கலிஃபோர்னியாவில் திருவள்ளுவர் சிலை எப்போது? பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் அமையுமா?
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் வளைகுடாப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக, சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் செயலாளர் புகழ் அன்பு கூறியுள்ளார்.
சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தற்போது செயலாளராக உள்ள புகழ் அன்பு, அடுத்த ஆண்டுக்கான தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மன்ற உறுப்பினர்களுக்கு தான் செய்துள்ள பணிகளையும், மன்றத் தலைவராக பொறுப்பு கிடைத்தால் செய்து முடிக்கப் போகும் பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.
சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் வசிக்கும் வளைகுடாப் பகுதியில், தமிழ் மன்றத்தில் ஏன் வெறும் 400 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளார்கள்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள புகழ் அன்பு, இந்த ஆண்டு “Town Hall” கூட்டம் நடத்தி அமெரிக்க நடைமுறையான “Agree to Disagree” என்ற சித்தாந்தத்தை முதன் முறையாக மன்ற வரலாற்றில் நடத்திக் காட்டியதை பெருமையுடன் பகிர்கிறார். மாற்றுக் கருத்து கொண்டவர்களும் தாய்மொழி தமிழுக்காக இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு அடையாளமாக இந்த நிகழ்வைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபை உதயமான சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு சிலையும், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” கல்வெட்டும் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுபவர், தமிழகத்திலிருந்து சிலை தருவிப்பதற்கான நன்கொடையாளரை கண்டறிந்து ஒப்புதல் பெற்று விட்டதாகவும், சிலை அமைப்பதற்கான இடத்திற்கு அனுமதி மற்றும் அமைப்பதற்கான திட்ட வேலைகளுக்காக பிரத்தியேக குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு தலைவர் பொறுப்புக்கு வாய்ப்பளித்தால் “நிகழ்ச்சிகள் நடத்தும் மன்றம்” என்பதை “சேவை செய்யும் மன்றம்” என மாற்றுவேன் என்று கூறி அதற்காக, தமிழ் சமூகம், சுகாதாரம் மற்றும் வெளி அரங்கம், அமெரிக்காவில் பிறந்த தமிழர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கியம் என 6 வெவ்வேறு துறைகளுக்காக புதிய 6 நிர்வாகக் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவேன் என்கிறார்.
கவுண்டி பொருட்காட்சித் திடலில் மாபெரும் பொங்கல் விழா, தமிழ் மன்றத்திற்காக தனியாக ஒரு சமுதாயக் கூடம், வளர்ச்சி பெற்ற சிறந்த மன்றமாக மாற்றுவது என மொத்தம் 7 திட்டங்களை முன் வைத்துள்ளார். "If you build, They will come" என்ற தத்துவத்தின் அடிப்படையில், எனது RaisingTheBar செயல்திட்டங்களை படிப்படியாக செய்யும்பொழுது, உறுப்பினர் எண்ணிக்கையும் படிப்படியாக மேலே உயரும். 400 ஆக உள்ள உறுப்பினர்கள் 4 ஆயிரமாக உயரும், ஏன் 40 ஆயிரம் ஆனாலும் ஆச்சரியமில்லை என்றும் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக வீடியோ மூலம் மன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள புகழ் அன்புவிடம் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி கேட்டறிந்தோம்.
“நான் அலுவலகத்திற்கு தினம் தோறும் பயணம் செய்யும் போதெல்லாம் சான் ஃபிரான்சிஸ்கோவை கடக்கும் போது, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபை (United Nations) உருவான இந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழ் கல்வெட்டு அமைத்தால் உலக ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பேன். உடன் ஒரு திருவள்ளுவர் சிலையும் வைக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது.
தமிழ் மன்றத்தில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதற்கான வேலைகளைத் தொடங்கினேன். இங்கே தனியார் இடத்தில் ஒரு கல்வெட்டோ, சிலையோ அமைப்பது என்றால் எந்த அரசு அனுமதியும் இல்லாமல் செய்து விடலாம். ஆனால் பொது இடத்தில் நிறுவ வேண்டுமென்றால், நகராட்சி மற்றும் அரசுத் துறைகள் உள்பட பல்வேறு அனுமதிகள் அடுத்தடுத்து பெற வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
சான் ஃபிரான்சிஸ்கோவில் முக்கியமான சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அரசு அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டில் திருவள்ளுவர் சிலையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் கல்வெட்டும் சான் ஃப்ரான்சிஸ்கோவில் அமைக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்,” என்று புகழ் அன்பு சொன்னார்.
கன்னியாகுமரியில் இந்தியப் பெருங்கடலில் அய்யன் திருவள்ளுவர் தமிழகத்தை நோக்கி கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருப்பது தமிழர்களின் வரலாற்று அடையாளமாக உள்ளது. கலிஃபோர்னியாவில் பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமையும் போது, “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று உலகளாவில் வணிகம் செய்த தமிழர்களின் பெருமையை உணர்த்தும் தானே!