ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? 
                             
காதலின் புதுமொழி

 
ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? காதலின் புதுமொழி

காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது 
காதல் உயிர்களை உடைக்கின்றது -அடடா
நெஞ்சில் வரும் காதல் வலி

என்ற இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்கேற்ப ஒரு சங்ககாலக் காதலன் காதலை உணர்ந்திருக்கின்றான் எனும் வியப்பைத் தரும் இந்தக் காதல் ஆதித்தமிழன் கொண்டது. மீண்டும் மீண்டும் காதல் பாடல்களில் அன்றிருந்த இயற்கையின் அழகினைக் கண்முன் நிறுத்துவதைத் தவறுவதே இல்லை கபிலர்.

ஒரு செயலை புரிய வைப்பதற்காக இன்னொன்றைச் சொல்லிக் காட்டி விளங்கச் செய்வதற்காக இலக்கியங்களில் கையாளப்படும் இலக்கணத்தை உவமைப்படுத்திக் கூறுவது என்பர். அதுபோலவே பெண்கள் பபந்து நடுங்குவதை, அலைகள் கொண்டுவரும் நுரைகள் மோதுவதால் வாழைமரங்கள் நடுங்குவதில் பொருத்திப் புரிய வைக்கின்றார். வாழைமரங்களைப் பெண்களுக்கு ஒப்புமைப்படுத்தியது எத்தனை பொருத்தம். மென்மையானவர்கள் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்ட இந்த வரிகளைப் படிக்கும்போதே இரண்டு காட்சிகளின் தன்மையையும் உணர முடிகின்றது.

நீ எனக்குத்தான் என்று நேரடியாகக் காதலைச் சொல்வது போன்று, தன் காதலைச் சொல்கின்றான். காதல் காலங்களுக்கும் மாறாது, காதலர்களும் அவர்கள் உணர்வுகளும் அப்படித்தான். ஒருவன் பேசுவதை வைத்தும், பார்க்கும் பார்வையை கொண்டும் ஆணின் பண்பினை எடை போட்டு, மதிப்பீடு செய்யும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. யாரென்று தெரியாத ஒரு ஆணின் அருகாமையை அவ்வளவு எளிதாக எந்தப் பெண்ணும் அனுமதிக்க மாட்டாள். சந்திக்கும் சூழல் உள்பட அவள் உள்ளுணர்வு உணர்த்தும் அதன் பின்னர் முடிவு செய்வாள் இவன் நல்லவன் என்று. இங்கும் அப்படித்தான், ஆபத்தில் உதவுகின்றான். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை உணரச்செய்கின்றான். பின்னர் தன் காதலையும் அதனூடே தெரிவிக்கின்றான் கபிலரின் கதை நாயகன்

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர் 
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும் 
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும் 
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம் 
தெய்வம்- சேயோன் – முருகன் 
துறை – அறத்தொடு நிற்றல் 
பாவகை - ஆசிரியப்பா 
கூற்று- தோழி 
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

அவன் மெல்லச் சிரித்தான்

திணிநிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய 
துணையறை மாலையின், கை பிணி விடேஎம் 
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை 
அடுங்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை 
 “அஞ்சில் ஓதி! அசையல்! ஆவதும் 
அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என 
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து 
என்முகம் நோக்கி நக்கனன்…

அருஞ்சொற்பொருள்

திணிநிலைக் கடம்பின் – வலிமையான கடம்ப மரத்தின் 
திரள் அரை வளைஇய – திரண்ட அடிப்பகுதியில் வளைந்த 
துணையறை மாலையின் – மகளிர் கட்டிய மாலையைப் போன்று 
கை பிணி விடேஎம் – கோத்துக் கொண்ட கைகளை விடவில்லை 
நுரையுடைக் கலுழி பாய்தலின் – நுரையை நிறைத்து வரும் புது வெள்ளம் பாய்ந்ததால், கலுழி- வெள்ளம் 
உரவுத் திரை – வலிமையான அலைகள் 
அடுங்கரை – கரையை இடிக்கும் 
வாழையின் நடுங்க – வாழை மரத்தினைப் போல் நடுங்கி 
பெருந்தகை – பெரிய தலைவன் 
அம் சில்  ஓதி-  நுண்மையான அழகான தலைமயிர், ஓதி- பெண்ணின் தலைமயிர் 
அசையல் – தடுமாறுதல் 
யாவதும் அஞ்சல், ஓம்பு – பயம் கொள்ள வேண்டாம் 
நின் அணி நலம்– உன்னுடைய அழகிய நலம் 
நுகர்கு என – நுகர்வேன் என்று 
மாசறு சுடர் நுதல் நீவி – மாசு இல்லாத ஒளியுடைய நெற்றியைத் தடவி 
நீடு நினைந்து – நீண்ட நேரமாக நினைத்துக் கொண்டு 
என்முகம் நோக்கி நக்கனன் – என்னுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.

பாடலின் பொருள்

மிக நெருக்கமாக. இறுக்கிக் கட்டிய மாலையைப் போன்று, திண்மையான கடம்ப மரத்தின் திரண்டிருக்கும் அடிப்பகுதியில் வளைத்துச் சூட்டிய, கோர்த்துக் கொண்ட எங்கள் கைகளை விடவில்லை. நுரைகளோடு புதிய வெள்ளம் பாயும்போது வரும் வலிமையான அலைகள் கரையினை இடிக்கும்பொழுது கரையோரத்தில் விளைந்திருக்கும் வாழைமரங்கள் போன்று நடுங்கினோம்.

அழகிய மென்மையான கூந்தலைப் பெற்றவளே! தடுமாற்றம் வேண்டாம்! பயம் கொள்ளாதே! நான் உன்னுடைய அழகினை என்னுடையதாக்கிக் கொள்வேன் என்று குற்றம் இல்லாத தலைவியின் ஒளியை உடைய நெற்றியைத் தடவியபடி இருந்தான் பெரிய தலைவன். நீண்ட நேரமாக அமைதியாக இருந்துவிட்டுப் பின்னர் தலைவியின் தோழியான என்னைப் பார்த்துச் சிரித்தான்.
 

எளிய வரிகள்

கடம்ப மரத்தின் அடியில் கைகளைக் கோர்த்துச் 
சுற்றி நகராமல் நின்றோம், 
நுரைகள் நிறைத்து வரும் புதிய வெள்ளத்தின் 
அலைகள் கரையை இடித்தால், 
கரையோரத்து வாழை மரங்கள் நடுங்குவது 
போல நடுங்கினோம் நாங்கள்.

அழகிய மென்மையான கூந்தல் பெற்றவளே! 
தடுமாறாதே! பயம் கொள்ளாதே! 
ஒளி தரும் அவளின் நெற்றியைத் தடவிச் 
சொன்னான் பெரிய தலைவன், - “அன்பே 
உன் அழகினை எனதாக்கிக் கொள்வேன்.”
அவளிடம் காதலோடு சொன்னான்.

நீண்ட நேரம் அமைதியாக இருந்தவன்,
என்னைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

காதல் சொன்னதும் சொல்லால் ஏற்றுக்கொள்வது ஒருமுறை. அமைதியாக இருந்து மெளனமெ சம்மதமாகச் சொல்வது ஒருமுறை. திரைப்படங்களில் காட்சிகளாகவும், பாடல்களிலும் இடம்பெறுவது போன்ற ஒரு நிகழ்வு அன்றே நடந்துள்ளது என்பதைச் சொல்லும் ஒரு காட்சியைக் கபிலர் தனக்கே உரிய தனித்தமிழ் அழகினால் எழுதியிருப்பதைப் படிக்கும்போது இப்படி யாரும் காதல் சொல்லவில்லையே?, இப்படிச் சொல்லவேண்டும் காதலை… எனுமாறு காதலைச் சுற்றிச் சுழலும் உள்ளத்து உணர்வுகள்.

யானையைக் கண்டு பயந்தோடி வந்தவளைக் கண்டதும் காதல் கொண்டான். அவள் பயத்தைப் போக்குவதற்காகத் தன் பக்கம் வந்தவள் வெட்கமும், பயமும் கொண்டு விலகிச் செல்ல முயல்கிறாள். ஆனால் அவளைச் செல்ல விடாமல் தன் நெஞ்சோடு இழுத்து அணைத்தான். அவளும் விலகிட மனமின்றி அமைதி கொண்டாள். இருவருக்குள்ளும் காதல் பரிமாற்றம் புதுமொழியால் உயிர்பெற்றது.

அவன் அணைப்பில் இவள்

அந்நிலை,
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர 
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ, 
ஆகம் அடைய முயங்கலின் (183-186)

அருஞ்சொற்பொருள்

அந்நிலை நாணும் உட்கும் – அந்த நிலையில் வெட்கமும், பயமும் 
நண்ணுவழி அடைதர – அணுகிய இடத்தில் வந்து தோன்றியதால் 
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் – விரைவாகப் பிரியவும் விடவில்லை அவன் 
கவைஇ - அணைத்து 
ஆகம் அடைய முயங்கலின் -அவளுடைய நெஞ்சு தன்னுடைய நெஞ்சில் சேருமாறு அவளை அணைத்தல்

பாடலின் பொருள்

அந்த நிலையில், அருகில் செல்லும் போது வெட்கமும், பயமும் வந்ததினால் அவனிடமிருந்து விரைவாகப் பிரிந்து செல்ல முயன்றாள். ஆனால் அவன் அவளைச் செல்ல விடாமல் தன் மார்புடன் அவள் மார்பும் சேர்ந்து ஒடுங்குமாறு அணைத்துத் தழுவினான்.

எளிய வரிகள்

அந்த நேரத்தில் 
அவனருகே போனவளின் 
வெட்கமும், பயமும் வந்திட 
விரைவாகப் பிரிந்திட
முயன்றாள் அவனிடமிருந்து.

தன்னை விட்டுப் போய்விடுவாள் 
என்றெண்ணி அவளை இழுத்து 
தன் நெஞ்சுக்குள் அவள் பொதிந்து 
நிறையுமாறு அணைத்துக் கொண்டான்.

எங்கிருந்தோ வந்தவன், யாரென்று தெரியாது ஆனால் அவளை ஆபத்திலிருந்து மீட்டான். இருவரும் பார்த்துக் கொண்டதுமே அவனுக்குள் காதல் பிறந்தது. கண்ட நொடி முதல் அவனது காதல் உள்ளம் அவளைப் பிரிய மனமின்றித் தவித்தது. அவளை இழுத்துத் தன் நெஞ்சாங்கூட்டில் அணைத்துக் கொண்ட அணைப்பில் சொன்னான் தன் காதலை. 

காதல் வேகம் போகும் தூரம் 
உள்ளங்கள் ஆயிரம் கவிகள் பாடும். 
கண்கள் நான்கும் கனவுகள் தேடும். 

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று 
தொண்டைக்குள் சூல் கொண்டதோ
உன்னைவிட்டு உடல் மீளவில்லை 
என் கால்கள் வேர் கொண்டதோ,  

என்று இருவரின்   உள்ளங்களும் காதல் வானில் பறக்கும் போது காதலன் உள்ளம் பாடியது. காதலைச் சொல்லி, அக்காதல் அவளும் ஏற்றுக் கொண்டதும் காட்டுக்குள் கனிந்த காதல் அவனுக்குள் பல ஆயிரம் கனவுகளை விதைத்து, அவர்கள் எண்ணங்களில் காதல் வண்ணங்கள் தூவிக் காதலால் நிறைந்து, நிறைத்துக்கொண்டிருந்தது.

                                                                                                   கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய  வாரம் : யானையின் பிளிறல்

A1TamilNews

News Hub