ஜெப் பெசோஸ், எலன் மாஸ்க் உள்பட அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு... ரகசியத்தை வெளியிட்ட புரோபப்ளிகா!!

 
USA

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் உள்பட அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ‘புரோபப்ளிகா’ பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கமற்ற புலனாய்வு பத்திரிகையான ‘புரோபப்ளிகா’ அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் வரி விவரங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள் பல ஆண்டுகள் எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிக்க ஜி-7 நாடுகள் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்கு பிறகு, அமெரிக்க செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு குறித்த இந்த தகவல் வெளியாகியிருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

புரோபப்ளிகா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்த ரகசிய அறிக்கையில் “25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில் வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துகின்றனர். மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள். சில சமயங்களில் எதுவும் செலுத்துவதில்லை” என தெரிவித்துள்ளது.

அதன்படி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்தவில்லை என்றும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் 2018-ம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர தொழிலதிபரும் நியூயார்க் நகரின் முன்னாள் மேயருமான மைக் புளூம்பெர்க், பிரபல முதலீட்டாளர் வாரன் பபெட் போன்றோரும் சில ஆண்டுகள் வருமான வரியை முற்றிலுமாக தவிர்த்தவர்கள் என 'புரோபப்ளிகா' கூறுகிறது.

போர்ப்ஸ் பத்திரிக்கையின் தரவுகளை பயன்படுத்தி இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறும் ‘புரோபப்ளிகா’, 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 25 பணக்கார அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு 401 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததாகவும், ஆனால் அவர்கள் அந்த ஆண்டுகளில் வெறும் 13.6 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வரி செலுத்தியதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டில் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் தனது மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டத்துக்கு பணத்தை திரட்டுவதற்கும் பணக்கார அமெரிக்கர்களுக்கான வரியை அதிகரிக்கப் போவதாக கூறிவரும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் அமெரிக்க பணக்காரர்களின் வரி விபரங்களை வெளியிட்டது சட்டவிரோதமானது என வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சென் சாகி “ரகசியமான அரசாங்க தகவல்களை அங்கீகரிக்கப்படாத வகையில் வெளியிடுவது சட்டவிரோதமானது. மத்திய புலனாய்வு போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இது பற்றி விசாரிப்பார்கள்” என கூறினார்.

From around the web