20 ஆயிரம் கோடி பெண்களின் வங்கி கணக்கில் பணம் போட்டாரா மோடி? – என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!

பிரதமர் மோடியை புகழ்வதாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டியுள்ளார் லதா ரஜினிகாந்தின் அக்காள் மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நாடக நடிகை மதுவந்தி. Be Positive என்ற தலைப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் இவரின் 11 வது வீடியோவில் பெரும் “கணக்குப் பிரச்சனை” ஏற்பட்டுள்ளது. ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் எல்லாம் வருகிறது என்று பிரதமரின் விளக்கேற்றும் கோரிக்கைக்கு காரணம் சொன்னவரும் இவர் தான். தற்போது கோடிகளில் கணக்குச் சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் சென்னையின் பிரபல தனியார்
 

20 ஆயிரம் கோடி பெண்களின் வங்கி கணக்கில் பணம் போட்டாரா மோடி? – என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!பிரதமர் மோடியை புகழ்வதாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டியுள்ளார் லதா ரஜினிகாந்தின் அக்காள் மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நாடக நடிகை மதுவந்தி.

Be Positive என்ற தலைப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் இவரின் 11 வது வீடியோவில் பெரும் “கணக்குப் பிரச்சனை” ஏற்பட்டுள்ளது.  ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் எல்லாம் வருகிறது என்று பிரதமரின் விளக்கேற்றும் கோரிக்கைக்கு காரணம் சொன்னவரும் இவர் தான். தற்போது கோடிகளில் கணக்குச் சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் சென்னையின் பிரபல தனியார் பள்ளியின் தாளாளராகவும் இருக்கும் மதுவந்தி.

“ஜன் தான் திட்டத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(ஏப்ரல்4ம் தேதி) இதிலிருந்து 40 சதவீதம் பணத்தை (அதாவது 12 ஆயிரம் கோடி ரூபாயை) 20 ஆயிரம் கோடி பெண்கள் கணக்கில் போட்டுள்ளார்கள். இது ஆதாரப்பூர்வமான தகவல். டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்துள்ளது. எல்லோருக்கும் இங்கிலீஷ் படிக்கத் தெரியும். போய் படியுங்க.

உஜ்வாலா திட்டத்தில்  8 ஆயிரம் கோடி பெண்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களுடைய வங்கிக் கணக்கில் மூன்று மாத கேஸ் வாங்குவதற்கு போடப்பட்டுள்ளது” 

– உன்னிப்பாக கவனியுங்கள் ப்ளீஸ் என்ற வேண்டுகோளுடன் மதுவந்தி கூறியுள்ள புள்ளிவிவரங்கள்  இது.

முதல் தப்பு, அவர் சொன்ன 20 ஆயிரம் கோடி பெண்களும் , 8 ஆயிரம் கோடி பெண்கள் கணக்கும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையே 135 கோடி பேர் தான் . அதில் சரி பாதிக்கும் கொஞ்சம் கூடுதல் என்றால் கூட 68 கோடி பெண்கள் என்று கணக்கிடலாம்.

ஒருவேளை 8 கோடி பெண்களைத் தான் தவறுதலாக 8 ஆயிரம் கோடி பெண்கள் என்று வாய் தவறி சொல்லி விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். 68 கோடி பெண்கள் உள்ள நாட்டில் 8 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த உஜ்வாலா திட்ட உதவியை செய்திருந்தால் அது பெருமைக்குரிய விஷயமா? மிகப்பெரிய பாரபட்சமான செயல் அல்லவா. மீதம் உள்ள 60 கோடி பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்?  

அப்படியே 8 கோடி பெண்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயை பிரித்துக் கொடுத்தார்கள் என்றாலும் கூட, ஒருவருக்கு வெறும் 625 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும். ஏப்ரல் மாத நிலவரப்படி ஒரு கேஸ் சிலிண்டர் விலை 744 ரூபாய். ஒரு சிலிண்டர் வாங்குவதற்கு கூட 119 ரூபாய் குறைகிறது. எப்படிப் பார்த்தாலும் கணக்கு இடிக்கிறதே மேடம்?

ஒருவேளை 119 ரூபாயை யாரிடமாவது கடன் வாங்கி, ஒரு சிலிண்டர் வாங்கினால் கூட ஒரு குடும்பத்திற்கு அந்த கேஸ் சிலிண்டர் மூன்று மாதத்திற்கு வருமா? என்பதை குடும்பத் தலைவிகளே தீர்மானிக்கட்டும். 

இன்னொரு கணக்கிலும் பெரிய முட்டை  வாங்கியுள்ளார். 20 ஆயிரம் கோடி பெண்கள் என்பது வாய் தவறி சொன்னதாகவே வைத்துக் கொள்வோம். ஒரு வேளை அது 20 ஆயிரம் பெண்கள் என்றால், 12 ஆயிரம் கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் கணக்கில் வரும். யாருப்பா அந்த அதிர்ஷடசாலி பெண்கள்?. இது மிகப்பெரிய ஊழல் ஆகி விடுமே?

பெரிய பெரிய எண்களைச் சொன்னால், கூட்டிக் கழிச்சு பார்க்காமல் வாய் பிளந்து கேட்டுக் கொள்வார்கள் சாமானிய மக்கள் என்று நினைத்து விட்டாரோ என்னவோ?. காமெடி பண்றதுக்கு இது நாடகமோ, சினிமாவோ இல்லீங்க மேடம்!. புள்ளியியலுக்கு அடிப்படையே கணக்குப் பாடம் தான். அதிலேயே வீக்கா இருக்குறவங்க சொல்ற புள்ளி விவரம் எல்லாமும் பூஜ்யத்திற்குத் தான் சமம். 

பிரதமர் மோடிக்கு நீங்க போட்டுள்ள இந்த கணக்குகள் தெரியவந்தால் ரொம்ப வருத்தப்படுவார் என்பது மட்டும் நிச்சயம்!

– மணி

A1TamilNews.com

From around the web