ஓவியர் மருதுவின் தூரிகையில்
காதல் கதை சொல்லட்டுமா?
வழித்துணைக்கு நானும் வரவா?

பொன்மாலைப் பொழுது, ஆம், ஓடி ஓடிக் களைத்துப் போன உலகத்தை ஓய்வாய் உட்கார வைத்து தேநீர் அருந்த வாய்ப்பைத் தருவதினால் அது பொன்மாலைப் பொழுது. வேலைக்குச் சென்றவர் வீடு திரும்புவர், பள்ளி,கல்லூரிக்குச் சென்றவர் வீடு தேடிப் பறந்திடுவர், வீட்டில் இருக்கும் அம்மாவோ, அப்பாவோ சிற்றுண்டியோடு காத்திருப்பர், கைவண்டியில் திண்பண்டங்கள் விற்பவர்கள் கால்கள் தேய்ந்திடத் தெருத்தெருவாகச் சுற்றி விற்பனை செய்திடும் நல்ல வாய்ப்பைத் தருவதும் மாலை நேரம். பாட்டி, தாத்தா நண்பர்களோடு நடைப்பயணம் போவர், முடியாதவர் வெறும் வாய்ப்பயணம் செய்வர்.
நவீன வசதிகளும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனிதப் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் இயற்கையின் இயல்பு தரும் குறிப்புகளே மணிக்கணக்கு, பருவநிலை மாற்றம், மழைக்குறிப்பு ஆகிய அனைத்தையும் உணர்த்தின. அதிகாலைச் சூரியன் வரப்போவதை உணர்த்தும் பறவைகளின் ஒலி புத்துணர்ச்சி தரும், இதனோடு வருங்காலத்தில் இணைந்து கொண்டதுதான் பால்காரர் வண்டியின் அலறல், செய்தித்தாள் போடுபவரின் மிதிவண்டியின் மணியொலி, கீரை விற்பவர் விடாது கத்துவது, குப்பை வண்டிக்காரர் சின்னக்குச்சியைக் கொண்டு வண்டியைத் தட்டுவது போன்றவை.
இன்னும் எத்தனை எத்தனை நினைவுகளும், நிகழ்வுகளும் இன்று மாலை நேரத்தில் நடக்கின்றன. ஓயாமல் ஓடிக் களைத்திடாக் காலங்கள் தந்த வளர்ச்சியின் மாற்றத்தினால் ஆதித்தமிழன் புரிந்துணர்ந்த மாலைநேரத்திற்கான குறிப்புகள் பல நம்மிடையே இல்லை. சிட்டுக் குருவிகளைத் தொலைத்துக் கைப்பேசியில் பேசும் சுகம் கொண்ட உலகத்தின் கையில் மீதமிருப்பவை கொஞ்சத்திலும் கொஞ்சமே. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடும், இயற்கை வளங்களின் அழிவும் மனிதனுக்குத் தற்கால வாழ்வியல் தந்த கசப்பான பாடங்களினால் இயற்கையின்பத்தை மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருக்கின்றது மனித இனம். காற்று, தண்ணீர், உணவு எனத் தொடங்கித் தான் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் தனி அக்கறையும், புரிதலும் ஏற்பட்டிருப்பது மாற்றத்திற்கான முதல்படி. பண்டைய வாழ்வியல் தரும் பயனைத் தேடித் தேடிக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் மனிதனின் பயணம் வெற்றிப்படி.
பொன்மாலைப் பொழுது
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப்
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய,
மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப்
பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக் கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்புக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ, (215-230)
அருஞ்சொற்பொருள்
எல்லை செல்ல – பகல்நேரம் போக, (எல்லை- பகல்நேரம்)
ஏழ் ஊர்பு இறைஞ்சி – ஏழு குதிரைகள் பூட்டிய தேரினை ஓட்டி,
பல் கதிர் மண்டிலம் – பல ஒளிக்கதிர்களைக் கொண்ட கதிரவன், (மண்டிலம்- கதிரவன்)
கல் சேர்பு மறைய – மலையைச் சேர்ந்து மறைந்திட, (கல்- மலை)
மான் கணம் – மான் கூட்டம், (கணம்-கூட்டம்)
மரம் முதல் தெவிட்ட – மரத்தின் அடியில் தங்கிட
ஆன் கணம் – பசுக் கூட்டம்
கன்று பயிர் குரல – கன்றுகளை அழைக்கும் குரல்
மன்று நிறை புகுதர – பசுத்தொழுவங்கள் நிறையுமாறு புகுந்து, (மன்று- பசுத்தொழு)
ஏங்கு வயிர் இசைய – ஊதுகின்ற கொம்பின் இசைபோல, ஏங்கு- ஒலித்தல்
கொடு வாய் அன்றில் – வளைந்திருக்கும் வாயை உடைய அன்றில் பறவை
ஓங்கு இரும் பெண்ணை – உயர்ந்த கருமையான பனை மரத்தின்
அக மடல் - உள் மடல்
அகவ – கூவிட, தன் துணையை அழைத்தல்
பாம்பு மணி உமிழ – பாம்பு மணியைக் கக்கவும்
பல் வயின் கோவலர் – பல இடங்களில் இடையர்
ஆம்பல் அம் தீம் குழல் – ஆம்பல் என்னும் பண்ணினைக் குழலில்
தெள் விளி பயிற்ற – தெளிவான இசையைப் பலமுறை எழுப்பவும்
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட – ஆம்பல் மலர்களின் அழகிய இதழ் குவியவும்
வள் மனை – செல்வமுடைய வீடுகள்
பூந்தொடி மகளிர் -அழகிய பெண்கள்
சுடர் தலைக் கொளுவி – விளக்கை ஏற்றவும்
அந்தி அந்தணர் அயர– அந்தணர்கள் அதிகாலைக் கடனைச் செய்யவும்
கானவர் – காட்டில் வாழ்பவர்கள்
விண் தோய் பணவை மிசை – வானத்தைத் தொடும் பரண் மேல்
ஞெகிழி பொத்த - நெருப்புக் கொள்ளியால் தீ முட்டூதல்
வானம் மா மலை வாய் - மேகங்கள் இடம் பெரிய மலையிடத்தில்
சூழ்பு கறுப்ப - சூழ்ந்து கொண்டு கருமை அடைந்தது
கானம் கல்லென்று இரட்ட- காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து கல் என்ற ஓசையை ஏற்படுத்தின
புள்ளினம் ஒலிப்ப – பறவைகள் கூவின
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – சினம் கொண்ட அரசன் போருக்குச் செல்வதைப் போன்று
துனைஇய மாலை – விரைவினை உடைய மாலைப்பொழுது
துன்னுதல் காணூஉ – நெருங்கி வருவதைக் கண்டு
இயற்கை தனக்குள் வைத்திருக்கும் அதிசயப் புதையல்கள் யாராலும் கண்டறிந்து சொல்ல முடியாதவை. ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு நாளும் புதியது. நாள்கள் விடியும்போது தொடங்கி, முடியும்வரை வியப்பை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது இயற்கை. காலை நேரம் வருகின்றது என்பதை முன்கூட்டிச் சொல்வதற்குத் தனிக்குறிப்புகள், அதே போன்று மாலைப் பொழுது, இரவு, அதிகாலை எனப் பொழுதுகளுக்கான முன்னறிவிப்புச் செய்யும் குறிப்புகள் வாழ்வின் பகுதியானவை. ஆதிமனிதனின் பொன்மாலைப் பொழுது எப்படி வரும் என்பதைச் சொல்லும் கபிலரின் பாடல் வரிகள்.
பாடலின் பொருள்
பகல் நேரம் தீர்ந்திட ஏழு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிப் பல ஒளி தருகின்ற கதிர்களைக் கொண்ட கதிரவன் மலையை நோக்கிச் சென்று அடைந்து மறைந்தான். மான் கூட்டம் மரத்தின் அடியில் தங்கவும், பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரல் எழுப்பிக் கொண்டே பசுத்தொழுவங்கள் நிறையுமாறு நுழையவும், ஊதுகின்ற கொம்பின் ஓசையைப் போன்று குரல் உடைய, வளைந்திருக்கும் வாயை உடையது அன்றில் பறவை. அது உயர்ந்த கருமையான பனைமரத்தின் உள் மடலில் இருந்து தன் துணையை அழைக்கவும், பாம்பு மணியைக் கக்கவும், பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினைக் குழலில் தெளிவான இசையைப் பலமுறை எழுப்பவும், ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் குவியவும், செல்வமுடைய வீடுகள் உள்ள அழகிய வளையல்கள் அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தணர்கள் மாலை நேரத்துக் கடனைச் செய்யவும், காட்டில் வாழ்பவர்கள் வானத்தைத் தொடும்படி அமைத்த பரண்மேல் இருந்துகொண்டு நெருப்புக் கொள்ளியால் தீ மூட்டி எரிய வைப்பர், மேகங்கள் சூழ்ந்திருக்கும் இடம் பெரிய மலையிடத்தில் சூழ்ந்து கொண்டு கருமை அடைந்தது, அதைக் கண்டு காட்டில் உள்ள விலங்குகள் “கல்” என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன, பறவைகள் கூவின, சினம் கொண்ட அரசன் போருக்குச் செல்வதைப் போன்று விரைவாக மாலைப் பொழுது நெருங்கி வருதலைக் கண்டு,
எளிய வரிகள்
பகல்பொழுதை முடித்து வைக்க
ஏழு குதிரைகள் இழுக்கின்ற தேரில்
பல ஒளிதரும் கதிர்கள் கொண்டு
மலையை நோக்கிச் சென்று
மறைந்தான் கதிரவன்.
மான் கூட்டம்
மரத்தின் அடியில் தங்கியது.
பசுக்கூட்டம்
கன்றுகளைத் தன்பின்னே
வரச் செய்யக் குரலிழுப்பியபடித்
தொழுவத்தில் நுழைந்தது.
உயர்ந்த கருமையான பனைமரத்தின்
உள்புற மடலில் உட்கார்ந்து கொண்டு
தன் துணையை அழைத்தது,
ஊதுகின்ற கொம்பின்
ஓசைபோன்று குரல் கொண்ட
வளைந்த வாயை உடைய
அன்றில் பறவை.
பாம்பு மணியைக் கக்கியது.
ஆம்பல் பண்ணினைக் குழலில்
பலமுறை இசைத்தனர் இடையர்கள்.
அழகிய இதழ்கள் குவிந்தன
ஆம்பல் மலர்கள்.
அழகிய வளையல் அணிந்த
பெண்கள் விளக்கேற்றினர்.
மாலைக் கடன் முடித்தனர்
அந்தணர்கள்,
வானைத் தொடுமாறு அமைத்த
பரண்மேல் ஏறிக்கொண்டு
தீக்கொள்ளியால் நெருப்பேற்றுவர்
காட்டில் வாழும் கானவர்கள்.
மேகங்கள் சுற்றி நிற்கும் மலைமேல்
நெருப்பெறிவது கண்டு விலங்குகள்
சுற்றித் திரிந்து ஓசை எழுப்பியதும்,
பறவைகள் எல்லாம் கூவியதும்
பகை நாட்டு அரசன் சினத்துடன்
படையோடு வருவது போன்று
விரைவாக மாலைப் பொழுது
நெருங்கி வருவதை கண்டு…
வழித்துணைக்கு வந்தான்
நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மணம் அயர்கம் சின்னாட்
கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென
ஈர நன்மொழி தீரக் கூறித்
துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்தப் பெயர்ந்தனன். (231-237)
அருஞ்சொற்பொருள்
நேரிறை முன்கை பற்றி – நேர்த்தியான முன்கையைப் பற்றி
நுமர்தர – உன் உறவினர்கள் எனக்குத் தர
நாடறி நன்மணம் அயர்கம் – நாடறியும் நல்ல திருமணத்தினை நடத்துவேன்
சில் நாள்- சில நாள்களில்
கலங்கல் ஓம்புமின் – கலங்குதலைத் தவிர்ப்பீர்
இலங்கு இழையீரென – ஒளிசெய்கின்ற அணிகலன்களை அணிந்தவர்களே
ஈர நன்மொழி தீரக் கூறித் -நல்ல சொற்களைத் தலைவியின் துயரம் தீர்ந்திடுமாறு கூறி
துணைபுணர் ஏற்றின் – பசுவைப் புணர்ந்த ஏறுபோன்று
எம்மொடு வந்து – எங்களுடன் வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில் –முழவின் ஓசை ஓயாத பழைய நம்மூரின் வாயிலில்
உண்துறை – பலரும் நீர் குடிக்கும் துறையில்
நிறுத்தப் பெயர்ந்தனன் – எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்
பாடலின் பொருள்
ஒளிதரும் அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்களே! நேர்த்தியான உம்முடைய முன்கைகளைப் பிடித்து, உம்முடைய பெற்றோர்களும், உறவினர்களும் எனக்குத் தருவதை நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறியும்படி நடக்கும் நல்ல திருமணத்தை இன்னும் சில நாள்களின் நடத்துவேன். இப்பொழுது கலங்கி வருந்துவதைத் தவிர்த்திடுங்கள் என்று இனிய சொற்களைச் சொல்லி எங்களின் துன்பம் தீரும்படிக் கூறினான். பின்னர் பசுவுடன் கூடிய காளை போன்று எங்களைப் பின் தொடர்ந்து வந்து முழவின் இசை ஓசை நிற்காது கேட்கும் பழைய ஊரின் வாயிலில் பலரும் குடிக்க நீரெடுக்கும் துறையில் எங்களை விட்டு விட்டுச் சென்றான்.
எளிய வரிகள்
ஒளிதரும் அணிகலன்கள் அணிந்த பெண்களே!
பெற்றோரும், உறவினரும் நாட்டிலுள்ளவர்கள்
தெரிந்து கொள்ளும்படி,
உமது வளையணிந்த அழகிய கைகளைப்
பிடித்து என்னிடம் தரும்
நல்லதொரு திருமணத்தை நடத்துவேன்.
“அது நடக்கும் வரை நீ வருந்தியிருக்க வேண்டாம்”
என்று இனிய சொற்களால் துன்பம் துடைத்தான்.
பசுவோடு இணைந்த காளையாய் விலகாமல்
எங்கள் பின்னர் தொடர்ந்து வந்தான்.
ஊர்மக்கள் குடிநீரெடுக்கும் துறையில்
எங்களை விட்டுவிட்டுச் சென்றான்
வழித்துணையாக வந்தவன்
யானை விரட்டியதால் ஓடிக் களைத்து, பயந்தபடி இருந்த பெண்களைக் காப்பாற்றியவன் கதையின் நாயகன். பின்னர் அவர்களில் ஒருத்தியிடம் தன் காதல் சொல்லி, திருமணம் செய்து கொள்வதாய் வாக்குக் கொடுக்கின்றான். அவளுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது காதலோடு. இருவருக்குள்ளும் காதல் வளர்கின்றது. அதன் பின்னர் அவளுடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் காதலால் நிரம்பி வழிந்தது. காதலரைப் பிரிவில் வருத்துகின்ற மாலை நேரம் வந்ததும் அவள் தன் தோழிகளோடு வீடு திரும்பப் போவதைச் சொன்னதும், அவளுக்கு ஆறுதல் சொல்கின்றான். அத்தோடு, பாதுகாப்பாக ஊர்போகும் வரை வழித்துணையாகி அன்பின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றான்.
இன்று வீட்டில் வந்து விட்டுச் செல்லும் காதலன் போலவே அன்று சங்கக்காலக் காதலன் ஊரின் எல்லை வரை அவளைப் பின் தொடர்ந்து, பாதுகாப்பாக விட்டுச் செல்கின்றான். தன்னவள் என்றதும் அதீத அக்கறை நிறைந்துவிடும் காதலுக்குள். காதலி, காதலி சார்ந்த அனைத்தின் மீதும் அன்பும், அக்கறையும் தானாகவே தோன்றிவிடும். காதலின் பொதுவிதிகளில் இதுபோன்ற பலசெயல்களைக் காணமுடியும். காதல் அப்படித்தான். காதலர்களும் அப்படித்தான்.
காதல் கொண்டவன்
என்னவெல்லாம் செய்வான்?
எப்படியோ பேசியவன்
இனிய சொற்களைத் தேடுவான்,
தூங்கிக் களைத்தவன்
நிலவுக்குத் துணை நிற்பான்,
நகங்கள் நறுக்காதவன்
நகம்கடித்து நாள் நகர்த்துவான்,
காலை நேரங்களில்
அருவமாய் உணர்ந்திடுவான்,
மாலை நேரங்களில்
மன்மதனாகித் திரிந்திடுவான்.
காதலியைக் கண்டால்
கண்கள் உயிர்பெற்றாடும்
அவளைப் பிரிந்திடின்
அவனுயிர் உடைந்தோடும்.
இவன் கொண்ட காதல்
இன்னும் என்ன செய்யுமோ
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் : பூப்பூப்பூ பூப்பூத்த சோலை