வளைகுடா தமிழ் மன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு! சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து ஒரு தமிழ்க்குரல்!!
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிர்வாகக் குழுவை முடிவு செய்யும் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையில், இப்பகுதியில் வசித்து வரும் தமிழ் ஆர்வலனாக சில எண்ணங்களை என் சுற்றத்தின், என் சமூகத்தைக் கட்டமைக்கும் சக தமிழர்கள் முன் வைக்கிறேன்.
தமிழ் மொழி, தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் என அனைத்தும் பல கோணங்களில் இருந்தும் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவது வரலாற்றில் உண்டு. அது இப்பொழுதும் தொடர்கிறது. இப்படி நடக்கும் போதெல்லாம் தமிழர்களின் ஒன்றுபட்ட சிந்தனையும் செயலுமே நம் அடையாளத்தையும் அதன் சிறப்பையும் உலகுக்கு மேலும் உரக்கப் பறைசாற்றி வருகிறது. இந்த ஒன்றுபட்ட செயலை வழி நடத்துவதில் தமிழ்மன்றத்தின் விரிந்த பார்வையும் தமிழைப் போன்ற ஆழ்ந்த சிந்தனை வளமும் இன்றியமையாதது.
ஒரு தமிழ் மன்றம் என்பது தமிழர்களின் பொழுதுபோக்குக் கூடமாகவும், அவரவர் ஆர்வங்களை நிறைவு செய்யும் கருவியாக மட்டும் இருப்பது இனத்தின் மேன்மைக்கு வழி செய்யாது. தமிழ்நாட்டின் வாசம் அறியாது அயல்மண்ணில் பிறந்து வளரும் தலைமுறையின் நீடித்த வளர்ச்சிக்கு வழி வகுப்பதே தமிழ் மன்றத்தின் தலையாயப் பணியாக இருத்தல் வேண்டும் எனக் கருதுகிறேன். இதையே வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதே நோக்கோடு இத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை ஒரு மொழி ஆர்வலனாக அலசிப் பார்க்கிறேன்.
இதுவரை இந்தியாவில் தன்னார்வலக் குழுக்களுடன் இணைந்து தமிழ்மன்றம் பல நன்மைகளை விதைத்துள்ளது. அமெரிக்காவில் கலைநிகழ்ச்சிகள் பல நிகழ்ந்துள்ளது. இவை உறுப்பினர்கள் தங்கள் தனிஆர்வத்துடன் செய்பவை. இதைச் செய்பவர்கள் மன்றத்தில் இல்லாவிட்டாலும் இந்த தன்னார்வலச் செயல்கள் நிகழ்ந்திருக்கும்.
இதை அடுத்த தலைமுறையினர் தொடர்ந்து செய்யும் கட்டமைப்பைத் தருவதாக தலைவர் வேட்பாளரான புகழ் அன்பு சொல்கிறார். Empowering the Young Generation. இது மன்றத்தின் நோக்கத்தில் ஒரு நிலையான பலன்மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். தனி மனிதரைச் சார்ந்து இல்லாமல் மன்றம் என்ற அமைப்பைச் சார்ந்து செயல்திட்டங்கள் அமைய உதவும். இதுவரை இருந்த தலைமைக்குழு இதைச் செய்திருக்கலாம்.
களமிறங்கும் இரண்டு பெண் வேட்பாளர்களுள் ஒருவர் - துணைத்தலைவர் வேட்பாளர் சரவண சுதந்திரா. இவருக்கு எதிரே இருக்கும் சரவணன். சுதந்திரா பொதுமக்களுடன் நேரடியாக பணியாற்றும் அரசுத் துறையின் Transportation Planner. இளம்தலைமுறையினர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமே போதாது. மன்ற வளர்ச்சியில் அவர்களின் நேரடி பங்களிப்பு வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைக்கிறார் சுதந்திரா. மேலும் தலைமைக் குழுவில் பெண்கள் அமர்வதன் மூலம் மன்றத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயரும்.
துணைத்தலைவர் பண்பாடு - இப்பதவிக்கு கோவிந்த் கோபால், தெய்வேந்திரன் இருவரும் போட்டியிடுகின்றனர். இதில் கோவிந்த் பண்பாட்டுப் பணிகளை களத்தில் புரிந்தவர். விரிவான தமிழர் பண்பாடு சார்ந்த திட்டங்களை முன்வைக்கிறார். கோவிந்த் இப்பதவிக்கு ஒருமனதான தேர்வு.
செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் உதயபாஸ்கர் தமிழ்மன்றத்தின் விழுதுகள் இதழைத் தொடங்கி மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரின் மொழி இலக்கியப் பங்களிப்பையும், நீடித்த செயலாக்கங்களை திட்டமிடும் திறனையும் இவருடைய கடந்தகால மன்றப் பணிகளே சொல்லும். இவருக்கு எதிராகக் களமிறங்கும் சங்கர் நடராசனை விட உதயபாஸ்கரே செயலாளர் பதவிக்குச் சிறப்பான தேர்வு.
பொருளாளர் பதவிக்கு இரண்டு பெயர்கள் தென்படுகிறது. வினோத் குமார் மற்றும் அறிவொளி திருவேங்கடம். மன்ற கணக்குவழக்கு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் வெளிப்படைத்தனம் மற்றும் ஆவணப்படுத்துதலை அறிவொளி முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து வினோத் குமாரும் அதையே முன்வைத்தார். ஆனால், ஒரு கூடுதல் புள்ளியாக பொருளாளரின் பங்கு மன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதிலும் இருக்க வேண்டும் என்கிறார் அறிவொளி. மேலும் புரவலர் மற்றும் விளம்பரதாரர் எண்ணிக்கையை மேம்படுத்தும் நோக்கத்தையும் சொல்கிறார். இருப்பதை நிர்வாகம் செய்வது மட்டுமல்லாமல் அதைப் பெருக்குவதையும் எண்ணுவதால் அறிவொளியின் திறமை பொருளாளர் பதவிக்குக் கட்டாயம் தேவையாகிறது.
இரண்டாவது பெண் வேட்பாளரான சௌந்தர்யா அமைப்பாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஸ்ரீநிவாசன் களத்தில் உள்ளார். முதலில் சௌந்தர்யா வெளியிட்ட அறிக்கையை ஒத்தே பின்னர் வெளியான ஶ்ரீநிவாசனின் அறிக்கையும் தெரிகிறது. வேட்பாளர் இருவரும் ஒப்பிடத்தக்க செயல்திட்டங்கள் பற்றிப் பேசுகிறார்கள். இருப்பினும் சௌந்தர்யா அவர்கள் முன்வைக்கும் பெண்கள் வளக் குழுக்கள் திட்டம் பெண்களிடம் மட்டுமல்லாது அவர்கள் மூலம் இல்லத்துப் பிள்ளைகள் வழியாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. ஒரு அமைப்பாளராக சௌந்தர்யாவின் பங்களிப்பு தமிழ் மன்றத்துக்குத் தேவை.
இத்தேர்தலை மன்றத்தின் அரசியாலாகக் கருதாமல் அயல்நாட்டு மண்ணில் வசிக்கப் போகும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை வளத்திற்காக அவர்களின் பண்பாட்டுச் செழிப்புக்காக திட்டமிடும் ஒரு செயலாக அணுகுவோம். சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். நமது அமைப்புகளின் தலைவர்கள், வாக்களிப்பவர்களை விட, வாக்களிக்காதவர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது நமது வாக்குகளை செலுத்தி புதியதொரு பாதையை அமைப்போம்.
- வாலறிவன், சான் ஃப்ரான்சிஸ்கோ, யு.எஸ்.ஏ.
A1TamilNews