ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
மூங்கில் நெல் அரிசி

காடும், அங்கு வாழும் விலங்குகளும் மனிதனைத் தன்வயப்படுத்துபவை. அளவில்லாத அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிறைத்து வைத்திருப்பவை. காட்டின் தன்மைகேற்ப, அங்கு வாழத்தகுந்த உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது. தான் வாழத் தேவையான உணவு தொடங்கிப் பருவநிலை மாற்றங்கள் என அனைத்தையும் கண்டு கொண்ட பின்னர் தனக்கான எல்லையை அமைத்துக் கொண்டு விலங்குகள் வாழத் தொடங்குகின்றன. காட்டு விலங்குகளை நாட்டிற்குள் காண்பதைவிட அவை வாழ்விடங்களில் காண்பது மறக்க முடியாத நினைவுகளைத் தரும்.
மனிதனால் தன் சொல்படி நடந்திடப் பழக்க முடியும் என நம்பிக்கை தரும் விலங்குகள் நாட்டிற்கும் மக்களுக்குக் காட்சிப் பொருள் ஆனது. அதன் வாழ்சூழலில் இருந்து பிரிக்கப்பட்டுச் செயற்கை முறையில் அவ்வசதிகளை உருவாக்கித் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டான் மனிதன். இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் பெரும் வணிகச்சந்தை இயங்குகின்றது. உழவுக்குப் பயன்படும் காளைகள், பால் தரும் மாடு, ஆடு, கோழி ஏன் நாய்க்குட்டிகள் வரை மொத்தமும் மனிதனின் தேவையைத் தீர்க்க அதன் இயல்பான வாழ்க்கையை பறித்தபின் கிடைக்கும் நன்மைகளே. இவற்றைத் தாண்டி விளையாட்டும், சாகசங்களும் காட்டும் சர்க்கஸ் என்பது குரங்கு முதல் சிங்கம், புலி, யானை என எதையும் விட்டு வைக்க வில்லை. தொடர்ச்சியாக விலங்குகள் இடம்பெறும் திரைப்படங்கள் பணம் கொட்டும் வழியைத் தந்து, வெற்றியும் வரவேற்பும் பெற்றது.
குறிப்பாக, தோற்றத்தில் பெரிதாக இருந்தாலும், அழகும், அறிவும் மிகுந்த யானை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக மாறி, ஒரு கட்டத்தில் கடவுளாகப் பார்க்கப்பட்டது. கோவில்களில், திருவிழாக்களில், திருமணங்களில் யானை இடம்பெறுவது வழக்கமாகிப் போனது. மனிதனோடு நட்புடன் பழகத் தொடங்கினாலும், தன் கோபத்தை அவ்வப்போது காட்டத் தவறியதும் இல்லை. சொல்படிக் கேட்டு மனிதனால் முடியாத வேலைகள் செய்யவும், வேடிக்கை காட்டவும், காடுகளில் சுற்றிப்பார்க்க யானைச் சவாரியும் என யானை அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகித்து வருகின்றது.
இத்தனை பயன் தரும், பண்புடன் பழகும் யானையின் தந்தங்கள் விற்பனையில் அதிக லாபம் தந்தது. யானை கொல்லப்பட்டது அதன் தந்தங்களுக்காக. அவை நகைகளாகவும் அழகுப் பொருள்களகவும் மாறின. யானைகள் அழிந்து, எண்ணிக்கையில் குறைந்து நாட்டின் வளங்கள் அழிந்து வருவது பற்றிய அக்கறை மக்களும், மக்களை வழிநடத்த வேண்டிய ஆட்சியாளர்களுக்கும் பெரிதாக இல்லை. இந்நிலை தொடருமேயானால், யானை போன்ற அரிய வகை உயிர்களைப் பற்றிச் செய்திகளாக மட்டுமே அறியமுடியும். அளவுக்கு மீறிய எதுவும் பயன் தராது. நன்மை, தீமை இரண்டும் ஒரு அளவினை மீறும் போது விளைவது இன்பம் தராது.
குறிஞ்சி நிலத்தின் உணவான மூங்கிலரிசியை யானை தின்னும் காட்சியைக் கண்டு, அதை ரசித்த புலவன் தினைக்கதிருக்கு உவமையாக யானையின் துதிக்கையை உவமைப்படுத்துகின்றான். இயற்கையோடு மட்டுமல்ல, அந்நிலங்களில் வாழும் விலங்கினங்களோடும் இயல்பாகவே வாழ்ந்தனர் என்பதை உணர்த்தும் வரிகளைக் கபிலர் உணர்த்துகின்றார்.
மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் இயல்போடு பொருந்தியே மக்கள் வாழ்வும் இருந்துள்ளது. வளரும் மரங்கள், மலர்கள், வாழும் பறவைகள் மற்றும் மிருகங்கள், விளையும் உணவுப் பொருள்கள், மக்கள் செய்யும் தொழில், பயன்படுத்தும் கருவிகள், இசை, தெய்வம், நீர் நிலைகள் எனத் தனிச்சிறப்புடன் விளங்கும் குறிஞ்சி நிலத்தில் காதல் எப்படி உருவாகும், எப்படியெப்படி எல்லாம் அக்காதல் வளரும் என்பதைக் கபிலர் சொற்களினால் காட்சிப்படுத்திருக்கின்றார். இத்தனை இயற்கை வளத்தையும் கொண்ட நிலத்தில் நடந்த காதல் கதையைக் கேட்டாலும், படித்தாலும் காதலின் சுவை தித்திக்கும் திகட்டாமல்.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
தினைக்காட்டிற்குக் காவல் போதல்
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை,
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி,
எல் பட வருதியர் என, நீ விடுத்தலின், (35-39)
அருஞ்சொற்பொருள்
நெல் கொள் – மூங்கிலின் விதைகளைத் தன்னிடம் கொண்டுள்ள (நெல்- நெல்லின் விதை)மூங்கில் அரிசி
நெடு - உயர்ந்த
வெதிர்க்கு - மூங்கில்
அணந்த யானை – அண்ணாந்த (மேல் நோக்கி நின்ற) யானை
முத்து ஆர் – முத்துக்கள் பொருந்திய (ஆர்- பொருந்திய)
மருப்பின் – கொம்பின், யானையின் கொம்பின்
இறங்கு கை கடுப்ப – இறக்கி வைத்த தும்பிக்கையைப் போன்று
துய்த்தலை – பஞ்சினைப் போன்று மேலிருக்கும் பகுதி
வாங்கிய - வளைந்த
புனிறு தீர் –ஈன்ற அணிமை தீர்ந்த, முதிர்ந்திருக்கும்
பெருங் குரல் – பெரிய கொத்துக்களை
நல் – நல்லதாகக்
கோள் - கொண்ட
சிறு தினை – சிறு தினை
படு –தாக்கும், உண்ண வரும்
புள் - பறவைகள்
ஓப்பி – விரட்டி விட்டு
எல் பட – கதிரவன் மறையும்
வருதியர் என – திரும்ப வருவீர்கள் என்று
நீ விடுத்தலின்- நீ சொல்லி அனுப்பியதால்.
அணந்த யானை - அணத்தல்- பின்னால் உள்ள இரண்டு கால்களில் நின்று கொண்டு, முன்னுள்ள கால்களை மேலே தூக்கி, உயரத்தில் உள்ள மூங்கில் நெல்லை உண்பதற்காகத் தன் துதிக்கையை நீட்டும். அப்படி முயற்சித்தும் எட்டாமல் போனதும் உடல் தளர்ந்து போய்த் துதிக்கையைத் தந்தத்தின் மீது வைத்துக் கொள்ளும்.
பாடலின் பொருள்
நெல் விதைகளைக் கொண்டுள்ள மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ளது. அதைத் தின்பதற்காக மேலே பார்த்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த யானை, ஓய்ந்துபோனதும் தன் துதிக்கையை முத்துக்கள் நிறைந்திருக்கும் தந்தத்தின் மீது இறக்கி வைக்கும். அப்படிக் கொம்பின் வழியாக இறங்கிய துதிக்கையைப் போலப் பெரிய வளைந்த கதிர்களைத் கொண்டிருக்கும் தினைப் பயிர்களைத் தின்னும் பறவைகளை விரட்டிவிட்டுச் சூரியன் மறையும் நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுங்கள், என்று நீ சொல்லியதால் நாங்கள் தினைக்காட்டிற்குச் சென்றோம்.
சங்கப்பாடல்களில் சொல்லப்பட்ட யானையின் இயல்பும், வாழ்முறையும் புதுப்பார்வையைத் தருகின்றது. அன்றைய மக்கள் தன் நிலத்தில் வாழும் உயிர்களின் வாழ்க்கையை, செயல்பாட்டைக் கூர்ந்து கவனித்தும், அதற்கு இடையூறாக இல்லாது ரசித்து வாழ்ந்துள்ளனர்.
கபிலர் போன்ற புலவர்கள், அப்படிக் கண்ட அரிய, சிறந்த காட்சிகளைத் தான் படைக்கும் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர். இது போன்ற உள்ளம் இனிக்கும் செய்திகளைப் படிக்கும் போது தமிழ் நிலத்தின் பெருமையை உணரமுடிகின்றது. அந்தக் காட்சிகளை நாம் காணமுடியுமா? என ஏக்கம் தோன்றுகின்றது. இதுபோன்ற இலக்கியங்கள் மீண்டும் வாசிக்கப்படும் போது நாட்டு வளங்கள் பற்றிய அக்கறையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தருகின்றது யானையின் தும்பிக்கை பலம்.
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் :காதல் என்பது பொதுவுடைமை