‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 1 ‘மிசா சாமிநாதன்’
ராபின்சன் பூங்கா… திமுக தொடக்கம்…. குட்டப்பாளையம் ‘மிசா’ சாமிநாதன்!
நமக்குப் பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரியும்போது சொல்ல இயலாத ஒரு வித வலியும், வருத்தமும் நம்மை ஆட்கொள்ளும். அந்த நேரத்தில் அவருக்கும் நமக்குமிடையேயான நெருக்கத்தைப் புதிதாக உணர்வோம். இருவரும் சம்மந்தப்பட்ட கடந்த காலம் முழுவதும் கண் முன்னால் வரும். தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மறைந்தது முதல், இத்தகைய எண்ணங்களும் கடந்த கால நிகழ்வுகளும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது.
என்னுடைய வாழ்வில் முதன் முதலாக அத்தகைய சோகம் ஏற்பட்டது எங்கள் தாத்தா குட்டப்பாளையம் சாமிநாதன் மறைந்த போதுதான். அப்போது நான் பள்ளி மாணவன். அவர் என்னைச் சீராட்டி வளர்த்தது முதல் துடுக்குத்தனத்துக்காக அவரிடம் வாங்கிக் கட்டியது, தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்கு வந்து சென்றது என அவருடைய முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்தது அவர் மறைந்த பிறகுதான்.
1949ம் ஆண்டு அறிஞர் அண்ணா, சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, குடந்தை கே.கே. நீலமேகம், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், என்.வி.என்.சோமு ஆகிய ஐம்பெரும் தலைவர்களுடன், மிகக் குறைவான எண்ணிக்கையில் அங்கே இருந்தவர்களில் எங்கள் தாத்தா குட்டப்பாளையம் சாமிநாதனும் முக்கியமானவர். கட்சியின் தொடக்க உறுப்பினரும் ஆவார். எங்கள் உறவினர் பல்லடம் – பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அய்யாதான், அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அங்குதான் 70 ஆண்டுக்கால பாரம்பரியமிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
அறிஞர் அண்ணா 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தபோது அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் திமுகவின் முதல் வேட்பாளர் எங்கள் தாத்தா குட்டப்பாளையம் சாமிநாதன்தான். தாத்தா கேட்காமலேயே, எங்கள் ஊர் அருகே முத்தூர் என்ற ஊரில் அறிஞர் அண்ணா, வெள்ளக்கோயில் தொகுதி வேட்பாளராகத் தாத்தா சாமிநாதனை அறிவித்தார். 21 ஆயிரத்து நானூற்று ஐம்பத்து இரண்டு வாக்குகள் கூடுதலாக பெற்று, தாத்தா சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் முக்கிய அமைச்சராக இருந்த சர்க்கரை மன்றாடியார் உட்பட காங்கிரஸ் அரசியல் பாரம்பரியமிக்க எங்கள் குடும்பத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தாத்தா சாமிநாதனும் பழையகோட்டை தளபதி அர்ஜூன் அவர்களும் கொங்கு பகுதியில் திமுகவில் முதன்மையானவர்கள்.
அறிஞர் அண்ணாவின் அறிமுகத்தால், தந்தை பெரியாரையும் முழுமையாக படித்துத் தெரிந்தவர் தாத்தா. நான் சிறுவனாக இருந்த போது, திமுக கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு வந்து செல்வார்கள். எப்போதும் வீட்டில் அரசியல் சூழல் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் யார் யார் என்பதை, நான் தெரிந்து கொண்டது தாத்தாவின் மறைவுக்குப் பிறகுதான்.
தாத்தா மறைந்த, என்னுடைய நடுநிலைப் பள்ளி காலம் முதல் அரசியலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டது. அதன் பின்னரே, எங்களுடைய குடும்பத்திற்கும் திமுகவுக்கும் இடையேயான தொடர்பை, அப்பா மூலம் முழுமையாகத் தெரிந்து கொண்டேன்.
தாத்தா சாமிநாதன் மீது தலைவர் கலைஞர் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் நெருக்கத்தையும், கலைஞருடன் நேரடியான சில அனுபவங்கள் மூலம் புரிந்து கொண்டேன். கலைஞர் அவர்கள், அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், எந்த ஒரு தகவலையும் எப்படிக் கையாண்டார். அதற்குரிய தீர்வை எப்படி அமல்படுத்தினார் என, பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் கிடைக்கப் பெற்றேன்.
அவர் அமல்படுத்திய சட்டங்களையும் திட்டங்களையும் உற்று நோக்கும் போது, எத்தகைய தீர்க்கதரிசி கலைஞர் என்பதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைய ஏற்பட்டுள்ளது.
நான் கண்ட தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி, இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமையாகவும் கருதுகிறேன்.
எங்கள் தாத்தா, எங்கள் அப்பா, பேரனாகிய நான், என்னுடைய மகளாகிய கொள்ளுப் பேத்தி என நான்கு தலைமுறையாக கலைஞருடனான வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடரும்…
– கார்த்திகேய சிவசேனாபதி
A1TamilNews