‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’
கொங்கு மண்டலத்தில் திமுக
1949ல் ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவுடன் இருந்து, திமுகவின் தொடக்க உறுப்பினர் ஆகிவிட்ட தாத்தா சாமிநாதன், அன்று முதலாகவே கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பழையகோட்டை தளபதி அர்ஜுனும், தாத்தாவும் அந்தப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக பற்றியும் அறிஞர் அண்ணா பற்றியும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமங்களில் கூட திமுக கூட்டங்களுக்கு அண்ணாவை பங்கேற்கச் செய்துள்ளனர். ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்-ம் எங்கள் பகுதிகளில் அதிகமாக பிரச்சாரம் செய்தவர் ஆவார். இவர்கள் எல்லோருமே, குட்டப்பாளையத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியும் இருந்துள்ளார்கள். தேர்தல் காலத்தில் தாத்தா நிதி திரட்டி, அண்ணா – கலைஞரிடம் வழங்கியுள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டி கைதாகியும் உள்ளார் தாத்தா சாமிநாதன்.
இவ்வளவுக்கும், எங்கள் குடும்பத்தார் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்கள். ஆக, உள் வீட்டுக்குள்ளே எதிர்ப்புகளைச் சந்தித்து தான் கொங்கு பகுதியில் திமுக வளர்வதற்கு பாடுபட்டுள்ளார்கள்.
1967 தேர்தலில் அறிஞர் அண்ணா வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும், தாத்தாவையும் அமைச்சரவையில் சேர வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாத்தாவுக்கு முழு நேரமாக சென்னை செல்ல மனமில்லை. அப்போதே கால்நடை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் எங்கள் குடும்பம் தீவிரமாக இருந்தது. தாத்தா சாமிநாதனுக்கும் காங்கேயம் கால்நடைகள் மீது தனிப்பிரியம் உண்டு.
அமைச்சர் என்றால் முழு நேரமும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால் அதை வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவே, தாத்தாவுக்குப் பிடித்தமான கால்நடைத் துறை அபிவிருத்திக் கமிட்டிக்கு நியமித்தார் அறிஞர் அண்ணா. பின்னர் , தமிழ்நாடு தானிய சேமிப்புக் கிடங்கு இயக்குனராகவும் பணிபுரிந்தார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட விரிவாக்கத்தில் தாத்தாவின் பங்கு மிகப்பெரிதாகும்.
அதே போல் வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை விரிவாக்கத்திற்கும் வழி வகை செய்தார். இப்படி அண்ணா – கலைஞர் ஆட்சியில், திறம்பட திமுகவில் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு, கலைஞருக்கு வந்தது போலவே, மிசா சட்டம் தாத்தாவுக்கும் வில்லனாக வந்தது. தாத்தா சாமிநாதனை மிசாவில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தார்கள். கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், இந்திரா காந்தி அம்மையார் மிசா சட்டத்தை வாபஸ் பெற்று, நாடு முழுவதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.
தமிழ்நாட்டில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் தாத்தா சாமிநாதனை மட்டும் விடுதலை செய்யவில்லை. என்னென்னமோ காரணம் சொல்லி அவருடைய விடுதலையை தடுத்தி நிறுத்தினார்கள். திமுகவை விட்டு விலகி வந்தால் விடுதலை என்றெல்லாம் பேரம் பேசப்பட்டது. ஆனால் தாத்தா மறுத்து விட்டதால் சிறையிலேயே வைக்கப் பட்டார்.
மிசா சட்டம் ரத்தாகி, 1977ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் அறிவித்தாகி விட்டது. தாத்தாவின் சிறைவாசம் மட்டும் முடிவுக்கே வரவில்லை. எவ்வளவு நாள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைய மாட்டேன் என உறுதியாக இருந்துள்ளார். பழநி பாராளுமன்றத் தொகுதியில் சி.சுப்ரமணியம் போட்டியிடுகிறார். தாத்தாவை விடுதலை செய்தால் அவருடைய வெற்றி பாதிக்கப்படும் என அஞ்சியுள்ளார்கள். ஆகவே விடுதலை செய்யாமல் சிறைவாசத்தை நீட்டிப்பு செய்துள்ளனர்.
இங்கே தான் கலைஞர், தன்னை அரசியல் சாணக்கியர் என்று நிருபித்துள்ளார். பழநி பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சி.சுப்ரமணியத்தை எதிர்த்து, திமுக சார்பில், தாத்தா சாமிநாதனையே வேட்பாளராக அறிவித்தார். அதையடுத்து, உடனடியாகவே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் கடைசியாக விடுதலையான மிசா கைதியான தாத்தா, அன்று முதல் ‘மிசா’ சாமிநாதன் எனப் பெயரும் பெற்றார்.
ஒரு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸைப் பணிய வைத்த கலைஞரின் அரசியல் மதிநுட்பம் பற்றி , அப்பாவிடம் கேட்டு அறிந்த போது, எனக்கு மெய் சிலிர்த்தது.
கலைஞரின் பயணத்துடன் தொடர்கிறேன்.
– கார்த்திகேய சிவசேனாபதி
A1TamilNews
கடந்த வாரம்
‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 1 ‘மிசா சாமிநாதன்’