பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடை... போராட்டம் நடத்தியவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு

 
Afghan

பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக  இருக்கும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தாலிபான்கள் அமைத்துள்ளனர். இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தாலிபான்களின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளிலும்  எச்சரிக்கையையும், தடையையும் பொருட்படுத்தாமல் எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தாலிபான்கள் தடை விதித்தனர். இதையடுத்து, உயர்நிலை பள்ளிகளில் படிக்க சிறுமிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர்நிலை பள்ளிக்கு வெளியே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிய பெண் ஆர்வலர்களின் தன்னிச்சையான இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எதிராக துப்பாக்குச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளிக்குள்ளே அடைக்கலம் புகுந்தனர்.

இதுகுறித்து காபூல் சிறப்பு படையின் தலைவர்  மவ்லவி நஸ்ரல்லா கூறுகையில், “போராட்டத்தில் பாதுகாப்பு அலுவலர்களுடன் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மற்ற எல்லா நாடுகளையும் போல நம் நாட்டிலும் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்கள் முன்பு பாதுகாப்பு அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்” என  கூறினார்.

From around the web