காதல் என்ன குற்றாலத்து குரங்கா? இல்லவே இல்லை!!

 
love

காதல் என்பது…. 

காதல் என்ன கொட்டும் 
பனியா 
புவனம் விழுந்து உருகி 
வற்ற  

காதல் என்ன குளிரும் 
காலமா  
மாதங்கள் கடந்து மாறிப் 
போக 

காதல் என்ன காட்டுத் 
தீயா  
பற்றிப் பரவி வெந்துத் 
தணிய  

காதல் என்ன காலை 
மலரா 
மாலை வந்ததும் வதங்கி 
உதிர 

காதல் என்ன வானத்து 
நிலவா 
பௌர்ணமி பூத்து அமாவாசை 
ஆக 

காதல் என்ன கிழக்கு 
கதிரா 
பகலில் வாழ்ந்து இரவில் 
தொலைய  

காதல் என்ன நாடோடிக் 
காற்றா 
கண்கள் தழுவி கடந்து 
நழுவ 

காதல் என்ன ஆழ்கடல் 
புயலா 
பொங்கி எழுந்து பொசுக்கென 
அணைய  

காதல் என்ன நீளநெடுஞ்
சாலையா 
பயணம் முடிந்து பாதியில் 
பிரிய 

காதல் என்ன மின்மினியா 
மின்னலா 
பட்டெனத் தோன்றி சட்டென 
மறைய 

காதல் என்பது அட்லாண்டிக் 
அலையா 
கரையுரசி கொஞ்சி கடலுக்கே 
திரும்ப 

காதல் என்ன குற்றாலத்து 
குரங்கா 
ஓரிடம் தங்காது கிளைக்குக்கிளை  
தாவ

காதல் என்ன வண்ணப்பூச்சியா 
வண்டா 
தேன்தின்னப் பின்னே வேறுப்பூ  
தேட 

காதல் என்ன நீலமலை   
ஆறா 
பூமியில் நில்லாமல் பூங்கடல் 
ஓட 

காதல் என்ன கலங்கரை 
விளக்கா 
கரைவந்தப் பின்னால் கப்பலை 
விலக 

காதல் என்ன கருநாவல் 
மரமா
பழருசி குறைந்தால் வெட்டி 
வீச 

காதல் என்பது மல்லிகை 
மணமா 
ஒருநாள் மயக்கி மறுநாள் 
மாய    

இல்லை 
இல்லவே இல்லை 

காதல் என்பது தாய்த்தமிழ் 
உறவு
இதயத்து துடிப்பு இன்பத்தமிழ் 
ஊற்று 
இதழ்களின் பேச்சு இயக்கிடும் 
மூச்சு 
இறுதிவரை நிற்கும் இடைவிடா 
உறவு 

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web