நிச்சயயிக்கப்படும் திருமணத்தில் இருந்து காப்பாத்துங்க... ஊரு முழுக்க பேனர் வைத்து வைரலான இளைஞர்.!

 
Malik

இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர், தனக்கு ‘மணமகள் தேவை’ என்று சாலையோரமாக விளம்பரப்பலகையை வைத்து உள்ளது வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நின்றாலும், நாள்தோறும் நடக்கும் வைரல் சம்பவங்களின் பட்டியல் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில், இங்கிலாந்தில் உள்ள 29 வயது இளைஞர் ஒருவர், தனக்கு ‘மணமகள் தேவை’ என்ற விளம்பரத்திற்காக இணையதளம் தொடங்கி சாலையோரமாக விளம்பரப்பலகையே வைத்துவிட்டார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மாலிக். பெற்றோர்களால் நிச்சயயிக்கப்படும் திருமணம் மீது ஆர்வம் இல்லாத அவர், பிர்மிங்கம் பகுதியின் முக்கிய சாலைகளில் 20 அடி நீளத்திற்கு பெரிய விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார்.
அதில், “என்னை பெற்றோர்களால் நிச்சயயிக்கப்படும் திருமணத்தில் இருந்து காப்பாற்றவும். findMALIKawife.com” என்ற இணையதளத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விளம்பரப்பலகை வைரலாகி வருகிறது. அவர் குறிப்பிட்டிருக்கும் இணையதளத்திற்கு சென்று பார்த்தால் முகமது மாலிக் பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும். அந்த இணையதளத்தின் முகப்பு பகுதியில் “இது வேடிக்கை அல்ல. உண்மையாகவே நான் எனக்கான ஒரு மணமகளை தேடி கொண்டிருக்கிறேன்” என்ற வாசகங்களோடு வரவேற்கிறது.

அதனை தொடர்ந்து, மாலிக் குறித்த சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அவர் எதிர்ப்பார்க்கும் மணமகள் பற்றிய விருப்பங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

விளம்பரத்தையும், இணையதளத்தையும் பார்த்து நிறைய பேர்தொடர்பு கொண்டதாக மாலிக் தெரிவித்திருக்கிறார். அவர்களில் ‘அந்த மணமகளை’ காணவில்லை என்ற காரணத்தால், தொடர்ந்து தேடப்போவதாக தெரிவித்திருக்கிறார். மாலிக்கின் விளம்பரப்பலகை 90ஸ் கிட்ஸ்களின் ஃபீலிங்கை கிளப்பிவிட்டிருக்கிறது.

நெட்டிசன்கள் சும்மா இல்லாமல் இந்த விளம்பரப்பலகை செய்தியை அதிகம் பகிர்ந்து மீம்ஸ்களும், கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். கூடவே, சிலர் வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web