அமெரிக்காவில் மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்!

நியூயார்க்(யு.எஸ்): 1838ம் ஆண்டு மே மாதம் 5 ம் தேதி தமிழர்களை ஏற்றி வந்த முதல் கப்பல் கயானா கடற்கரையை தொட்டது. அன்று முதல் அங்கு குடியேறிய தமிழர்கள், வழி வழியாக மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். கயானாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற நெருக்கடியான நேரத்தில் அங்கிருந்து தமிழர்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயரத் தொடங்கியுள்ளார்கள். புலம் பெயர்ந்து வந்த அமெரிக்காவிலும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் மே மாத இறுதியில் திருவிழா நடத்துகிறார்கள். நியூயார்க்
 

அமெரிக்காவில்  மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்!

நியூயார்க்(யு.எஸ்): 1838ம் ஆண்டு மே மாதம் 5 ம் தேதி தமிழர்களை ஏற்றி வந்த முதல் கப்பல் கயானா கடற்கரையை தொட்டது. அன்று முதல் அங்கு குடியேறிய தமிழர்கள், வழி வழியாக மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.

கயானாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற நெருக்கடியான நேரத்தில் அங்கிருந்து தமிழர்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயரத் தொடங்கியுள்ளார்கள். புலம் பெயர்ந்து வந்த அமெரிக்காவிலும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் மே மாத இறுதியில் திருவிழா நடத்துகிறார்கள்.

நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 5 ஆயிரம் கயானா தமிழர்கள் வசித்து வருகிறார்களாம். நியூயார்க் குயின்ஸ் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

கோவிலில் மூலவராக மிகப்பெரிய மாரியம்மன் திருவுருச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உடன் பரிவார தெய்வங்களாக, மதுரை வீரன் சாமி, கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், கங்கை அம்மன் உருவச்சிலைகளும் உள்ளன.

உருவம் இல்லாமல் பச்சை சாத்தி, நாகூர் மீரானுக்கும் ஒரு சன்னதி அமைத்துள்ளார்கள். தங்கள் மூதாதையர் வழிபட்டு வந்த முறையிலேயே தாங்களும் வழிப்பட்டு வருவதாக அந்த தமிழர்கள் தெரிவித்தனர்.

180 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்து முஸ்லீம் வேறுபாடில்லாமல் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.

பதினைந்தாவது ஆண்டாக, மாரியம்மன் திருவிழா, தமிழக கிராமப்புறங்களில் போலவே, நியூயார்க்கின் முக்கியப் பகுதியான குயின்ஸில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்றது.

வாழை இலை, இளநீர், தென்னம்பாளை, வேப்பிலை, பிரம்பு, வெற்றிலை பாக்கு, மஞ்சத் தண்ணீர் என அத்தனையும் தமிழக கிராமப்புற வழிபாட்டு முறையில் இருந்தது.

கோவில் பூசாரியும், தமிழகத்தில் உள்ள வழக்கத்தைப் போல் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே வழி வழியாக தொடர்கிறார்கள்.

அம்மன் அருள் ஏற்றுவதற்கு உடுக்கை, தப்பு அடித்து, தமிழில் பாடி வரவழைக்கின்றனர். அருள் வந்த பூசாரி, கோவிலை வலம் வந்து ஆடி, குறி சொல்கிறார். வந்திருந்த பெருவாரியான மக்கள் தங்கள் குறைகளைக் கூறி அருள் பெற்றுச் செல்கின்றனர்.வேப்பிலை அடித்து பரிகாரம் சொல்லப்பட்டது.

அருள் வந்து ஆடிய சாமி தமிழிலேயே குறி சொன்னது. அருகில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார்.நெருப்புடன் சூடத்தை, எடுத்து எடுத்து வாயில் போட்டபடியே ஆடினார்.

மதுரைவீரனுக்கு சாராயப் படையலும்( கயானாவிலிருந்து தருவிக்கப்பட்ட ரம்) உண்டு. சேவல் பலியிடுதலும் நடைபெற்றது. ஒவ்வொரு வகை வழிபாட்டின் போதும் மஞ்சத் தண்ணீரை வாரி இறைக்கிறார்கள்.

கோவில் பூசாரியுடன் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் என ஒவ்வொரு சாமிக்கும் ஒருவர் அருள் வந்து ஆடினார்கள். அவர்களில் மிகவும் வயது குறந்த இளைஞரும் ஒருவர் ஆவார். சில பெண்களுக்கும் அருள் வந்து சாமி ஆடினார்கள்.

விழா முடிவுற்றதும் நம்ம ஊரில் ஊற்றுவதை போல் கூழ் ஊற்றினார்கள். மாலையில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையலில் பல்வேறு விதமான இனிப்பு வகைகள், பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டன.

கோவில் உள்ளே நுழைந்ததும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்திற்குள் வந்தது போல்வவே இருந்தது. அங்கு பார்த்த அனைவரும் நம் பக்கத்து ஊர்க்காரர்கள் போலவே தெரிந்தார்கள்.

180 ஆண்டுகள் ஆனாலும் தலைமுறை தலைமுறையாக தமிழ் பெயர்களை இன்னும் சூட்டி வருகிரார்கள். கோவிலில் பார்த்த தமிழர்களின் பெயர்கள் வீராசாமி, வீரப்பன், பெருமாள் என கிராமத்துப் பெயர்களாகவே இருந்தது.

மதுரை வீரன் என்ற பெயரிலே இரண்டு பேரைக் காண முடிந்தது. இந்தத் தமிழர்களுக்கு தமிழில் சரளமாக பேசத் தெரியாது என்பதை நம்பவே முடியவில்லை..

கயானாவில் மாரியம்மன் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறதாம். அங்கு கிடா பலியிடுதல் உண்டாம்.

நியூயார்க் நகரில் தமிழக கிராமத்து மாரியம்மன் திருவிழா நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. கோவில் பற்றிய மேலதிக விவரங்களை http://madrasi.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.

எங்கள் முன்னோர்கள் வழிகாட்டிய படி மாரியம்மன் திருவிழாவை மட்டும் விட்டு விடாமல் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம் என்று விழாக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

நியூயார்க்கிலேயே இப்படி என்றால், கயானாவில் மூன்று நாட்கள் திருவிழா எப்படி இருக்கும் என்று வியப்படைய வைக்கிறது.

180 வருடங்களுக்கு முன்னால் தமிழக கிராமப்புறமும், திருவிழாக்களும் எப்படி இருந்திருக்கும் என்பதை கயானா தமிழர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.

படங்கள் : ஸ்டெஃப்னி ஜாக்சன் Stephanie L. Jackson, The Graduate Center, City University of New York (CUNY)

Tamils migrated to Guyana about 179 years ago are still continue to celebrate festivals as followed by their ancestors. Those who migrated from Guyana to USA are also following the same tradition. They have built Mariamman Temple in Queens area of New York and have celebrated 15th year of the festival recently.

[ See image gallery at a1tamilnews.com]

From around the web