ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா
காதல் என்பது பொதுவுடைமை

கண்டதும் காதல் என்பது மாற்றமின்றித் தொடரும் ஒன்று. ஆணும், பெண்ணும் முதன் முறை சந்திப்பில் பார்த்துப் பழகிய நேரங்களில் ஏதோ ஒன்று ஒருவர் மீது ஒருவர் அல்லது ஒருவருக்கு எந்தக் காரணமுமின்றி ஒருவித அன்பு தோன்றும். அதைச் சொல்லாமல் பல நாள்கள், சொல்ல முயன்று சில நாள்கள் உள்ளங்கள் உள்ளுக்குள் தவித்துப் பின் தாங்க முடியாது, காதல் சொல்வார்கள். அந்த நாளில் தான் இருவரும் மறுபடியும் பிறந்ததாக உணர்ந்து, உலகமே அந்நியப்படும். உறவுகள் தெரியாது. பெற்றோர் புரியாது. காதலின் சாட்சியாக இருப்பது நண்பர்கள் மட்டுமே. காதலின் இன்பத்திலும், துன்பத்திலும் துணை நிற்பது நண்பர்கள்தான்.
ஆனால், பெற்றோரின் எண்ணம் பொதுவாக எல்லையற்ற கற்பனைகளைக் கொண்டு திருமணத்தைப் பற்றிக் கனவு காணும். ஆண், பெண் இருவருக்கும் அதே நிலைதான். குறிப்பாகப் பெண் வீட்டில் கூடுதலான் அக்கறையும், கவனமும் இருக்கும். திருமணம் செய்யவிருக்கும் ஆண், அவன் பெற்றோர், உறவுகள், நட்புகள் எனத் தொடங்கி தீர ஆய்ந்து, அந்த ஆய்வைப் பலமுறை உறுதி செய்து கொண்ட பின்னரே திருமணம் என்பது பெற்றோர்களால் உறுதி செய்யப்படும். இந்த திருமண அமைப்புச் சற்றே மாறத் தொடங்கியுள்ளதை இன்று காணமுடிந்தாலும் முற்றிலுமாக ஒரு மாற்றம் வந்தால் காதல் வாழும் காதலர்கள் வாழ்வில் வளமுடன்.
பெற்றோர் சொல்லும் திருமணச் சட்டங்கள் அத்தனைக்கும் மாறாக நிகழும் காதல். அன்பு என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு உறுதி செய்யப்படும் உறவு காதல். காதல் திருமண வாழ்வுக்குள் செல்லும் முடிவில் ஆரம்பமாகும் மொத்தப் பிரச்சனையும். சில காதல் காத்திருப்புகளைத் தந்து, ஊரும், உறவும் வாழ்த்தத் திருமண வாழ்வைத் தொடங்கும். சில காதல் காதலர்களும், நண்பர்களும் இணைந்து இல்லறம் தொடங்கிய பின்னர் உறவுகளை மீட்டெடுக்கும். இப்படி எப்படி வாழ்வது என்று சிந்திக்காது, காதல் காதலாகவே இருந்து தன்னைத் தக்க வைத்து வாழத் தெரிந்த ஒரு தனித்துவம் கொண்டது. காதலைப் பற்றிய பெற்றோர் பார்வையும், ஏற்ருக் கொள்ளும் பக்குவமும் மேம்பட்டு வருகின்றது. காதலைச் சுற்றி நடக்கும் அரசியலையும், வன்முறையையும் வருத்தமும், பெருங்கோபமும் உணர்வுகளில் கனந்து கொண்டுதான் இருக்கின்றது. மாறும் என்ற காத்திருப்புகளைத் தாண்டி மாற்றமாகச் சமூகம் மாறவேண்டும். சில கருப்புப் பக்கங்களை விட்டிவிட்டுப் பார்க்கும் போது, காதல் என்ற சொல்லும், உறவும் தோன்றியது முதல் இன்றுவரை தன் இயல்பு மாறாது இயங்கி, இயக்கிக் கொண்டுதான் இருக்கின்றது. காதல் காதல்தான் அன்றும்,இன்றும், என்றும்.
தமிழர் திருமண முறை தனிப்பண்பு உடையது. இருமனங்கள் இணைவது மட்டுமல்ல. இருவரின் குடும்பங்கள், உறவுகள், நண்பர்கள் என இருவரைச் சுற்றிலும் இயங்கும் அனைத்து உறவுகளின் கூடலில்தான் திருமணம் முழுமை பெறும். அப்படி நடைபெறுவதுதான் சிறந்த குடும்ப வாழ்வினைத் தரும் என்பது பெற்றோர்களின் எண்ணம். அந்த எண்ணத்தை உடைத்துப் பிறப்பதுதான் காதல். இருவரும் பார்த்தார்கள், உள்ளங்கள் இணைந்தது, காதல் வந்தது. வேறு எதைப் பற்றியும் சிந்திக்காது காதல் கொண்டனர். காதல் காதலைத் தவிர வேறு எதையும் பார்க்காது. அப்படி அவர்களுக்குள் காதல் வந்த கதையைத் தோழி சொல்லும் கபிலரின் வரிகள்.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
கோபம் வேண்டாம் அம்மா
கொடுப்பினன் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்,
வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின், சினவாதீமோ. (30-34)
அருஞ்சொற்பொருள்
கொடுப்பினன் – பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் குடும்பத்தில்
நன்கு உடைமையும் – நல்லதாகவே முடியும் என்பதையும்
குடி நிரல் உடைமையும் – இரண்டு குடும்பங்கள் ஒரே தன்மையை உடையது என்பதையும், (குடி-குடும்பங்கள் நிரல்- ஒத்த)
வண்ணமும் - பண்புகளும்
துணையும் – உறவுகளும்
பொரீஇ – ஒப்பிட்டு,
எண்ணாது – நினைக்காமல்
எமியேம் – நாங்கள் தனியாக
துணிந்த – துணிந்து மேற்கொண்ட
ஏமம் - பாதுகாப்பு
சால் - காவலுடைய
அரு வினை – அரிய செயல்
நிகழ்ந்த வண்ணம் – நடந்த விதம்
நீ நனி உணர – நீ நன்றாக உணர்ந்திட
செப்பல் - சொல்லுகின்றேன்
ஆன்றிசின் – நான்
சினவாதீமோ- அதைக் கேட்டு நீ கோபம் கொள்ளாதே
பாடலின் பொருள்
பெற்றோர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் குடும்பத்தில் அனைத்தும் நல்லதாக அமையுமா, நன்றாக வாழ்க்கை அமையுமா என்பதையும், காதலனின் குடும்பமும் தன்னுடைய குடும்பமும் ஒத்துப்போகுமா? ஒரே தன்மையைக் கொண்டதா? எனவும், தலைவனின் பண்புகளையும், அவனது உறவினர்களின் இயல்பினையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்த்து பின்னரே முடிவு செய்வர். அதை எல்லாம் எண்ணிப் பார்க்காது துணிவுடன் ஈடுபட்ட காதலில் தலைவிக்குப் பாதுகாப்பும், அன்பும் தரும் நல்ல வாழ்க்கை துணை அமைந்த செயல் நடந்தவிதத்தை நீ நன்றாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கின்றேன் கேள். அதைக் கேட்டுவிட்டு என்மீது கோபம் கொள்ளாதே, என்று தோழி கூறினாள்.
எளிய வரிகள்
அவன் குடும்பம் எப்படி?
இருவர் குடும்பங்களும்
ஒற்றுமை கொள்ளுமா?
காதலனின் பண்பு என்ன?
உறவினர்கள் இயல்பு எது?
பெற்றோர் செய்வதுபோல்
ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.
ஒருமுறை பார்த்தனர்
இருவரும் துணிந்தனர்
அன்புக் காதல் பிறந்தது.
காதலோடு பாதுகாப்பும்
அவளுக்குத் தருகின்ற
சிறந்த துணை அமைந்த
செயல் நடந்த கதை
புரியும்படிச் சொல்கின்றேன்.
கேள் அம்மா, கேட்டுவிட்டுக்
கோபம் வேண்டாம் என் மீது.
“பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே” என்ற கவிஞரின் வரிகள் போலத்தான் காதல் மலர்வதும். ஆராய்ச்சிகள் பல செய்து பிறப்பதல்ல காதல். அப்படி வருவது காதலும் அல்ல. மழைத்துளி மண்ணில் விழுந்ததும் மண்ணிலிருந்து புறப்படும் மண்ணின் மணம் கலப்படமில்லாத இயற்கையின் பரிசு. இரண்டும் கலந்து தரும் இன்பத்தில் வேறுபாடு இல்லை. அதுபோன்று ஒன்றெனக் கலந்த உள்ளங்கள் கொண்ட காதல் மனத்திலும் களங்கமில்லை. காதல் சொல்லித்தரும் பாடமும் அதுதான்.
அன்றைய காதலையும், இன்றைய காதலையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காலமும், காதலர்களும் மட்டுமே வேறு. காதல் அப்படியேதான் இருக்கின்றது. இலக்கியம் தரும் காதல் செய்திகள் கொண்ட திரைப்படப் பாடல்களும், கவிதைகளும் காதல் என்றும் மாறாநிலை கொண்டது என்பதை உணர்த்தும். காலந்தோறும் மலர்த்தும். காதலுக்கு இலக்கணம் எழுதி, காதலை இலக்கியத்தில் சொல்லிப் போற்றும் தமிழன் மரபு சிறப்பு; காதல் தீராது பார்த்துக் கொள்வது காதலர்களின் பொறுப்பு.
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
கண்டபோதே சென்றன அங்கே
இனமென்ன குலமென்ன குணமென்ன
அறியேன் குணமென்ன அறியேன்
என்ற பாடல் வரிகள் சங்கக் காதலின் தொடர்ச்சியே. உலகக் காதலர்களின் உணர்ச்சியே. இது காதலின் பொதுவிதி.
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் : தூது சொல்ல வந்தேன்