களத்தில் இறங்கிய பெண்கள்!! கலிஃபோர்னியாவில் வளைகுடா தமிழ் மன்றம் தேர்தல்!

 
களத்தில் இறங்கிய பெண்கள்!! கலிஃபோர்னியாவில் வளைகுடா தமிழ் மன்றம் தேர்தல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவின் முக்கியமான தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலும் நடைபெற உள்ளது. கலிஃபோர்னியா சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தலில் இரண்டு பெண்களும் போட்டியில் களம் இறங்கியுள்ளது தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது

சிலிக்கான்வேலியான வளைகுடாப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் முக்கியமானதாகும். 1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா தமிழ்மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தலைவர், துணைத்தலைவர்- நிர்வாகம், துணைத்தலைவர்-கலாச்சாரம்,  செயலாளர், பொருளாளர், கன்வீனர் என 6 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சரவண சுதந்திரா, சௌந்தர்யா சந்திரன் ஆகிய  இரு பெண்கள் முறையே துணைத் தலைவர் - நிர்வாகம்  மற்றும் கன்வீனர் பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

2014ம் ஆண்டு முதல் மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருப்பதாகக் கூறும் சுதந்திரா, அடுத்த தலைமுறைத் தமிழர்களை (இளைஞர்களை) தமிழ் மன்றத்தில் இணைத்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று கூறுகிறார். மேலும், மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளுக்கான திட்டங்களையும் கைவசம் வைத்துள்ளதாக குறிப்பிடுகிறார். தமிழ் மன்றத்தின் உறுப்பினர்களை அதிகரிப்பது, தமிழ் சமுதாயக் கூடம் அமைப்பது, பேரிடர் காலங்களில் உதவி மற்றும் தற்போதைய நிகழ்ச்சிகளை சிறப்பாக செயல்படுத்துவது என்று தன்னுடைய திட்டங்களாக அறிவித்துள்ளார் சுதந்திரா. போக்குவரத்துத் துறையில் அரசு ஊழியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார சரவண சுதந்திரா.

கன்வீனர் பொறுப்புக்கு போட்டியிடும் சௌந்தர்யா, முன்னணி 500 நிறுவனங்களில் ஒன்றில் மூத்த ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் இளங்கலையும் அமெரிக்காவில் நியூஜெர்ஸி  ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் படித்தவர். தான் பணிபுரியும் நிறுவனத்தில் உலக மொழிகளில் ஒன்றாக  தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளதாக பெருமையுடன் நினைவு கூர்கிறார். பல்வேறு சமுதாய நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சிகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக கூறும் சௌந்தர்யா, அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.பன்முகத் தன்மைக்காகவும் அனைவரும் இணைந்து செயல்படுவதற்கும் தன்னுடைய அதிகபட்ச ஆதரவு உண்டு என்றும் உறுதியாகக் கூறியுள்ளார் சௌந்தர்யா சந்திரன்.

இந்த இரு பெண்கள் தவிர தலைவர் பொறுப்புக்கு குணசேகர் பதக்கம் மற்றும் புகழ் அன்பு போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர்- நிர்வாகம் பொறுப்புக்கு சரவண சுதந்திராவுடன் அருள்வடிவேல் வேணுகோபால், சரவணன் முருகையா போட்டியில் உள்ளார்கள். துணைத்தலைவர்-கலாச்சாரம் பொறுப்புக்கு கோவிந்த் கோபால், ராஜேஷ் ராமசாமி, ரூபன் மோர்கன், தெய்வேந்திரன் முருகன் ஆகிய நால்வர் போட்டியிடுகிறார்கள்ள். செயலாளர் பொறுப்புக்கு சங்கர் நடராஜன், உதயபாஸ்கர் நாச்சிமுத்துவும் பொருளாளர் பொறுப்புக்கு அறிவொளி திருவேங்கடம் மற்றும் வினோத் குமார் போட்டியில் உள்ளனர். கன்வீனர் பொறுப்புக்கு சௌந்தர்யா சந்திரனுடன் ஸ்ரீனிவாசன் வரிப்பிரெட்டி போட்டியிடுகிறார்.

மொத்தம் 15 பேர் போட்டியில் உள்ள இந்தத் தேர்தலில் இரண்டு பெண்கள் துணிச்சலுடன் களம் இறங்கியுள்ளது வரவேற்கத் தக்கது. அதுவும், அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்து கொண்டு, தமிழுக்காக சமுதாயப் பணி ஆற்ற முன் வந்துள்ள இந்தப் பெண்களுக்கு ஆதரவு தருவது கடமை அல்லவா! சங்ககாலம் போல் பெண்களும் முக்கியப் பொறுப்புகளில் பங்கேற்பது, தமிழ்ச் சமுதாயத்தின் விரைவான முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

A1TamilNews

From around the web