ஓவியர் மருதுவின் தூரிகையில்
                காதல் கதை சொல்லட்டுமா?
                    
பூப்பூப்பூ பூப்பூத்த சோலை

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? பூப்பூப்பூ பூப்பூத்த சோலை

காதலைச் சொல்ல
காதல் மட்டும் போதும்.
ஏனெனில்
காதல் என்பது நம்பிக்கை.
காதலைச் சொல்ல 
காதல் மட்டுமே போதும்.

காதலெனும் நம்பிக்கையை அவனுடைய தன்னம்பிக்கையோடு சேர்த்துக் காதலை அவளிடம் சொல்லிவிட்டான் அவன். அவளுக்குள்ளும் காதல் பயணம் செய்யத் தொடங்கியதை அறிந்து கொண்டவன் எதிர்கால வாழ்வினைப் பற்றிய கனவினை, அவளோடு வாழ நினைத்த வாழ்வினைப் பற்றிய எண்ணங்களைக் கிடைத்த வாய்ப்பில் காதலியிடம் பகிர்ந்து கொள்கின்றான். சங்க கால மனிதர்கள் வாழ்வில் காதலும், திருமணமும் ஆண், பெண் இருவரின் நம்பிக்கை சார்ந்து இருந்தது என்பதை இக்காதலர்கள் வழியே உணரமுடிகின்றது.

தனக்கான துணையின் தகுதிகளை மதிப்பிட்டுத் தேர்ந்தெடுப்பது தாய் வழிச்சமூகமாக வாழ்ந்த மரபில் வந்த பெண்களின் தனித்திறன். அவ்வழி வந்த பெண்ணின் காதலை வென்று, அவளைத் தன் பேரன்பில் நிறைத்துக் கொண்டிருந்தான். மேலும் அவள் மனதில் நம்பிக்கையை ஆழப் பதிக்க எண்ணி உணர்வுவயப்பட்டவனாகி உறுதிமொழி எடுக்கின்றான். அவன் சொன்ன சொற்களும், பேசிய வேகமும், உடல்மொழியும் அவளுக்குள் பெரும் மாற்றத்தையும், அவன் மீதான காதலையும் அவளுக்கே உணர்த்தியது. உறுதிமொழி சொல்லிவிட்டு அருவி நீரைக் குடித்துச் சிறிது தன்னிலைக்கு வந்ததும் இவள் நிம்மதியானாள்.

இந்தக் காட்சி காதலுக்குப் புதியது அல்ல. வேறு சூழலில், வேறு சொற்களில் காதலர்களுக்குள் நடந்திருக்கும்;நடக்கும். எப்படியாவது தன் காதலை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும், தன் மீது அவளுக்கு நம்பிக்கை வரச் செய்யவேண்டும் எனத் தன்னுயிரை உருக்கி, உள்ளத்துள் நொறுங்கி, பதப்படுத்தாத ஆனால் பண்பட்ட சொற்களை வேகத்தடையின்றிக் காட்டாறு போலப் பொள்ளெனத் திறந்து கொட்டும் காதலன்கள் மாறவில்லை; மாறுவதும் இல்லை.

இயல்பாகவே எளிதில் உணர்வு வலைக்குள் சிக்கிவிடும் பெண்ணின் மனது, இப்படி ஒருவனைப் பார்த்து என்ன செய்யும்? எதையும் சிந்திக்காது காதல் சொல்வதைத் தவிர? காதல் சொல்லும் முன்னர் பல எண்ணப் போராட்டங்களைத் தனக்குள் நிகழ்த்திச் சரியா? தவறா? என முடிவு செய்யும் வல்லமையும் பெண்ணுக்கு உண்டு. அதுதான் ஆணுக்கு ஒருவிதமான அலைக்கழிப்பையும், தவிப்பையும் தந்து காதல் சொல்லப் போராளியாக மாற்றிவிடுகின்றது. அத்தனை தடைகளைத் தாண்டியும் காதல் வெற்றி பெறும் என்பதே கபிலர் காட்டும் காதல் காட்சிகள்.

“நீ ஒரு காதல் சங்கீதம், வாய் மொழி சொன்னால் தெய்வீகம்” எனப் பாடி இல்லற வாழ்வைத் தொடங்கி, இல்லறமாகிய நல்லறம் நடத்தப்போகும் ஆசையில் அவளோடு பேசுகின்றான். விருந்தினருக்கும், உறவினருக்கும், சான்றோருக்கும், ஆதரவற்றோருக்கும் மற்றும் உணவு தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாது உணவளித்து, உபசரிக்கும் நம் வீட்டின் கதவுகள் மூடக்கூடாது. அனைவரும் வந்து பசியாறிய பின்னர் மீதமிருக்கும் உணவினை இருவரும் பகிர்ந்து உண்டு, இருவரும் சரிசமமாக வாழ்வைப் பகுத்து, பண்படுத்தி வாழவேண்டும் என்று சொல்கின்றான்.

இந்தப் பாடலில், திருமண வாழ்வில் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார் கபிலர். தேர்வு செய்த சொற்கள், நேர்த்தியான கருத்தமைவு இரண்டும் சமத்துவம் சொல்பவை.  “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை; ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை” என்பதற்கேற்ப, ஓய்வில்லாது அடுப்பங்கரை தீய்த்தெரிக்கும் குடும்ப விளக்கிற்குத் திரிகளாகப் பெண்ணை அன்றைய ஆண் நினைக்கவில்லை. என்னோடு வா, நானும் நீயும் இல்லறம் செய்வோம். சேர்ந்து வாழ்வோம். பகிர்ந்து உண்போம். உன்னோடு நானிருப்பேன் ஒவ்வொரு மணித்துளியும் உறுதுணையாக என்று சொல்லும் ஆணுடன் வாழ்தல் நல்லறம்.

பெரிய நெற்றிக்காரன் சொன்னான்.

எம் விழைதரு பெரு விறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,
“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப 
மலரத் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் 
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, 
நின்னோடு உண்டலும் புரைவது” என்று ஆங்கு 
அறம் புணை ஆகத் தேற்றி, (199-208)

அருஞ்சொற்பொருள்

விழைதரு – விரும்பக் கூடிய
பெரு விறல் – பெரிய வெற்றியைக் கொண்ட, விறல்- வெற்றி 
உள்ளத் தன்மை – உள்ளத்தின் தன்மை 
உள்ளினன் கொண்டு - எண்ணிக்கொண்டு 
சாறு அயர்ந்தன்ன – விழாக் கொண்டாடியது போல 
மிடாஅச் சொன்றி – பெரிய பானைச் சோறு 
வருநர்க்கு வரையா – வருபவர்களுக்கு எல்லை இல்லாமல் 
வள நகர் பொற்ப – வளம் பொருந்திய பொலிவான வீடு 
மலரத் திறந்த வாயில் – அகலமாகத் திறந்திருக்கும் வாசல் 
பலர் உண – பலர் உண்ண
பைந்நிணம் ஒழுகிய – பசுமையான கொழுப்பு வடியும் 
நெய்ம் மலி அடிசில் – நெய் நிறைந்திருக்கும் சோறு 
வசை இல் - குற்றம் இல்லாத 
வான் திணைப் புரையோர் – உயர்ந்த குடியில் இருக்கும் உயர்ந்தோர், 
(வான் உயர்ந்த, புரையோர்- உயர்ந்தோர்)
கடும்பொடு – உறவினர்களுடன்
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – விருந்து உணவு உண்டபின்னர் மிஞ்சி இருப்பது
பெருந்தகை – சிறப்பான தகுதி உடையவளே 
நின்னோடு உண்டலும் – உன்னோடு உண்ணுதல் 
புரைவது என்று ஆங்கு – உயர்ந்தது என்று அங்கு, (புரைவது- உயர்ந்தது) 
அறம் புணை ஆகத் தேற்றி- அறமுடைய இல்லற வாழ்வு தங்களுக்குப் பாடமாக/உதவியாக இருக்கும்  என்று ஆறுதல் சொல்லி

பாடலின் பொருள்

தலைவியை விரும்புகின்ற பெரிய நெற்றியை உடைய தலைவன், அவளும் தன்னைக் காதலிக்கின்றாள் என்ற குறிப்பினை உணர்ந்து கொண்டு இல்லற வாழ்வினைப் பற்றி நினைத்தான். “பெரிய தகுதியை உடையவளே! விழாக் கொண்டாடுவது போலப் பெரிய பானையில் சோறு சமைத்து, இல்லை என்று சொல்லாமல் வருபவர்களுக்கு உணவளித்து, செல்வம் நிறைந்த வீடு மேலும் பொலிவு பெறுமாறு அகலத் திறந்திருக்கும் வாசலுடன் பலரும் உண்ணும்படி, பசுமையான கொழுப்புடன், ஒழுகுகின்ற நெய் நிறைந்த சோற்றினைக் குற்றம் இல்லாத சான்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த பின்னர் மீதி இருக்கும் உணவை உன்னுடன் நான் பகிர்ந்து உண்பது உயர்ந்த ஒன்று” என்று இல்லறமாகிய நல்லறம் என்ற இல்வாழ்க்கை நம்மைச் சேர்த்து வைக்கும் என்று கூறினான்.

எளிய வரிகள்

அவள் குறிப்பால் காதல் சொன்னதைப்
பெரிய நெற்றிக்காரன் உணர்ந்து
திருமண வாழ்வினை எண்ணிப்
பல கனவுகள் மின்னின கண்களில்.
பின்னர் அவளை அணைத்துச் சொன்னான்

பெரிய தகுதி உடையவளே!
திருவிழாக் காலம் போல பானையில்
சோறாக்கி, வந்தோர்க்கு உணவளிப்போம்.
இல்லை என்று சொல்லாமல்.

செல்வம் நிறைந்த வீடு மேலும் சிறப்புற
மூடாத கதவுடைய வாசல் வைக்கப்
பலர் வந்து பசியாற உண்டு மகிழ்வர்.

நெய் வழியும் சோறு நீ தருவதினால்
சான்றோரும், உறவினரும் பசிதீர
உண்டபின்னர் இருக்கும் மீதமுள்ள
உணவை நீயும், நானும் பகிர்ந்து
உண்பது உயர்ந்த செயல் அன்பே!
இல்லறமாகிய நல்லறம் இனிதே
நம்மைச் சேர்த்து வைக்கும்.

பூக்கள் பூத்த சோலை

பிறங்கு மலை 
மீ மிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி,
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அப்பகல் கழிப்பி (208-214)

அருஞ்சொற்பொருள்

பிறங்கு மலை மீ மிசைக் – உயர்ந்த மலை உச்சியியின் மேல், (மீ- உயர்ச்சி, மிசை – மேல்)
கடவுள் வாழ்த்தி – கடவுளை வாழ்த்தி 
கைதொழுது- கையால் வணங்கி 
ஏமுறு வஞ்சினம் – இன்பம் அடைவதற்காகச் சூளுரைத்து (வஞ்சினம்- சூளுரை,சபதம்) 
வாய்மையின் தேற்றி -உண்மையைச் சொல்லி 
அம் தீம் தெள் நீர் – அழகிய இனிமையுடைய தெளிந்த நீர் 
குடித்தலின் – குடித்ததினால் 
நெஞ்சமர்ந்து – மனம் அமைதி கொண்டது 
அரு விடர் அமைந்த – அரிய காட்டில் பொருந்திய, (விடர்- காடு) 
களிறு தரு புணர்ச்சி – களிற்று யானையால் சேர்ந்த 
வான் உரி உறையுள் – வானத்தை உரிய இடமாகக் கொண்டு வாழும் 
வயங்கியோர் அவாவும் – தேவர்கள் விரும்பும் 
பூ மலி சோலை – பூக்கள் நிறைந்த சோலையில் 
அப்பகல் கழிப்பி – அந்தப் பகலைக் கழித்து, போக்கி.

பாடலின் பொருள்

உயரமான மலையின் உச்சியின் மீது வாழும் முருகக் கடவுளைக் கையால் வாழ்த்தி, வணங்கித் தலைவி இன்பம் அடைவதற்குக் காரணமான உறுதிமொழிகளைச் சொல்லி உண்மை எனத் தெளிவுபடுத்திப் பின், அந்த மலையில் இருக்கும் தெளிவான அருவி நீரை அவன் குடித்ததினால் அவள் மனம் அமைதி கொண்டாள். வானத்தை வாழிடமாகக் கொண்ட தேவர்கள் விரும்பும் பூக்கள் பூத்திருக்கும் சோலையில், அரிய காட்டில் இருக்கும் களிற்று யானையால் சேர்ந்த அவர்கள் இருவரும் அன்றைய பகலைப் போக்கினர்.

எளிய வரிகள்

மலை உச்சியில் வாழும் முருகனை 
வாழ்த்தி வணங்கினான்.

தலைவி இன்புறக் காரணமான
உறுதிமொழியை உண்மை சொல்லி
ம்மலையின் தெளிவான அருவிநீரை 
அவன் குடித்தான், 
மனம் அமைதி கொண்டாள் அவள்.

வானில் வாழும் தேவர்கள் ஆசைப்படும்
பூக்கள் பூத்த சோலையில், 
காட்டில் வாழும் களிற்று யானையால் 
சேர்ந்த இருவரும் அந்தப் பகலினைக் 
கழித்தனர்

யானை அவளைத் துரத்த, இவள் ஓட, அவன் காப்பாற்ற ஒருவழியாக இருவருக்கும் காதல் உருவான மலையின் உச்சியில் இருக்கும் தன் முன்னோரான தமிழ்க்கடவுள் முருகனை வணங்கி உறுதிமொழி சொன்னதும், அவள் உள்ளம் நெகிழ்ந்து காதல் மலர்கின்றது. காதலின் வெற்றிக்குக் காரணம் யானை பாதி;முருகன் பாதி.

அவள் பின்னால் அலைந்து திரிந்து, அன்பைச் சொல்லி, காதலைப் பெற்றுவிட்டான். காதலியை வென்றுவிட்டான். பூக்கள் பூத்துச் செழித்திருக்கும் எழில்மிகுந்த அந்தக் காட்டில் பகல் பொழுது முழுவதும் காதல் செய்தனர். காதல் சொல்லவும், காதல் செய்யவும் தகுந்த இடம் பூப்பூத்திருக்கும் சோலையைவிட வேறு உண்டா? இனி என்ன? கைகள் இணைத்து, அருவியில் நனைந்து, ஆசையில் நுழைந்து உள்ளங்கள் பாடும் பாடல் ஓசை காடெங்கும் ஒலிக்கச் செய்யும் பூப்பூப்பூத்த சோலை.

பூப்பூப்பூ பூப்பூத்த சோலை
பூப்பூப்பூ பூமாதுளை
             
பூப்பூப்பூ புல்லாங்குழல்
             
பூப்பூப்பூ பூவின் மடல்

பூப்பூப்பூ பூவை மணம்
பூப்பூப்பூ பூங்காவனம் 
             
பூப்பூப்பூ பூஜை தினம்
            
பூப்பூப்பூ புதிய சுகம் பொழிந்திடும்

                                                                                                                                                                                                                   கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : கள் குடித்த(தா) மயில்?