ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா 
                சூரியன் சுடும் மாலைநேரம்

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா  
                சூரியன் சுடும் மாலைநேரம்

தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழின வரலாறு பின்னாளில் மாற்றி, மழுங்கடிக்கப்பட்டுப் பெண்ணை வீட்டுப் பொருளாக, வீடுகளுக்குள் மட்டுமே செயலாற்றச் செய்தது. அப்படி மாற்றியமைத்த வரலாற்றைத் திருத்தி அமைக்க எண்ணற்ற சமூக ஆர்வலர்கள் உழைத்துப் பெற்றதுதான் இன்றைய பெண் முன்னேற்றமும், பெண் விடுதலையும். பல போராட்டங்களுக்குப் பின்னர் வீடு தொடங்கி நாட்டின் பல்வேறு பொறுப்புகள் வரை செயல்படும் பெண்களின் முன்னோடியாக இருந்தவள் சங்கப்பெண். எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும், எந்தச் சூழ்நிலைகளையும் கையாளும் திறனும், புத்திக் கூர்மையும் இயல்பாகப் பெற்றவள் பெண். ஆனால், வாரிசு உரிமையும், ஆணாதிக்கச் சமூகமும் தலையெடுக்கத் தொடங்கியதும் பெண்ணுடைய வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அவளுக்கெனத் தனி வேலைகள் ஒதுக்கப்பட்டது, இப்படித்தான் இயங்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நடக்க, அமர்ந்திட, கல்வி கற்றல் முதலாக உடை அணிந்திடும் முறைவரை பல்வேறு வழிகளில் அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டது. தெரிந்தும், தெரியாமலும் திணிக்கப்பட்ட அந்த முறைகள் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு அடிமை வாழ்வு பெண்களுக்குப் பழக்கப்பட்டது. அப்படிப் பாழ்படுத்திய சிக்கல்களைப் பல புரட்சிகள் வழியாக ஒவ்வொன்றாகக் கலைந்து பெண்ணினம் மீண்டு வந்தது வரலாறு.

அந்த வரலாற்றைப் படித்தும், பலர் பேசுவதன் வழியாகவும் அறிவது போலத்தான், பெண் எப்படி வாழ்ந்தாள்? நம் முன்னோள் யார்? என்று அறிந்து கொள்வது அவசியம். பெண்ணின் சிறப்பினை, வியக்கத்த ஆற்றலைப் பல இலக்கியங்கள் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. அவற்றை அறிந்து அடையாளம் கண்டு கொள்ளச் சிறிது பெண்மீது அக்கறையும்,

“ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்பதை எண்ணங்களில் விதைப்பதும் மட்டுமே போதுமானது.

அன்றைய புலவர்கள் பெண்ணை அழகுபடுத்திக் கவிதைகளில் சொன்னதோடு மட்டுமல்லாமல், அவளின் உண்மைத் தன்மையை, அவளின் வாழ்நிலையின் இயல்புநிலைகளைச் சொல்லவும் தவறியதில்லை. தமிழனின் வாழ்வின் பெரும் அடையாளமாகவும், அடித்தளமாகவும் கொண்டாடப்படும் சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்பதைக் காலம் கடந்தும் உணர்த்துபவை. அதன்வழியே குறிஞ்சிப்பாட்டில், பெண் ஆளுமைத்திறன் மிகுந்தவளாக வாழ்ந்துள்ளாள் என்று உணர்ந்து கொள்ளக்கூடிய குறிப்பினைக் கபிலர் தந்துள்ளார்.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

தினைப்புலம் காவல் காத்தல்

கலி கெழு மரம் மிசைச் சேணோன் இழைத்த, 
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண
சாரல் சூரல் தகை பெற வலந்த,
தழலும், தட்டையும் குளிறும், பிறவும்,
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவும் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து, (40-45)                                                     

அருஞ்சொற்பொருள்

கலி – ஆரவாரம்
கெழு – நிறைந்த/மிகுந்த 
மரம் மிசை – மரத்தின் மேல், மரத்தில் உச்சியில் 
சேணோன் இழைத்த – காவல் செய்பவன் தினைப்புனத்தில் அமைக்கப்பட்ட பரண் 
(சேண்- பரண்), (இழைத்த – உண்டாக்கிய, அமைத்த)
புலி அஞ்சு – புலியைக் கண்டு பயந்து
இதணம் ஏறி – பரண்மேல் ஏறி, இதண் - பரண்
அவண – அங்கே, அந்த இடத்தில், அவ்விடத்தன
சாரல் - மலைச்சரிவு
சூரல் – பிரம்பு, பிரம்பினால்
தகை பெற - அழகுடன்
வலந்த- கட்டிய, பின்னப்பட்டிருக்கும்
தழலும்- தழல் என்னும் கருவியும்
தட்டையும்- தட்டை என்னும் கருவியும்
குளிறும் – குளிர் என்ற கருவியும்
பிறவும்- பிறவற்றையும்
கிளி கடி – கிளியை விரட்டும்
மரபின் - முறையின்படி
ஊழ் ஊழ் – முறை முறையாக
வாங்கி – கையில் இழுத்து, கையில் வைத்து
உரவுக் கதிர் – ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள், சூரியனின் வெப்பக் கதிர்கள்
தெறூஉம் – காயும், சுடும்
உருப்பு – வெப்பம்,
அவிர் - ஒளியுடைய
அமயத்து- வேளையின். பொழுதில்,நேரத்தில்

பாடலின் பொருள்

பறவைகளின் ஒலி பேரொலியாகக் கேட்கும் மரத்தின் உச்சியில், புலிகள் வந்தால் காத்துக் கொள்வதற்காக, தினைக்காட்டினைக் காவல் செய்பவன் அமைத்த பரண் மீது ஏறி அமர்ந்து கொண்டோம். அங்குள்ள மலைச்சரிவுகளில் உள்ள பிரம்பினால் அழகாகச் செய்யப்பட்ட தழல், குளிர் போன்ற மற்றும் சில கருவிகள் என அனைத்தையும் கொண்டு கிளிகளை விரட்டும் வேலையைச் செய்து கொண்டு இருந்தோம், சூரியன் வெப்பம் அதிகமாகச் சுடும் அந்த மாலை வேளையில்.

எளிய வரிகள்

பறவைகள் பேரொலி எழுப்பும்
மரத்தின் உச்சியில் பரண் செய்தான், 
தினைக்காடு காவல் செய்பவன் 
புலிகள் வந்தால் காத்துக் கொள்ள.

சூரியன் வெப்பம் சுடுகின்ற
அந்த மாலை நேரத்தில்,
மலைச்சரிவுகளில் கிடைத்த
பிரம்பில் அழகுறச் செய்த
தழல், குளிர் போன்ற கருவிகள்
கொண்டு கிளிகள் விரட்டினோம்
பரண் மீது உட்கார்ந்து கொண்டு.

அச்சம் தரும் இடம். சூழல். விலங்குகள் வந்து செல்லும் காடு. அறிந்தும் அஞ்சாத நெஞ்சத்தவளாக அந்தக் காட்டிற்குள் தோழிகளோடு செல்கின்றாள். புலிகள் வந்தால் தன்னைக் காத்துக் கொள்ளத் தினைக்காடு காவல் செய்பவன் அமைத்த மர உச்சியில் இருக்கும் பரணில் ஏறிப் பிரம்பினால் செய்யப்பட்ட கருவிகளால் ஒலி எழுப்பிக் கிளிகளை விரட்டுகின்றாள். பாடல் சொல்லும் செய்தி எளிதாக இருந்தாலும், ஒரு பெண் துணிவுடன் செயல்படுகின்றாள் என்பதுதான் குறிப்பு.

விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பரண் அமைத்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் காட்டிற்குள் பெண்களும் சென்று கிளி விரட்டும் வேலைகளில் ஈடுபட்டனர் என்பதுதான் பெண்ணின் உறுதியைச் சொல்லும் இடம். கிளி விரட்டுவதெல்லாம் பெரிய வீரச் செயலா? என்று தோன்றும்.  ஆம். வீரச் செயல்தான். ஆணும், பெண்ணுமாகச் சேர்ந்து தினைக்காடு காவல் செய்வதைச் செய்திருக்கின்றனர் என்ற செய்தி பாடலில் உள்ளதே அதற்குச் சான்று. இருவரும் சரிநிகர் சமானம் என்னும் உண்மை உள்பொதிந்த எளிமையான பாடல் இது.

உலக உயிர்களுக்கு உணவுதரும், உழுவார் உலக்த்திற்கு அச்சாணி என்று போற்றும் உழவுத் தொழில் சார்ந்த செயல்களில் ஒன்றான பயிர்களைக் காவல் காத்தல் பணியைச் செய்திடும் சங்கப் பெண் சான்றாகின்றாள் பெண் திண்மையானவள் என்று பெருமையுடன் கொண்டாட.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பமாகிடும் 
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள், ஆடு களி கொண்டே.

                                                                     கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : மூங்கில் நெல் அரிசி

A1TamilNews

From around the web