ஒமைக்ரானால் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் - அமெரிக்க தொற்று நோய் நிபுணர்

 
DrFauci

அமெரிக்காவில் ஒமைக்ரானால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று தொற்று நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் மற்றும் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 61.7 சதவீதம் மக்கள் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.

ஒமைக்ரான்  பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,

“அதிவேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சிவிட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஒமைக்ரானால் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும்.

ஒமைக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை குறைவாகவே ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதனை எளிதாக எண்ணி நடந்து கொள்ளக்கூடாது. மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை அதிகரிக்கக்கூடும்.

அமெரிக்க மக்கள், இப்போது விடுமுறை காலம் என்பதால்  ஒமைக்ரான் மற்றும் கொரோனாவுக்கு எதிராக தாங்கள்  பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது. அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. அந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்.” என்று கூறினார்.   

முன்னதாக 2 மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக 50 கோடி கருவிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web