அமெரிக்கப் பாராளுமன்றத்தில் அதிபர் பைடன்! வரலாற்றில் முதன்முறையாக அதிபருடன் இரு பெண்கள்!!

 
அமெரிக்கப் பாராளுமன்றத்தில் அதிபர் பைடன்! வரலாற்றில் முதன்முறையாக அதிபருடன் இரு பெண்கள்!!

ஜனவரி மாதம் 20ம் தேதின் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் முதன் முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தன்னுடைய 100 நாள் ஆட்சியின் சாதனைகளை விவரித்தவர், அடுத்த திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசி, அவர்களுடைய ஆதரவைக் கோரினார்.

100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி என்ற குறிக்கோளுடன் தொடங்கிய ஆட்சியின் பயணம் 220 மில்லியன் தடுப்பூசிகள் போட்டு சாதனை படைத்ததாகச் சொன்னார். 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட 65+ வயது முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர், பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வாய்ப்பை மீண்டும் அவர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கட்டமைப்பு, உயர் தொழில்நுட்பம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு, கல்வி, பெண்களுக்கான உரிமை, சமூக நீதி என தன்னுடைய முக்கியத் திட்டங்களை விவரித்தார் பைடன். வேலைவாய்ப்புகள் விரைவாகத் திரும்பி வருவதாகவும், 6 சதவீதமாக ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்றும் பேசினார்.

3 வயது முதல் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்படும் என்றவர், 12ம் வகுப்புக்குப் பிறகு கூடுதலாக 2 ஆண்டுகள் பட்டயப்படிப்புக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். எதிர்காலப் போட்டியை சமாளிக்க, குழந்தைகளுக்கு 14+ 2 ஆண்டுகள் கல்வி கட்டாயம் அவசியம் என்றும் குறிப்பிட்டார். குழந்தைகளுக்காக வருமான வரி சலுகையை சுட்டிக்காட்டிய அதிபர் பைடன், இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு 7200 டாலர்கள் சேமிப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

அமெரிக்க பாராளுமன்ற மரபுப்படி, அதிபர் பேசும் போது அவருக்கு பின் இருக்கையில் உறுப்பினர்கள் அவைத் தலைவரும், துணை அதிபரும் அமர்ந்திருப்பது வழக்கம். உறுப்பினர் அவைத் தலைவராக நான்சி பெலோசியும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் என இரண்டு பெண்மணிகள் அதிபருக்கு அருகே அமர்ந்து பேசிய அமெரிக்காவின் முதல் அதிபர் உரை என்ற வரலாற்றை பதிவு செய்துள்ளது இன்றைய நிகழ்வு.

From around the web