ஓவியர் மருதுவின் தூரிகையில்
காதல் கதை சொல்லட்டுமா?
காதலியல் பாடம் இது

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல்”
இதைத்தான் காலங்காலமாகக் காதலர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் காதல் மந்திரம். அதுவே காதல் எந்திரம் சுற்றிக் கொண்டிருக்கும் தந்திரம். தங்களுக்கு எதிராக வருகின்ற தடைகளைப் படைகளாக்கும் பண்பினைக் கொண்டது காதல். காதலைச் சொல்லுவது முதல் திருமணம் வரை எதிர்பாராத திருப்பங்களும், இவை நடக்கும் என முன்பே தெரிந்த துன்பங்களும், இடையூறுகளும் இடைவேலையின்றி வந்து கொண்டேயிருக்கும். அதிலும் யாருக்கு தெரியாது மட்டுமே பார்த்துக் கொள்ள முடிந்த அன்றைய காலத்தில் இரவும், நிலவும் பார்த்துக் கொள்ளும் நேரத்தில் அவளும், அவனும் பார்த்துக் கொள்ளப் படாதபாடு பட்டனர். யாரும் பார்க்காத இரவின் இதயத்தில் நுழையும் வாய்ப்பு அன்றும், இன்றும், என்றும் காதலர்களுக்கானது.
தன் தோழியின் காதல் கதையைச் சொல்லித் தாயிடம் காதலுக்குச் சம்மதம் பெறும் நோகத்தில் இருந்து சிறிதும் தவறாமல் பேசுகின்றாள் தோழி. எப்படிக் காதல் தோன்றியது, காதலன் ஊர்ச்சிறப்பு, அவனின் குணநலன்கள் எனத் தொடங்கி அனைத்தையும் சொல்லி அவனில்லாமல், அவனைக் காணாது அவள் தவிக்கும் தவிப்பையும், துன்பத்தையும் சொல்கின்றாள். இது போன்ற நல்லவனைக் காதலிக்கின்றாள். நாள்தோறும் இருவரும் சந்தித்துக் கொள்ளாமல் தனியே இருந்து தவிக்கின்றனர். அத்துன்பத்தின் அளவு கூடிக் கொண்டே போகின்றது. அப்படிச் சந்திக்காத காரணத்தினால ஒரு துளியும் வெறுப்புக் கொள்வதில்லை அவன். பிரிவிலும் காதலன்பின் தன்மை மாறாது வாழ்கின்றனர் இருவரும்.
உறக்கம் தொலைத்து, உள்ளம் வருந்தி, உடல் மெலிந்து வருந்திக் கொண்டிருப்பவளைக் காணமுடியாது நெஞ்சம் வெறுமையாகித் திரும்பிச் செல்கின்றான். அவனைக் காணாது தவிக்கும் காதலியை மலருக்கும், அவள் முகம் வாடிக் களைத்து, வருந்தித் தவிப்பதை மழைநீர் விழுந்து மலர் வாடுவதையும் பொருத்திக் கூறிக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் கபிலர். அவள் மூங்கில் போன்ற தோள்களில் சாயாது தூக்கம் தொலைத்தவன் காதலாடச் செல்லும் வழிகளில் நடப்பதைக் கபிலர் வரிகளில் அறிவது காதலைக் காதலாகச் சொல்லும்.
மூங்கில் தோள்களில் சேராது?
அதற்கொண்டு
அன்றை அன்ன விருப்போடு என்றும்
இரவரன் மாலையனே வருதோறும்
காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும்
நீதுயில் ஒழியினும் நிலவு வெளிப்படினும்
வேய்புரை மென்தோள் இன்துயில் என்றும்
பெறா அன் பெயரினும் முனியல் உறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையில்
தன்னிலை தீர்ந்தன்றும் இலனே. (237-245)
அருஞ்சொற்பொருள்
அதற்கொண்டு – அந்த உறவு தொடங்கிய
அன்றை அன்ன – முதல் நாள் போல
விருப்போடு என்றும் –விருப்பத்துடன் என்றும்
இரவரன் மாலையனே – இரவில் வருகின்ற இயல்புடையவன்
வருதோறும் – வரும்பொழுதெல்லாம்
காவலர் கடுகினும் - காவலர் காவல் காப்பினும்
கதநாய் குரைப்பினும் – சினங்கொண்ட நாய்கள் குரைப்பினும், கதம்- சினம்
நீதுயில் ஒழியினும் – தூக்கத்தில் இருந்து நீ விழித்தாலும்
நிலவு வெளிப்படினும் - நிலவு ஒளி பரப்பினாலும்
வேய்புரை மென்தோள் – மூங்கின் போன்ற மென்மையான தோளில்
இன்துயில் என்றும் – இனிய துயிலை என்றும்
பெறா அன் – அவன் பெறமாட்டான்
பெயரினும் – திரும்பிச் சென்றாலும்
முனியல் உறாஅன் – வெறுக்க மாட்டான்
இளமையின் இகந்தன்றும் இலனே - இளமைப் பருவத்தினால் எல்லை மீறியது
வளமையில் – தன் செல்வத்தினால்
தன்னிலை தீர்ந்தன்றும் இலனே – தன் நல்ல நிலையில் இருந்து விலகியதும் இல்லை.
பாடலின் பொருள்
அன்றைய நாளில் நடந்த அன்பின் உறவு தொடங்கி, முதல் நாள் கொண்ட ஆசை குறையாது, காதல் மாறாது நாள்தோறும் இரவில் காதலியைக் காண வருபவன். அப்படி அவன் வரும்பொழுதெல்லாம், காவலர்கள் காவல் இருப்பதினாலும், சினத்துடன் நாய்கள் குரைப்பினும், அயர்ந்து, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நீ விழித்திடுவாய், நிலவு வெளிச்சம் பரவி இருக்கும், என்பதினால் காதலியைப் பார்க்க முடியாது போகும். அவளது மூங்கில் போன்ற மென்மையான தோள்களில் சாய்ந்து பெறுகின்ற இனிய தூக்கம் கிடைக்காமல் வருத்தம் கொண்டு வெறுமையான மனத்துடன் திரும்பிச் செல்வான். அப்படிச் சென்றிட நேர்ந்தாலும் அவன் வெறுப்புக் கொள்வதில்லை. மேலும், தன் இளமையால் வரம்பு மீறிய செயலைச் செய்வதில்லை. மிகுதியான செல்வம் உடையவன் என்பதால் கர்வம் கொண்டு தன் நல்ல தன்மையிலிருந்து சிறிது கூட மாறியது இல்லை.
எளிய வரிகள்
முதல் நாள் இருவரும் தொடங்கிய
உறவின் காதல் ஆசை குறையாது,
இரவில் காதலியைக் காண
அவன் வரும்பொழுதெல்லாம்,
காவலர்கள் காவல் இருக்கும்
நாய்கள் குரைக்கும்,
தூக்கத்திலிருந்து நீ விழிப்பாய்,
நிலவு வெளிச்சம் ஒளிவீசும்
இத்தனையும் தாண்டி அவளைப்
பார்க்க முடியாது போகும்.
அவள் மூங்கில் தோள்களில் சாய்ந்து
தூங்கிட முடியாமல் வெறுமை
நிரம்பிய மனத்துடன் திரும்பினாலும்
வெறுப்புக் கொள்வதில்லை.
இளமையினால் வரம்பு மீறியதில்லை,
செல்வத்தினால் கர்வம் கொண்டு
தன் நல்ல தன்மை மாறியதில்லை.
நினைத்து நினைத்து அழுகின்றாள்
கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா,
ஈரிய கழுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய்,
நினைத்தொறும் கலுழுமால் இவளே. (245-251)
அருஞ்சொற்பொருள்
கொன் ஊர் – அச்சம் தரும் ஊரில்
மாய- பொய்யான, நிலையற்ற நிலை
வரவின் – இரவு நேரத்தில் சேர்ந்திருக்க வரும்
இயல்பு - தன்மை
நினைஇத் தேற்றி –சரியான ஒழுக்க முறையல்ல, திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த ஒழுக்கம் என்று தெளிவுற நினைத்து,
நீர் எறி மலரின் - மழைத்துளிகளால் தாக்கப்பட்ட மலர்கள் போன்று
சாஅய் – அழகு அழிந்து
இதழ் சோரா – இமை சோர்வுற்று
ஈரிய கலுழும் இவள் – ஈரத்தை உடையவளாய் அழுகின்றாள் இவள்.
பெரு மதர் மழைக் கண் – பெரிய பொலிவுடைய குளிர்ந்த கண்கள். மதர்- செழிப்பு- பொலிவு
ஆகத்து – மார்பின் மீது
அரிப் பனி உறைப்ப – கண்ணீர் வடிய
நாளும் - நாள்தோறும்
வலைப் படு மஞ்ஞையின் – வலையில் மாட்டிய மயிலைப் போன்று
நலம் செலச் சாஅய் – நலம் அழிந்திட மெலிந்து
நினைத்தொறும் – அவனை நினைக்கும்பொழுது
கலுழுமால் இவளே – அழுகின்றாள் இவள்.
பாடலின் பொருள்
அச்சத்தைத் தரும் ஊருக்குள் இரவு நேரத்தில் தலைவியைக் காண அவன் வருவது நிலையானதும் அல்ல, சரியான ஒழுக்க முறையும் அல்ல என்பதையெல்லாம் நினைத்து திருமணம் செய்து கொள்ள விரும்பி, மழைத்துளிகள் விழுந்து தாக்கிய மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமைகள் சோர்வடைந்து, கண்களில் ஈரத்தை உடையவளாகிக் கலங்கி வருந்துகின்றாள் இவள். அவளுடைய பெரிய குளுமையான கண்களில் இருந்து வழிகின்ற கண்ணீர் மார்பின்மீது வடிகின்றது. வலையில் மாட்டுகின்ற மயிலைப் போன்று, நலம் தொலைந்து, உடல் மெலிந்து, நாள்தோறும் அவனை நினைக்கும்பொழுதெல்லாம் அழுகின்றாள்.
எளிய வரிகள்
இரவு நேரத்தில் காதலாடுவது
நிலையானது அல்ல,
சரியான முறையும் அல்ல.
இதை அறிந்தவன்
திருமணம் செய்வதே சரியென
முடிவு செய்தான்
மழைத்துளிகள் விழுந்த
மலரின் அழகு அழிந்தது போல,
அவளும் மாறி நின்றாள்.
இமைகள் சோர்வுற்றுக் கலங்கி
வருந்திக் கண்ணீர் வடித்தாள்.
அவள் கண்களின் கண்ணீர்
மார்பின் வடிந்தோட,
வலையில் மாட்டுகின்ற
நலம் தொலைந்து, உடல் மெலிந்து
அவனை நினைத்து நினைத்து
பொழுதெல்லாம் அழுகின்றாள்.
வழியெல்லாம் வலிகள்
கங்குல்
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்.
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும்,இரை தேர் அரவமும்
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டலும்
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே. (251-261)
அருஞ்சொற்பொருள்
கங்குல் – இரவு நேரத்தில்
அளைச்செறி- குகையில் தங்கும்
உழுவையும் – புலியும்
ஆளியும் – யாளி- சிங்கம்
உளியமும் - கரடியும்
புழல் கோட்டு – உள்ளே துளை உள்ள கொம்பு
ஆமான் புகல்வியும் – காட்டுப்பசுவும், விலங்கின் ஏறு
களிறும் – ஆண் யானைகளும்
வலியின் தப்பும் – வலிமையால் கெடுக்கும்
வன்கண் வெஞ்சினத்து – கொடுஞ்சினத்துடன்
உருமும், சூரும் – இடியும், தீண்டி வருத்தும் கடவுள்களும்
இரை தேர் அரவமும் – இரையைத் தேடும் பாம்புகளும்
ஒடுங்கு – ஒடுக்கம்- மறைவிடம்
இருங் குட்டத்து – கருமையான குளங்களில்
அருஞ்சுழி வழங்கும் – அரிய நீர்ச்சுழிகளில் திரியும்
கொடும் தாள் முதலையும் – வளைந்த கால்களை உடைய முதலையும்
இடங்கரும் – ஒருவகை முதலை (Crocodile)
கராமும் - ஒருவகை முதலை (Alligator)
நூழிலும் – வழிப்பறி செய்வோர் கொன்று குவிக்கும் இடங்கள்
இழுக்கும் – வழுக்கிகின்ற இடங்களும்
ஊழ் அடி முட்டமும் – சரியான வழிப்பாதையாக இருக்கும், செல்லச் செல்ல காணாமல் போய்விடும் பாதைகளும்
பழுவும் – பேய்களும்
பாந்தளும் – மலைப் பாம்புகளும்
உளப்படப் பிறவும் – போன்றவை உள்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் – தப்பித்துவிட முடியாத துன்பம் தருபவை
அவர்- தலைவனின்
குழுமலை விடர் அகம் – கூட்டமான மலைகளில் உள்ள குகைகளில்
உடையவால் எனவே - இருப்பதால்.
பாடலின் பொருள்
குகையில் வாழும் புலிகளும், சிங்கங்களும், கரடிகளும், கோடுகளும், உள்துளை உடைய கொம்பு கொண்ட காட்டுமாடும், யானையும், இடியும், தெய்வமும், இரை தேடுகின்ற பாம்புகளும், மறைவாக உள்ள, கொடுமையான சுழிகள் உள்ள குளங்களில் வாழும் வளைந்த கால்களுடைய முதலையும், இடங்கர் எனப்படும் ஒருவகை முதலையும், வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் செல்வோரைக் கொன்று நிறைக்கும் இடமும், சரியான வழிப்பாதையாக இருக்கும் ஆனால் செல்லச் செல்ல காணாமல் போய்விடும் பாதைகளும், பேய்களும், மலைப் பாம்புகள் போன்றவைகள் அல்லாது வேறு பலவும் இரவு நேரத்தில் வருவோர் தப்பித்துக் கொள்ள முடியாத துன்பம் தருபவை. மேலும், அவருடைய நாட்டில் உள்ள மலையில் உள்ள பிளவுகளில் உள்ள இவை அனைத்தும், அவர் வழிகளில் இருப்பதினால் அதை நினைக்கும் போதெல்லாம் இவள் வருத்தம் கொண்டு அழுவாள்.
எளிய வரிகள்
குகைகளில் வாழும்
புலிகள், சிங்கங்கள்,கரடிகள், கோடுகள்,
கொம்பில் உள்துளையுடைய காட்டுமாடுகள்,
இடி, தெய்வம், உணவு தேடும் பாம்புகள்,
குளங்களில் வாழும் வளைந்த காலுடைய முதலைகள்,
வழிப்பறி செய்யும் திருடர்கள் நடமாட்டம்,
சரியானதாகச் சென்று மறைந்திடும் பாதைகள்,
பேய்கள், மலைப்பாம்புகள், இன்னும் பலவும்
இரவு நேரத்தில் தப்பித்துக் கொள்ள முடியாத
துன்பத்தைத் தருபவை.
அவன் நாட்டிலிருந்து வரும் வழியில்
மலைப் பிளவுகளில் இவையனைத்தும்
துன்பம் தரும் என நினைத்து நினைத்து
அதை நினைக்கும் போதெல்லாம்
அவள் வருந்தி அழுகின்றாள்.
காதலர்கள் சந்தித்துக் கொள்வதற்குள் எத்தனை தடைகள், பிரிவுத் துயரங்கள். அவையனைத்தையும் தாண்டிக் காதல் கைகூடும்வரை ஏற்படும் இடையூறுகளை முறியடித்து வெற்றிகொள்வது எளிதானதல்ல. அதைக் காதலில் எளிதாக்கித் தருவது தோழி. திருமணம் செய்து கொள்ளும் நினைவுகளில் உறவாடும் இரு உள்ளங்களை வாழ்வில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் தோழியின் பங்கினை, அவள் பாங்குறப் பேசும் பண்பினைச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல்களில் தனிச்சிறப்புண்டு கபிலரின் குறிஞ்சிப்பாட்டு.
ஒருவழியாகத் தாயிடம் தோழியின் காதல்கதையில் நடந்தவற்றை நடந்தபடியே தோழி சொல்வது போலக் கபிலர் சொல்லியிருக்கின்றார். இதுவரை காணாத, யாரும் சொல்லாத திரைப்படத்தைப் பார்த்தது போல் அமைத்து, ஒரு சொல் கூட வீணாகாமல், பார்த்துப் பார்த்துக் கபிலர் எழுதியத பாட்டுக்கதை குறிஞ்சிப்பாட்டு. காதல் வாழ்வினைத் திருமணத்தில் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளைச் சொல்லுகின்ற இலக்கியம் குறிஞ்சிப்பாட்டு; காதலியல் பாடம் சொல்லும் ஆதித்தமிழ்ப்பாட்டு.
புதிதாய் மலர்ந்தது நாள்கள்
இருவருள் மட்டும்
காதல் சொல்லி.
அன்புகள் நிறைத்தனர்
அவனும், அவளும்
காதல் நிறைத்து.
உள்ளம் உள்ளம்
காதல் கள் குடித்து
”உள்ளங்கள்” ஆனது.
காதலே வாழ்கவென்று
விழிகள் பேசும்
காதல் மொழி.
சொக்கித் திரியுமந்த
மனங்கள் இணையும்
நாள் என்று?
காதலின் ஆதியான
இந்தச் சங்கக்காதலின்
வேதம் புதிது.
கதை வளரும் காதலில்; காதலர்கள் வாழ்வில் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் - வழித்துணைக்கு நானும் வரவா?