தாய்த் தமிழ்நாட்டிற்காக ஒன்று திரண்ட உலகப் பெண் கவிஞர்கள்!!
கொரோனா தொற்று உலகைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் நலனுக்காக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் ஒன்று திரண்டு நிதியுதவி செய்துள்ளனர்.
பெண்களின் படைப்பாற்றலை அடையாளம் கண்டு அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டு, உலகப் பெண் கவிஞர் பேரவை, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில், புதுச்சேரி ஒருதுளிக்கவிதை முனைவர் அகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்படும் "வல்லினச் சிறகுகள்" என்ற மாதாந்திர மின்னிதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
சமுதாயத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் துணை நிற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், முனைவர் அகன் அவர்களின் வழிகாட்டுதலில், இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பெண் கவிஞர்கள் இணைந்து நிதி திரட்டினார்கள். இத்திட்டப்பணியை அமெரிக்காவிலிருந்து இரம்யா ரவீந்திரனும், இந்தியாவிலிருந்து மஞ்சுளா காந்தியும் ஒருங்கிணைத்தார்கள்.
ஜுலை 22, 2021 அன்று ₹50,000/- நன்கொடைக்கான காசோலை, புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி மூலம் ஏழை மக்களுக்கு நாள்தோறும் உணவளித்து வரும் வள்ளலார் சபைக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வல்லினச் சிறகுகள் சார்பில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், இணைப் பேராசிரியர், அன்னை தெரசா கல்லூரி செய்திருந்தார். காசோலையைப் பெற்றுக்கொண்ட திரு. கோவிந்த் வல்லினச் சிறகுகளுக்கு நினைவுப் பலகை ஒன்றைப் பரிசாக அளித்தார்.
ஜுலை 27, 2021 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. கே. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் ₹1,03,000/- நன்கொடையில் வாங்கிய உயிர்வளி செறிவாக்கி (oxygen concentrator) ஒப்படைக்கப்பட்டது. இது கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து உதவ வேண்டி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் முனைவர் பிரின்ஸ், முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி, வி. இளவரசி சங்கர், ஜிப்மர், பரீதா, தன்னார்வலச் சட்ட ஆலோசகர் ஆகியோர் மற்றும் கடலூர் அரிமா சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தம் உரையில் "பெண்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று மகிழ்ச்சியோடு சிற்றுரை ஆற்றினார்.
- ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, அமெரிக்கா