ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                               நாய்கள் ஜாக்கிரதை

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? நாய்கள் ஜாக்கிரதை

காட்டு விலங்குகள் மனிதனின் தேவைக்காகவும், பல்வேறு பயன்பாட்டிற்காவும் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது வரலாறு. ஒவ்வொன்றின் சிறப்புத் தன்மையைத் தெளிவாக அறிந்து, ஆராய்ந்து, அதனதன் திறமைக்கேற்றபடிப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அப்படி வந்த விலங்குகளில் மனிதனுக்கு மிக நெருக்கமாகவும், அன்றாட வாழ்க்கையின் செயல்பாட்டில் பங்குபெறுவது ஆடு, மாடு, பூனை, நாய் ஆகிய சில விலங்குகள் மட்டுமே. அதில் நாய்கள் கூடுதலான பங்களிப்பையும், நாய் வளர்ப்பு என்பதன் தேவைகள் பலவிதமானதாகவும் மாறிப்போனது. செல்லப் பிராணி, காவல், நாய்களுக்காக அழகு மற்றும் திறன் போட்டிகள் என்ற வகையில் வேட்டைக்காகவும் நாய்கள் சங்ககாலம் முதல் இன்று வரை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய வாழ்வில் நாய்கள் வளர்ப்பு என்பது பெரும் வியாபாரச் சந்தையாக மாறிப் போயிருக்கின்றது. உணவு, உடை, விளையாட்டுப்பொருள்க, காப்பகங்கள், அழகுநிலையங்கள், விளையாட்டுப் பூங்காக்கள் எனப் பல்வேறு தொழில் சார்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டு வியாபாரமயமாகிப் போனது நாய்கள் வளர்ப்பு. பலவகையான நாய் இனங்கள் வளர்ப்புக்காகக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனிக் குணங்கள் கொண்டவை. அவரவர் ஆசைக்கேற்பத் தேர்ந்தெடுத்து வளர்த்திடும் வாய்ப்புக் கிடைக்கின்றது. சில நேரங்களில் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு உதவிடும் “guard dog” ஆகவும் செயல்படுவது சிறப்பான பங்கு, பாராட்டுக்குரியது.

தன்னை வளர்ப்பவர்களுக்கு நன்றியும், அன்பும், காவலும் அளவில்லாமல் தருவது நாய்களுக்கு நிகர் நாய்களே. வளர்ப்பவரைக் காத்திடத் தன்னுயிரைத் தந்திடும் அன்பு எங்கும், எளிதில், யாரிடத்திலும் கிடைத்திடாத ஒன்று. பேச மட்டும்தான் தெரியாது. பேசத் தெரிந்திருந்தால் மனித ஆற்றலையும், திறமையையும் விட மிகச் சிறப்பானதாக இருந்திருக்கும். காவல்துறை தொடங்கி பல தொழில்களின் பெரும்துணையாக, ஆற்றல்மிகு சக்தியாக விளங்குகின்றன நாய்கள். அன்று முதல் இன்று வரை வேட்டை நாய்கள் என்றதும் ஒரு அச்சத்தை உருவாக்கும். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவை வேட்டைக்காகவே வளர்த்து, பயிற்சியளித்துத் தயார் செய்யப்படுகின்றன.

வேட்டைக்குத் தயாரான நாய் ஒன்றைச் சமாளிப்பது என்பது முடியாத செயல். அதுவே வேட்டைக்குள் இறக்கிவிடப்பட்ட நாய்கள் குழுவாகச் சேர்ந்து வந்தால் யாரும் பயமின்றி இருக்க முடியாது. அதுவும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் வந்த வேட்டை நாய்களைப் பற்றிச் சொன்ன குறிப்புகள் பெரும் அச்சத்தைப் படிக்கும் போதே உருவாக்குகின்றது. பெரிய வேல்படையை வைத்திருக்கும் இளைஞனின் வீரத்தை உவமைப்படுத்திக் கபிலர் சொன்னதைக் கொண்டு புரிந்து கொள்வது அன்பைக் கொட்டி, கொஞ்சி வளர்த்தாலும் “நாய்கள் ஜாக்கிரதை”.

இமைக்காத கண்கள்

முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்,  
பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின், 
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் 
முனை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி, 
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர. (128-132)

அருஞ்சொற்பொருள்

முனை - பகைவர்களை/பகைவர்களின் வலிமையை, நாட்டை 
பாழ் – அழிவு, படுக்கும் – வீழச் செய்யும் - பாழ்படுத்தும் 
துன் - நெருங்குவதற்கு 
அரும் - அரிய 
துப்பின் - வலிமையுடன்  
பகை - பகைவர்கள் 
புறம் – புறமுகிட்டுப் போவதை 
கண்ட - பார்த்த 
பல்வேல் – பல கூர்மையான கருவிகளை உடைய 
இளைஞரின் - இளைஞரின் 
உரவுச்சினம் – கடும் கோவத்தினால் 
செருக்கி – செருக்குக் கொண்டு 
துன்னு - நெருங்கும் 
தொறும் –போதெல்லாம் 
வெகுளும் – கோபம் கொள்ளும் 
முளை வாள் – மூங்கிலைப் போன்ற ஒளியுடைய, மூங்கில் முளையைப் போன்ற   
எயிற்ற - பற்களுடன் 
வள் உகிர் – கூர்மையான நகம் 
ஞமலி - நாய் 
திளையாக் கண்ண – இமைக்காத கண்கள் 
வளைகுபு - சூழ்ந்து 
நெரிதர – நெருங்க

பாடலின் பொருள்

பகைவர்களின் நாட்டினை அழித்துப் பாழ்படுத்தும், யாரும் பக்கத்தில் நெருங்க முடியாத வலிமையுடன் விளங்கும் அரிய போர்த்திறம் உடையவன், பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த வேல்படையைக் கொண்ட இளமையான வீரர்கள்,  கோபத்தினால் செருக்குக் கொண்டு அவனிடம் பக்கத்தில் செல்கின்ற நேரமெல்லாம் கோபம் கொள்ளும் இயல்பினைப் போல, வெண்மையான பற்களையும், கூர்மையான நகங்களையும் உடைய நாய்கள் கண்களை இமைக்காமல் எங்களைச் சூழ்ந்து கொண்டு நெருங்கி வந்தன.

எளிய வரிகள்

எதிரிகளின் நாட்டினை அழிக்கும் 
தன் எதிரில் யாரும் எதிர்த்து 
நிற்கமுடியாத வலிமையும் 

போர்த்திறமும் நிறைந்தவன், 
எதிரியைப் புறமுதுகிடச் செய்யும் 
வேல்படை கொண்ட இளம் வீரர்கள் 
கோபத்தில் செருக்குற்ற பொழுது 
அருகில் சென்றால் கோபப்படும் 
இயல்பு கொண்டவன் போல, 

வெண்ணிறப் பற்களோடும், 
கூர்மையான நகங்களோடும் 
கண்களை இமைக்காது நாய்கள் 
எங்களைச் சுற்றிச் சூழ்ந்து 
நெருங்கி வந்தன.

ஆணழகன் பேசினான்

நடுங்குவனம் எழுந்து நல்லடி தளர்ந்து யாம் 
இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர 
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறுபுலத்து 
ஆகாண் விடையின் அணிபெற வந்தெம் 
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி 
மெல்லிய இனிய மேவரக் கிளந்தெம் 
ஐம்பால் ஆய்கவின் ஏத்தி ஒண்தொடி 
அசைமென் சாயல் அவ்வாங் குந்தி 
மடமதர் மழைக்கண் இளையீர் இறந்த 
கெடுதியும் உடையேன் என்றனன் (133-142)

அருஞ்சொற்பொருள்

நடுங்குவனம் - நடுங்கினோம் 
எழுந்து - எழுந்து 
நல்லடி தளர்ந்து – நடை தளர்ந்து 
யாம் - நாங்கள் 
இடும்பை - துன்பம் 
கூர் – மிகுதி கொண்ட 
மனத்தேம் – உள்ளம் கொண்டவர்களாக 
மருண்டு - கலங்கி 
புலம் படர – இடத்தைவிட்டு நகர்ந்து 
மாறு பொருது ஓட்டிய – பகைவரோடு போரிட்டு விரட்டிய 
புகல்வின் – செருக்கு மிக்க 
வேறுபுலத்து- வேறு நிலத்து 
ஆ காண் – பசுவினைக் கண்ட 
விடையின் - காளையின் 
அணிபெற வந்தெம் – அழகாக வந்து எங்கள் 
அலமரல் - மனவருத்தம் 
ஆயிடை – அந்த வேளையில் 
வெரூஉதல் அஞ்சி – அஞ்சுவதற்கு அஞ்சி 
மெல்லிய - மென்மையான 
இனிய - இனிமையான 
மேவரக் கிளந்து – பொருந்தமாறு கூறி 
எம் ஐம்பால் – எங்களுடைய ஐந்துவிதமாகப் பின்னிய கூந்தலை 
ஆய்கவின் – ஆராய்ந்த அழகு 
ஏத்தி – புகழ்ந்து 
ஒண்தொடி – ஒளி கொண்ட வளையல்கள் 
அசை - அசைகின்ற 
மென் - மென்மையான 
சாயல் - சாயல் 
அவ்வாங்கு உந்தி – அழகிய வளைந்த கொப்பு 
மடமதர் – அறியாமை மிகுந்த 
மழைக்கண் – ஈரமுடைய கண்கள் 
இளையீர் - இளையவர்களே 
இறந்த – தப்பிப் போன 
கெடுதியும் – வேட்டையாடிய விலங்கினை 
உடையேன் - உடையவன் 
என்றனன் - என்றான்

பாடலின் பொருள்

நாய்கள் அருகில் வந்தததும் நாங்கள் நடுங்கினோம். அந்த இடத்தை விட்டு வேகமாகச் செல்ல முடியாதபடி நடை தடுமாறியதால் துன்பமும், வருத்தமும் மிகுந்தவர்களாகி வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றோம். வேற்று நிலத்துப் பசுக்களைக் கண்ட காளையைப் போல அழகுடன் வந்தான். நாங்கள் பயந்து மனம் கலங்கி நின்ற வேளையில், நாங்கள் பயப்படுவதைக் கண்டு தானும் பயந்தவனாகக் காட்டிக் கொண்டு, மென்மையும், இனிமையும் நிறைந்த சொற்களைச் சொல்லி எங்கள் அனைவரின் பயத்தைப் போக்கினான். பின்னர் ஐந்தாகப் பிரித்துப் பின்னப்பட்டிருந்த கூந்தலைப் பார்த்து பாராட்டுச் சொன்னான்.

ஒளி பொருந்திய வளையல்களையும், அசைந்து நளினமாய் நடக்கும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், குளுமை நிறைந்த கண்களையும் உடைய பெண்களே, நான் வேட்டையாடிப் பிடித்த விலங்குகள் தப்பிப் போய்விட்ட நிலையில் உள்ளேன், என்று கூறினான்.

எளிய வரிகள்

நாய்கள் பக்கம் வந்ததும் 
பயத்தில் நடுங்கினோம், 
நடை தடுமாறியது 
துன்பம் அதிகமானது 
மெதுவாக நகர்ந்தோம் 
வேறிடம் சென்றோம்.

வேறு நிலப் பசுவைப் பார்த்த 
காளையென அழக்அன் வந்தான். 
பயந்து நின்ற எங்களிடம் 
பயந்தவனாய் நடித்தான்.

மெதுவாக, அன்பாகப் பேசி 
பயத்தைப் போக்கினான்.
கூந்தல் அழகைச் சொல்லி 
பாராட்டிச் சொன்னான்.

வளையல் அழகும் 
நளினமான நடையும் 
குளிர்ந்த கண்களையும் 
கொண்ட பெண்களே,
நான் வேட்டையாடிப் பிடித்த
விலங்குகள் தப்பி விட்டன
என வருந்திச் சொன்னான்.

வேட்டை நாய்களைக் கண்டு பயந்து, நடுங்கிப் போயிருந்த பெண்களின் திக் திக் நிமிடங்கள் தந்து விட்டுப் போன பயம் கலைந்து, கலைத்து தலைவனுக்குப் பதில் சொன்னார்களா? சொல்வார்களா? என்ன நடக்கும்? காதல் கதையில் நாய்களின் வருகை காதலுக்கு நல்குரவா? நல்வரவா?.

                                                                                                      கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : ஆணழகே பேரழகே  

A1TamilNews