இந்தியர்களே வெளியேறுங்கள்! இல்லையேல் சுட்டுத் தள்ளுவோம்!! அமெரிக்காவில் இனவெறி அச்சுறுத்தல்!!
ஐடி துறையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்ட இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் . இல்லேயேல் அலுவலகத்திலேயெ சுட்டுக் கொல்வோம் என்று அச்சுறுத்தல் விடுத்து இந்தியர் ஒருவரின் வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்பட்டுள்ள விவகாரம் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டல்லாஸ் மாநகரத்தில் உள்ள இர்விங் நகரத்தில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெச்1 பி, எல்1, ஹெச்4 EAD போன்ற விசாக்களில் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஜெஃபர்சன் பூங்கா, காந்தி பூங்கா என்றழைக்கப்படும் அளவுக்கு அந்தப் பகுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது.
இங்கு நடைப்பயிற்சி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் இந்தியர்கள் விளையாடுவது வழக்கம். காந்தி பார்க் என்று அழைக்கப்பட்ட இடத்தில் மகாத்மா காந்தியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவினால் ஏராளமான அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ள நிலையில் ஐடி ஊழியர்கள் பெரும்பாலானோர் வீடுகளிலிருந்தே வேலையைத் தொடர்ந்து வருகின்றனர். சிலருக்கு வேலை பறிபோயும் உள்ளது, சிலர் இந்தியா திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஐடி துறையில் பணியில் இருக்கும் இந்தியர்கள் மீது அமெரிக்கர்களில் சிலரின் கோபம் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இர்விங் நகரில் வசித்து வரும் ஒரு குறிப்பிட்ட இந்தியருக்கு தபாலில் ஒரு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “ ஐடி மற்றும் பிற துறைகளில் இந்தியர்களிடமும் சீனர்களிடமும் அமெரிக்க குடிமக்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும் தாமதிக்காமல் நாட்டை விட்டு வெளியேறுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அலுவலகத்தில், குடியிருப்புகள் , நீச்சல்குளம் அல்லது விளையாட்டு மைதானத்தில் உங்களைச் சுடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We have been made aware of a letter received by a member of the community. Right now this is an isolated incident. If you have received a letter let us know. We take harassment and hate crime extremely serious. An investigator has been assigned to this case. 1/2 pic.twitter.com/Nc6WgDJNgE
— Irving Police Dept. (@IrvingPD) August 31, 2020
இப்படி ஒரு கடிதம் வந்திருப்பதை இர்விங் நகர போலீசார் உறுதி செய்துள்ளனர். ” நகர குடிமகன் ஒருவருக்கு இந்த கடிதம் வந்த விவரம் எங்கள் கவனத்திற்குத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக இருக்கிறது. உங்களில் யாருக்காவது இத்தகைய கடிதம் வந்தால் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இனவெறி குற்றங்களை மிகவும் சீரியஸாக நாங்கள் பார்க்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை யார் எழுதியிருக்கிறார், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற ஏதாவது விவரங்கள் தெரியவந்தால் விசாரணை அதிகாரி கன்னிங்காம்-க்கு ccunningham@cityofirving.org என்ற இமெயிலுக்கு தெரியப்படுத்துங்கள்,” என்று இர்விங் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை வட கரோலைனா மாநிலத்தின் கேரி நகரில் நீச்சல்குளம் அருகே நடைப்பயிற்சி சென்ற அமெரிக்கத் தமிழர் சிவராஜு வெள்ளியங்கிரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதும் ஒரே மாதிரியாக இருப்பதால், அமெரிக்க இந்திய சமூகத்தில் பரபரப்பும் ஒரு வித அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கேரி நகர காவல்துறையின் முதல் கட்ட அறிக்கையில், சிவராஜ் கொலையில் இனவெறியோ அல்லது குடும்ப வன்முறையோ காரணம் இல்லை. அவர் மீது குறிவைக்கப்பட்டதாகவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இர்விங் நகரத்தில் வந்துள்ள கடிதத்தில், குடியிருப்பவரின் பெயரைக் குறிப்பிடாமல் வீட்டு முகவரிக்கு சரியாக அனுப்பப்பட்டுள்ளதால், அங்கே வசிப்பவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர் தான் இதை அனுப்பியிருக்க முடியும் என்று கருத வேண்டியுள்ளது.