இனிமேல் இந்த வேலைகள் எல்லாம் வெப் காமிராவுக்கு முன்னால தான்! வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 
NewYork Train

உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனாவினால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கணிணித் துறையினர் மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் 27 சதவீதம் பேர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 30 சதவீதத்தினரும், சீனாவில் 28 சதவீதத்தினரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் அமெரிக்காவில் 53 சதவீதத்தினரும், இங்கிலாந்து உள்பட ஐரோப்பாவில் 52 சதவீதத்தினரும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பார்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை இனி மிகவும் பரவலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Zoom உள்ளிட்ட வீடியோ கான்ஃபரன்ஸ் டெக்னாலஜிகள் தாராளமாக அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், சக ஊழியர்களுடன் வீடியோ மூலம் உரையாடும் முறை ஏற்கனவே பழக்கத்தில் வந்து விட்டது. வீட்டிலேயே தனியாக அலுவலக அறை அமைத்துக் கொண்டு பணியாற்றுவது அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் கூடுதல் நேரம் மட்டுமல்லாமல், அதிக வேலைகளும் செய்ய நேரிடுகிறது என்ற ஊழியர்களின் குற்றச்சாட்டுகளையும் புறம் தள்ளிவிட முடியாது. இது நிறுவனங்களுக்கு சாதகமான நிலை ஆகும். காலையிலேயே எழுந்து அரக்கப்பரக்க  பேருந்து, ரயில், டாக்சி அல்லது கார் என வாகனத்தைப் பிடித்து அலுவலகம் செல்லும் கூட்டம் குறைவதால் சாலைப் போக்குவரத்திலும் மாற்றம் ஏற்படும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அலுவலகம் வர வேண்டும் என்ற அறிவிப்புகளும் வரத்தொடங்கியுள்ளது. அரசுத்தரப்பிலிருந்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய கோரிக்கைகள் வருவதாகவும் கூறப்படுகிறது.  என்ன இருந்தாலும் மீண்டும் 2019ம் ஆண்டு போல் ஐடி துறையினர் நாள் தோறும் அலுவலகம் செல்லும் நிலை இனி வராது என்பதே பரவலான கருத்தாக உள்ளது. ஏனைய துறைகளிலும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

From around the web