ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
காதலாடும் வண்டுகள்

காதலைக் காதலோடு சொல்லும் கபிலர் பெரும் காதல்காரன், இயற்கையின் காதலன், மாபெரும் இசை ரசிகன், உயிர்களை நேசிக்கும் அன்பன். பன்முக ஆற்றல்கள் நிறைந்த கவிதைக்காரன். சங்கத்தமிழன் வாழ்வைச் சொல்லும் பாடல்களில் எல்லாம் எண்ணற்ற வாழ்வியல் குறிப்புகளையும், சூழலியல் சார்ந்த தகவல்களையும் பதிவு செய்யதவன். எழுத்தாளன் அதுவும் கவிஞன் ஆவது என்பது அத்தனை எளிதல்ல என்ற எண்ணத்தையும், ஒரு கவிஞனின் அறிவு எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதையும் படிப்பவர் உள்ளத்தின் ஒவ்வொரு சொல்லிலும், பாடலிலும் தவறாமல் உணர்த்தும் பண்பினை உள்ளடக்கியவை கபிலரின் பாடல்கள்.
காதல் என்றால் காதலைப் பற்றிய அத்தனை உணர்வுகளையும் உள்வாங்கியிருப்பார். யார் பேசுவதாக எழுதுகின்றாரோ அந்த நபர் நேரில் எப்படிப் பேசுவார் என்பதைப்போன்று அப்படியே சொல்லியிருப்பார். இயற்கையைப் பேசினால் அந்தக் காட்சி கண்முன் நிற்கும். போர் குறித்த பாடல் என்றால் போர்க்களத்துக்கே நேரில் சென்றது போல் இருக்கும். எந்த உள்கருத்தை வைத்துப் பாடல் இடம் பெறுகின்றதோ, அதில் சிறு குறைபாடுகூட இல்லாத அளவிற்கு அதன் செய்தியை முழுமையாக்கத் தெரிந்த ஆற்றல் மிகு கவிஞன் கபிலர்.
காதலைக் கேட்டால் காதலை மட்டும் அல்ல, காதலோடு சேர்த்து கணக்கற்ற செய்திகளைத் தருவதில் நிகரில்லாக் கலைஞன். தான் வாழ்ந்த காலத்து வாழ்க்கை, வாழ்வியல் சூழல், மக்கள், இயற்கை, இசை, உணவு, உடை, மரம், செடி, கொடி, காடு, மலை, விலங்கு எனத் தொடங்கி சிறு வண்டுகளின் வாழ்வு வரை ஆழமானதொரு புரிதலையும், புதுவித அறிமுகத்தையும் அச்செய்திகளைப் பற்றி ஆழக் கற்றுணர்ந்து எழுதிவைத்ததே நமக்கான வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் உண்மைகள் தரும் சங்க இலக்கியங்கள்.
காதல் தோன்றுவதற்குரிய சூழலைச் சொல்லும் போது, அச்சூழலில் அந்த இருவரைச் சுற்றியும் அன்று நடந்த நிகழ்வுகள், இப்படிச் சொன்னால் சுவையாக இருக்கும் என்று உணர்ந்தவர், தான் முன்னரே அறிந்த இனிமையான காட்சிகளை இணைத்து அழகுபடுத்திக் காதலைக் காதல் நிறைத்துச் சொன்ன குறிஞ்சிப்பாடலில் வண்டுகள் காதலாடி மலர்கள் மீது சேரும் என்பதைச் சொல்லும் வரிகளில் காதல் கொள்ளாமல் இருக்க முடியாது.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
ஒரு வார்த்தை கேட்க…
அதன் எதிர்
சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கிக்
“கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறுபெற ஓச்சி,
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக (142-152)
அருஞ்சொற்பொருள்
அதன் எதிர் – அவன் பேசியதற்குப் பதில்
சொல்லேம் – பேசாமல் இருந்தோம்
ஆதலின் – ஆகையினால்
அல்லாந்து – ஏமாந்தவனாய் வருத்தம் கொண்டு
கலங்கிக் – மனம் கலக்கமுற்று
கெடுதியும் விடீஇர் – தப்பிச் சென்ற விலங்குகளைக் காட்டமாட்டீர்கள், விடீர்- விடைதாரீர்
ஆயின் - ஆயினும்
எம்மொடு -என்னுடன்
சொல்லலும் – பேசினால் கூட
பழியோ – பழி வருமோ
மெல்லியலீர் என – மென்மையானவர்களே என்று,
நைவளம் – நட்டபாடை/நட்டராகம் என்னும் பண் (ஒருவகைக் குறிஞ்சிப்பண்)
பழுநிய – முற்றுப் பெறுவது
பாலை வல்லோன் – பாலை யாழினை இயக்க வல்லவன்/தேர்ந்தவன்
கை கவர் நரம்பின் – கையில் கிடைத்த நரம்பினைப் போல
இம்மென இமிரும் – இம் என்னும் இசைஒலி ஏற்பட
மாதர் வண்டொடு -காதல் நிறைந்த பெண் வண்டுடன், மாதர்- காதல்,
சுரும்பு– ஆண் வண்டு
நயந்து – விரும்பி
இறுத்த – வந்து தங்கிய, இறுத்தல்- தங்குதல்
தாது அவிழ் – பூந்தாது அவிழ்ந்த
அலரித் தா சினை – மலர்கள் தழைத்து வளர்ந்த மரக்கிளை
பிளந்து – பிளந்து, முறித்து, ஒடித்து
தாறு அடு களிற்றின் – அங்குசம் குத்திய களிற்று யானையைப் போல
வீறுபெற ஓச்சிக் – வெற்றி பெறும்படி வீசி
கல்லென் சுற்ற – ஒலியுண்டாகக் குரைக்கும் நாய்கள்
கடுங்குரல் அவித்து – குரைத்தல் அடங்கி
எம் - எங்கள்
சொல்லற் பாணி – பதில் கிடைக்கும் காலத்திற்கு
நின்றனன் ஆக - காத்து நின்றான்
பாடலின் பொருள்
தலைவன் பேசியதற்குப் பதில் எதுவும் நாங்கள் சொல்லவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்து உள்ளம் வருந்திக் கலங்கி, ”என்னிடம் இருந்து தப்பித்துச் சென்ற விலங்குகள் எங்குள்ளது எனச் சொல்லாவிட்டாலும், என்னோடு எதாவது பேசினால் உங்களைப் பற்றிப் பழிச்சொல் வருமா? மென்மையானவர்களே?” என்று கேட்டான்.
குறிஞ்சிப் பண்ணாகிய நட்டராகத்தில் அமைந்த இசை முற்றுப் பெற்ற பாலை யாழை மீட்டுவதில் திறமையானவன் கையில் பட்ட நரம்பினைப் போன்று இம்மென்ற இசையொலி எழுப்பும். அதே போன்று ஒலியைச் செய்து கொண்டே காதல் நிறைந்த பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகள் ஆசைப்பட்டு வந்து தங்குகின்ற, பூந்தாதுகளை உடைய மலர்கள் தழைத்துப் படர்ந்திருக்கும் மரக்கிளையில் ஒன்றை ஒடித்தான். அதைக் குரைத்துக் கொண்டிருக்கும் தனது வேட்டை நாய்களின் மீது வீசி அவற்றின் சத்தத்தை அடக்கிவிட்டு, எங்கள் பதில் மொழிக்காகக் காத்து நின்று கொண்டிருந்தான்.
எளிய வரிகள்
பதில் பேசவில்லை என்ற கவலையோடு
உள்ளம் வருந்தியவன் சொன்னான்,
மென்மையானவர்களே!
தப்பித்த என் விலங்குகள் எங்கே தெரியுமா?
அதைச் சொல்லவில்லை என்றாலும் சரி
வேறு ஏதும் பேசினால் உங்களின் பெயர்
கெட்டுவிடுமா என்ன?
நட்டராகத்தின் இசை முடிந்த பின்
பாலை யாழ் இசைப்பதில் சிறந்தவன்
கையில் பட்ட நரம்பு போல,
‘இம்’ என ஓசையுடன் காதல் ஆசை
நிறைத்துக் கொண்டு பறந்து வரும்
பெண் வண்டுகளோடு காதலாட
ஆண் வண்டுகள் தங்கிடும் பூந்தாது
வழியும் மலர்கள் பூத்திருக்கும் மரம்.
அம்மரத்தின் சிறு கிளையை ஒடித்துத்
தன் வேட்டை நாய்கள் மீது வீசிக்
குரைத்துக் கொண்டிருக்கும் நாய்களின்
குரைத்தலை நிறுத்தியவன், எங்கள்
பதில் மொழிக்குக் காத்து நின்றான்.
சங்கக் கவிஞன் இராகங்களை அறிந்தவன், இசைக்கருவிகள் பற்றியும், அதை இசைப்பவனின் தன்மை முதலிய அனைத்தையும் பற்றித் தெளிந்த அறிவுடையவன். வண்டுகள் காதல் உணர்வு கொண்டு பறக்கும்போது எழுப்பும் ஒலியைக் கூட அன்றைய கவிஞன் கவனித்து அனுபவித்து இருக்கின்றான். மரக்கிளையில் பூத்திருக்கும் மலர்களின் அழகை உற்று நோக்கி உள்ளத்தில் பதிவு செய்திருக்கின்றான். இதுபோன்று படிப்பவர் அறிவையும், ரசிகனின் ஆர்வத்தையும் வெறும் எழுத்துக்களால் நிரப்பிவிடுவது அல்ல ஒரு படைப்பு என்பதை கண்டறிந்த எழுத்தறிஞன் கபிலன். காலங்கள் கடந்து ஒரு படைப்பைப் பற்றிப் பேசுவதுபோலவே, படைப்பாளியும் கொண்டாடப்படவேண்டும். அதுவே அம்மொழி சார்ந்த சமூகத்திற்கான பெருமை;அம்மொழியின் வளமையை காலத்திற்கும் பறை சாற்றும் சான்றுகளின் முதன்மை.
கவிஞன் என்பவன் காலத்திற்கும் அழியாத பொருண்மைகளை, தன் உள்ளத்து உணர்வுகளை அழகாக மொழியூட்டித் தந்த படைப்புகள் ஒவ்வொன்றும் காலப்பெட்டகத்தில் பொக்கிசங்கள். ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்ளும் காட்சியைப் பாடலின் கதைசொல்லும் தன்மை குறையாது, இடையிடையே வியக்கத்தக்க தகவல்களுடன் இச்சங்கப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. சங்கப்பாடல்கள் தமிழின் தொன்மையையும், ஆதித்தமிழனின் வாழ்வியலையும் சுமந்து நிற்கும் காலச்சுவடு. அதன் வழியே வாசிப்புப் பயணத்தைச் சிறப்பாக்கும் கபிலர் படைப்புகள் தமிழில் திசைகாட்டி;தமிழின் வழிகாட்டி.
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம்: நாய்கள் ஜாக்கிரதை
A1TamilNews