இறந்தவர்களின் பற்கள் மூலம் பல லட்சம் வருமானம்... புதுமையான தொழிலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா பெண்..!

 
Jacqui-Williams

ஆஸ்திரேலியாவில் இறந்தவர்களின் பற்கள், முடி, சாம்பல் ஆகியவற்றை கொண்டு இளம் பெண் பல லட்சம் வருமானம் பார்த்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைச் சேர்ந்தவர் 29 வயதான இளம்பெண் ஜேக்யூ வில்லியம்ஸ். மெல்போர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் நகைகள் மற்றும் பொருட்கள் வடிவமைப்பில் டிப்ளோமா முடித்துள்ள இவர் கிரேவ் மெட்டலம் ஜூவல்லரி என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். அதன்மூலம் தான் தயாரிக்கும் வித்தியாசமான கைவினைப்பொருட்களால் பலரையும் ஈர்த்து வருகிறார்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இறந்தவர்களின் பற்கள், சாம்பல் மற்றும் முடி போன்றவற்றை கொண்டு செயின், மோதிரம் போன்ற ஆபரணங்களை தயாரிப்பதுடன் அதனை லட்சங்களில் விற்பனை செய்து கல்லாக் கட்டி வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு படிப்பை முடித்த ஜேக்யூ வேலைத்தேட முடியாமல் பல சிரமங்களை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் இறந்துபோன் நண்பரின் நினைவுகள் தொடர்ந்து தொந்தரவு செய்ய அப்போது தான் தனது கிரேவ் மெட்டலம் ஜூவல்லரியை தொடங்கியுள்ளார் ஜேக்யூ வில்லியம்ஸ்.

தங்களது அன்புக்குரியவர்கள் இறந்தப்பின் அவர்களது நினைவாக பலரும் பலவிதமான பொருட்களை வைத்திருப்பர். மேலும் பலர் பிரிந்த அன்புக்குரியவர்கள் நினைவாக தங்களிடம் எதுவும் இல்லையே என்று வருத்தப்படுவோரும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகதான் இந்த தொழிலை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனிதர்களுக்கும் மட்டுமின்றி இறந்த செல்லப்பிராணிகளின் நினைவாக அவற்றின் பற்கள், முடி ஆகியவற்றைக் கொண்டும் செயின், மோதிரம் தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

இறந்தவர்களின் பற்கள், முடி, சாம்பல் போன்ற எச்சங்களை எடுத்து வரும் ஜேக்யூ வில்லியம்ஸ், ஒரு மோதிரத்தை செய்வதற்கு ஏறக்குறைய ஆறு முதல் 8 வாரங்கள் வரை எடுத்துக்கொள்கிறார். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அவர் செய்யும் ஒவ்வொரு ஆபரணங்களுக்கும் இந்திய மதிப்பில் 20 ஆயிரம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஆபரணங்களில் வெள்ளி, தங்கம், வைரம் போன்றவையும் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஜேக்யூ செய்து கொடுக்கும் செயின் மற்றும் மோதிரங்களின் தரம் மற்றும் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

வருத்தத்தில் இருக்கும் வாடிக்கையாளரின் மனவாட்டம் போக்க, தான் இந்த தொழிலை மகிழ்ச்சியுடன் செய்துவருவதாக் அவர் கூறினாலும், ஒரு சிலர் அதற்கு எதிர்கருத்தையும் முன்வைக்கின்றனர். இறந்தவர்களிடம் பெறப்படும் பற்கள், முடிகள் கொண்டு செயின், மோதிரம் போன்ற ஆபரணங்கள் செய்வது தங்களுக்கு வெறுப்பளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் தான் செய்து வரும் தொழில் மூலம் தனக்கு மனதிருப்தி கிடைப்பதுடன் நல்ல வருமானமும் கிடைப்பதால் இதனை தொடர்ந்து செய்ய உள்ளதாக குறிப்பிடுகிறார் வெறும் முடி, சாம்பல் மற்றும் பற்களின் மூலம் பல லட்சம் பார்க்கும் இளம்பெண் ஜேக்யூ.

From around the web