகனை உவமையாக்கியுள்ளார் கபிலர்.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன் 
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

மலையின் மேல் மழை பொழிந்தது

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர, 
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு, 
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு, 
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, 
இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்,
மின் மயங்கு அருவிய கல் மிசைப் பொழிந்தென, (46-53)

அருஞ்சொற்பொருள்

விசும்பு - வானத்தில் 
ஆடு -பறக்கும்
பறவை- பறவைகள்
வீழ் பதிப் படர - மரவிழுதுகளில் உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல
(வீழ்-மரவிழுது,பதி- இருப்பிடம், படர- செல்ல) 
நிறை - நிறைந்திருக்கும் 
இரும் - பெரிய 
பெளவம் - கடல் 
குறைபட – குறைந்து போகுமாறு 
முகந்து கொண்டு – அள்ளிக் கொண்டு 
அகல் - அகன்ற 
இரு – கரிய/பெரிய 
வானத்து - வானத்தில் 
வீசு -வீசுகின்ற 
வளி - காற்று 
கலாவலின் - கலந்ததால் 
முரசு அதிர்ந்தன்ன – முரசு அதிர்ந்து ஒலித்ததுபோல்
இன் குரல் – இனிய குரல் 
ஏற்றொடு - இடியுடன் 
நிரை செலல் – ஒழுங்கான வரிசையாகச் செலல் 
நிவப்பின் – மேலே செல்லுதல் 
கொண்மூ - முகில் 
மயங்கி - கலங்கி 
இன் இசை – இனிய இசை தரும் 
முரசின் - முரசினையும் 
சுடர்ப் பூண் – ஒளியை உடைய அணிகலன்கள் 
சேஎய் – முருகன் 
ஒன்னார்க்கு - பகைவர்களுக்கு 
ஏந்திய – கையில் ஏந்திய 
இலங்கு இலை – விளங்குகின்ற இலைகளை உடைய 
எஃகின்- வேலினைப் போல 
மின் மயங்கு கருவிய- மின்னலும், இடியும் கலந்த தொகுதிகளையுடைய 
கல் மிசைப் – மலை மீது 
பொழிந்தென – பொழிந்ததால்.

பாடலின் பொருள்

வானத்தில் பறக்கும் பறவைகள் மரவிழுதுகளில் உள்ள தங்கள் கூடுகளுக்குச் செல்ல, நீர் நிறைந்திருக்கின்ற பெரியதான கடல் குறைந்து போகுமாறு நீரினை அள்ளிக் கொண்டு போய் அகன்ற வானத்தில் கலந்து பரவி, காற்று வீசுவதினால் முரசு அதிர்ந்து ஒலிப்பதுபோல் இனிய குரலை உடைய இடியுடன் சேர்ந்து ஒழுங்குடன் வரிசையாக மேலே செல்லும் மேகம்,

இனிய ஒலி தரும் முரசும், ஒளிதரும் அணிகலன்களும் கொண்டிருக்கும் முருகன் பகைவர்களைக் கொல்வதற்காகக் கையில் வைத்திருக்கும் இலையை உடைய வேல் எனும் ஆயுதத்தைப் போன்று ஒளியுடன் இடி இடித்து மின்னல் மின்ன மலையின் மேல் பொழிந்தது.

எளிய வரிகள்

வானில் பாடித் திரியும் பறவைகள்
மரவிழுதில் உள்ள கூடுசேரும் நேரம், 
வற்றாக் கடல் நீர் குறைந்திடும்படி 
நீரை அள்ளிப்போய் நீள்வானில் பரவி,

காற்று வீசிட முரசு அதிர்ந்து இனிய 
ஓசையுடன் ஒலிப்பது போன்று 
இடியுடன் இணைந்து வரிசையாக 
மேலே செல்கின்றது மேகம்.

இனிய இசை தரும் முரசு, ஒளி வீசும் 
அணிகலன்கள் அணிந்திருக்கும் முருகன் 
பகைவர்களைக் கொல்லக் கையில் 
வைத்திருக்கும் இலையை உடைய 
வேலினைப் போல ஒளி கொண்டு 
இடி இடித்து மின்னல் மின்ன 
மலையில் மேல் பொழிந்தது.

முருகன் தமிழர்களின் மூதாதையர் என்ற கருத்தை உறுதிப்படுத்த வேண்டின், முன்னோர் வழிபாடு என்பது காலந்தோறும் தமிழன் வாழ்வில் உள்ள ஒன்று. அனைவரும் அறிந்த நடுகல் வணக்கமும் இதை ஒத்த ஒன்றுதான். அவ்வழக்கத்தை,

காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் 
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று 
இருமூன்று மறபிற் கல்லொடு புணர. (தொல்.புறம்)  

என்று நடுகல் வைத்து வழிபடும் முறையைத் தொல்காப்பியம் சொல்லியுள்ளது. ஆதிமனிதனின் வாழ்வைச் சொல்லும் சங்க இலக்கியமும், இலக்கண நூலான தொல்காப்பியமும் முருகனைப் பற்றித் தெளிவான குறிப்புகளைத் தமிழ் வரலாற்றில் பதிவு செய்துள்ளன

முருகன் என்றால் வீரமிக்கவன், சீற்றமுடையவன், வலிமையுடையவன் எனும் பொருளையே சங்கப் பாடல்கள் தருகின்றது. முருகன் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவன். அவன் நினைவை, முன்னோரின் பெருமைகளைப் போற்றும் விதமாகப் பல வழிபாடுகள் செய்தனர். அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் முருகனின் வீரச்செயல்களை இலக்கியங்களின் வழிப் பதிவு செய்தனர். அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அவர்கள் வாழும் நிலத்திற்குரியவனாகக் கொண்டாடி முருகனை வணங்கி வழிபாடு செய்தனர்.

குறிஞ்சிப்பாடலில் முருகனை உவமைப்படுத்தியது போலவே சங்கப்பாடல்களில் பல இடங்களில் முருகனின் வீரமும், ஆற்றமும் பல பாடல்களில் குறிப்புகளும் காணப்படுகின்றது.  

நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன் தலைப் 
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு 
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் – “முருகனின் சீற்றத்தைப் போன்று” 
எந்தையும் இல்லன் ஆக, 
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?  (அகநானூறு -158)

ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந்தானை 
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ 
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப – முருகனைப் போன்ற/ ஒத்த 
ஆஅய் எயினன் வீழ்ந்தென், (அகநானூறு – 181)

முருகன் சீற்றத் துருகெழு குறிசி – முருகனின் சீற்றத்து 
தாய் வயிற்றிருந்து தாயமெய்தி… (பொருநர் ஆற்றுப்படை 131-132)

புலவு வாள் புலர் சாந்தின் 
முருகன் சீற்றத்து உருகெழு குருசில் (புறநானூறு -16)

வண்டுபடத் ததைந்த தண்ணி ஒண்கழல் 
உருவக் குதிரை மழவர் ஒட்டிய 
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி, 
அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண், (அகம்-1)

எனும் பாடல் முருகன் போரில் சிறந்தவன், வலிமையுடையவன் என்று சொல்கிறது. முருகன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலம் பற்றி அறியச் சங்கப் பாடல்களையே தரவுகளாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆதித் தமிழனோடு வாழ்ந்த முருகனின் வாழ்முறையை அதன் உண்மைத்தன்மை மாறாதவாறு சொல்லும் சங்கப் பாடல் தமிழின் முத்து; கபிலர் சொன்ன முருகன் தமிழனின் சொத்து.

                                                                 கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : சூரியன் சுடும் மாலைநேரம்
 

​​​​​​A1TamilNews