ஓவியர் மருதுவின் தூரிகையில்
      காதல் கதை சொல்லட்டுமா?
             
இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை?

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை?

கபிலர் ஆரிய அரசன் யாழ்ப் பிரதத்தனுக்குத் தமிழினத்தின் காதல் வாழ்வினைக் கவிதையில் சொல்லப்பட்டதே குறிஞ்சிபாட்டு. களவு வாழ்க்கையின் அறவழிப்பட்ட தன்மை, தன்னையே அளிக்கும் குறிக்கோள் நோக்கு, மாந்தருக்குக் கூட்டத் தொண்டு, இவ்வன்பைத் தூண்டும் இயற்கை எழில், களிப்பு, துயரம், ஏமாற்றம், மகிழ்ச்சி தரும் மன உறுதி ஆகிய மாறுபட்ட உணர்வுகள் ஒன்றுதிரண்ட இணக்க வாழ்க்கை ஆகிய இவை அனைத்தும் குறிஞ்சிப்பாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ளது என்று தெ.பொ.மீ தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சிப்பாட்டின் தனித்தன்மைகளுள் ஒன்று 99 மலர்களைப் பற்றிய செய்திகள். காதலுக்கும், மலருக்கும் உள்ள நீண்ட உறவை மறக்காத கபிலர் பெரும் மலர்த்தொகுதியைச் சொல்லியுள்ளார். கபிலர் இயற்கையைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தன் பாடல்களில் உவமை, உவமேயம், படிமம் எனப் பயன்படுத்தி ஒரு காட்சியை விளக்குவதில் தனித்திறன் கொண்டவர். அனைத்து இலக்கண, இலக்கியச் சிறப்புகளையும் கொண்டு எழுதப்பட்ட காதல் வாழ்க்கையைப் பற்றிய பாடல்களால் ஆனது குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளால் ஆனது. தலைவி வருந்தித் துன்புறும் நிலையைக் கண்ட செவிலித்தாய்க்கு அவளின் காதல்கதையைத் தோழி சொல்கின்றாள். நடந்த நிகழ்வினை அப்படியே உள்ளபடியே விளக்கமாகத் தோழி கூறுவதாக அமைக்கப்பட்டது குறிஞ்சிப்பாட்டு.

தலைவியும், தோழியும் தினைப்புனம் காத்திடச் செல்லும் இருவரும் மற்ற பெண்களோடு சேர்ந்து சுனையில் நீராடுகின்றனர். பின்னர் அங்கிருக்கும் பலவகையான மலர்களைப் பாறையில் குவித்து, தழைகளை ஆடையாக்கி உடுத்திக் கொண்டனர். பறித்து வைத்த மலர்களால் மாலைகள் செய்து அசோகமரத்தின் நிழலில் ஓய்வெடுத்தனர். அந்த நேரத்தில் வீரக்கழல் அணிந்த தலைவனைக் காண நேர்ந்தபோது, அவனுடன் வந்த நாய்களைக் கண்டு அஞ்சிய பெண்கள் வேறு இடத்துக்கு ஓடிச் சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்று வேட்டையின்போது தப்பித்துப் போன விலங்குகளைப் பற்றிக் கேட்டான். அவனுக்குப் பதில் சொல்லும் தலைவியின் பேசுவதை ஆசையாகக் கேட்டு இன்புற்றான்.

தினைப்புலம் காத்துக் கொண்டிருந்தவர்கள் விரட்டியதால் சினம் கொண்டு வரும் யானையைக் கண்டு பெண்கள் நடுங்கினர். அந்த யானையைத் தலைவன் அம்பெய்து துரத்தி அவர்களைக் காப்பாற்றினான். அவனின் அக்கறையான செயல்பாடுகள் அவளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியபடியேதான் இருந்தது.  அதை அவள் வெளிப்படுத்தவில்லை. ஆனால், தலைவிக்கும் தன் மீது காதல் இருப்பதை உணர்ந்து கொண்டவன், தன் காதலையும் சொல்லி உறுதியும், நம்பிக்கையும் தந்தான். தலைவனின் நாட்டு வளங்களைச் சொல்லித் தகுதியும், சிறப்புமிக்கவன் என்பதை உறுதிபடத் தாயிடம் தெரிவிக்கின்றாள் தோழி.

தலைவனும், தலைவியும் எதிர்காலத்தில் நடத்தவிருக்கும் இல்லறத்தில், வீடுதேடிவரும் அனைவருக்கும் உணவளித்து பசியாற்றிய பின்னர் இருவரும் உண்ணவேண்டும். நம் வீட்டு வாசல் கதவுதகள் இல்லையென்று சொல்லாமல் வரவேற்கும்படி எப்பொழுதும் திறந்தே இருக்கவேண்டும் என்பது போன்ற செய்திகளைச் சொல்லி, கண்டிப்பாக நாம் இருவரும் திருமணம் செய்வோம் என்று தலைவன் உறுதியளிக்கின்றான்.

வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்தது. தலைவியையும் அவளோடு இருந்த பெண்களையும் ஊரின் எல்லைவரை துணையாகச் சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் நாடு திரும்பினான். பிரிந்து சென்றவன் தலைவியைக் காண அடிக்கடி தீராத காதலோடு அவளைத் தேடி வருவது வாடிக்கையானது. பெற்றோர் மற்றும் காவல் மிகுதியால் இருவரும் சந்திக்க முடியாமல் போகின்றது. பிரிவுத் துயரம் இருவரையும் வருத்துகின்றது. அவன் வரும்வழியில் உள்ள இடையூறுகளையும், துன்பங்களையும் நினைத்துத் தலைவி உண்ணாமல், உறங்காமல் வருந்தி, மெலிந்து நோயுற்றவள்போல் காணப்படுகின்றாள். அவள் துன்புற்றுதைக் கண்ட தாய் காரணம் தெரியாமல் வருந்துகின்றாள்.

இதுபோன்ற களவு வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொல்லி இருவரும் உடனடியாகத் திருமணம் செய்து வைத்தால் சிறந்த இல்வாழ்க்கையை நடத்துவார்கள் என்னும் நம்பிக்கையையும் தெளிவுறக் கூறுகின்றாள் தோழி. நிறைவாகக் காதலனுக்காகவும், இல்லற  வாழ்வைப் பற்றிய கனவுகளோடும் கண்களில் காதல் நிறைத்து, உள்ளத்தில் அவனை நினைத்துக் காத்திருக்கின்றாள் என்று தன் தோழியின் காதல்கதையைத் தாயிடம் சொல்லி முடிக்கின்றாள் தோழி எனக் குறிஞ்சிப்பாட்டெனும் காதல்கதையை நிறைவு செய்கின்றார் கபிலர்.

விடிந்தால் அவன் உருவிலே என் விழிதிறக்கும் – என்
வேலைக்கிடையில் நினைவெல்லாம் எங்கோ பறக்கும்
கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுளம் இறக்கும் -பின்
கொஞ்ச வருவான் என அது மீண்டும் பிறக்கும்.

மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை – அந்த
வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை,
உறங்கும்போதும் இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை -என்
ஒளி இதழ் அடையுமா அவன் முத்துப் பல்லை? (பாரதிதாசன்)

கபிலரின் கதைநாயகியின் உள்ளத்தைச் சொல்வதுபோலவே, காதலனைப் பார்க்காமல் தவிக்கும் காதலியின் உள்ளம் பேசுவதாக பாரதிதாசன் எழுதியுள்ள கவிதை அமைந்துள்ளது.  அவன் பிரிவால் வருந்தி, அவனை நினைத்து நினைத்துக் கண்ணீரோடு துன்பத்தினைத் தாங்கி, திருமணம் நடந்திடும் என்ற நம்பிக்கையில், அத்திருநாளை நோக்கி அவள் காத்திருக்கின்றாள். அவள் கனவில் இவன் வரும் நிகழ்வுகள் பன்மடங்காகப் பெருகி, ஒவ்வொரு நொடியும் காதல் மிகுந்து, கண்களில் காண்பதெல்லாம் அவனாக மட்டுமே இருக்கும்.

காலைக் கதிர்வந்து பலகணி இடுக்கிலே சிரிக்கும் – அது
காளை எட்டிப் பார்ப்பது போலவே இருக்கும்.
சோலைக் குளத்தில் செந்தாமரை இதழ்விரிக்கும் – அது
தூயவன் முகமென என் உளம் ஆர்ப்பரிக்கும்.(பாரதிதாசன்)

நல்லறமாகிய இல்லறம் அவனோடு தொடங்கும் வரை அவளுக்கு, எங்கெங்கு காணினும் அவன்தான். அவனைத்தவிர வேறெதுவுமில்லை நினைவிலும், கனவிலும்.

261 வரிகளில் காதல், தாய்மை, அன்பு, நட்பு, வீரம், நாட்டுவளம், மனித வாழ்வு, பெண்கள் நிலை, குடும்பம், இயற்கை எனப் பல்வேறு செய்திகளைத் தன் பாடல்களில் பாடுபொருள்களாக, பாடலின் உள்கருத்துக்களாக இன்னும் பலவழிகளில் சொல்லியிருக்கின்றார் கபிலர். மொழிக்கு இலக்கணம் உள்ளது போலவே காதலுக்கும், இல்லற வாழ்வுக்கும் இலக்கணம் கொண்டது தமிழர்கள் மட்டுமே. தொல்காப்பியம் சொன்ன இலக்கணம் மாறாது கபிலர் எழுதிய காதல்கதையே குறிஞ்சிப்பாட்டு. ஆதிமனிதன் தந்த தமிழும், காதலும் வரலாறு கொண்டாடும் சங்கத் தமிழ்ப்பாட்டு. கபிலர் சொன்ன இந்த இலக்கணக்காதலே காலங்காலமாகக் காதலர்கள் போற்றிப்பாடும் காதல்பாட்டு.

இதுவரை இத்தொடரைப் படித்தவர்களுக்கும், படிக்க இருப்போர்க்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றி.

                    சங்க இலக்கியம் படியுங்கள், வீரம் தெரியும், காதல் புரியும்
                                                                                                                   - சித்ரா மகேஷ் 


முந்தைய வாரம் : வழித்துணைக்கு நானும் வரவா?