இது அறிவுள்ளவர்கள் செய்யக் கூசும் விஷயம்!

‘ஜவகர்லால் நேரு ஒரு தலைவரே அல்ல; உண்மையில் நாட்டின் சீரழிவுக்கு காரணமே நேருதான்’ என்கிற பிரசாரம் ஒரு தீவிரத்துடன் நடக்கிறது. தலைவர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து பிடுங்கி எடுத்து சமகால வெளியில் நிறுத்தி மதிப்பிடுவது அறிவுள்ளவர்கள் செய்யக் கூசும் விஷயம். அதையும் தாண்டி ஏதோ சாதித்த காரணத்தால்தான் அன்றைய தலைவர்கள் பலரும் இன்றும் நினைவுகூரப் படுகிறார்கள். மதங்களை மத நம்பிக்கைகளை சடங்குகளை வெறுத்து ஒதுக்கியவர்; அடுத்தடுத்த தலைமுறைகளிலும் மதச்சார்பின்மையை விதைத்தவர்.. என்பதே நேருவின் நினைவை மறக்கடிக்க
 

இது அறிவுள்ளவர்கள் செய்யக் கூசும் விஷயம்!

‘ஜவகர்லால் நேரு ஒரு தலைவரே அல்ல;
உண்மையில் நாட்டின் சீரழிவுக்கு காரணமே நேருதான்’

என்கிற பிரசாரம் ஒரு தீவிரத்துடன் நடக்கிறது.

தலைவர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து பிடுங்கி எடுத்து சமகால வெளியில் நிறுத்தி மதிப்பிடுவது அறிவுள்ளவர்கள் செய்யக் கூசும் விஷயம்.

அதையும் தாண்டி ஏதோ சாதித்த காரணத்தால்தான் அன்றைய தலைவர்கள் பலரும் இன்றும் நினைவுகூரப் படுகிறார்கள்.

மதங்களை மத நம்பிக்கைகளை சடங்குகளை வெறுத்து ஒதுக்கியவர்; அடுத்தடுத்த தலைமுறைகளிலும் மதச்சார்பின்மையை விதைத்தவர்..

என்பதே நேருவின் நினைவை மறக்கடிக்க முயல்பவர்களின் கோபத்துக்கு காரணம்.

மதங்களையும் அவற்றின் ஊடாக பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகளையும் நேரு புறந்தள்ளினாரே தவிர, பலதரப்பட்ட மதங்களின் பின்னணியில் செழித்து வளர்ந்த மரபுகளையும் கலாசாரத்தையும் அவர் கொச்சைப் படுத்தவில்லை.

ஆன்மிகத்தின் நிழலில் தழைத்த அறிவாற்றலை நவீன அறிவியலுடன் இணைத்துவிட பிரயாசைப் பட்டார். அதில் அவர் வெற்றி காணவில்லை.

ஆசைப்பட்ட பல விஷயங்களை அவரால் சாதிக்க இயலாமல் போனதற்கு பல காரணங்கள். காலம் போதாமை பிரதானமானது. மிகப்பெரிய பணக்கார குடும்பத்கின் வாரிசாக இருந்தும் ஒன்பது இளமைக்கால ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டிய கொடுமையை நேரு தவிர எவரும் எதிர்கொண்டது கிடையாது.

இந்தியாவுக்கு தேவை முழு சுதந்திரமே தவிர நிர்வாக சுயாட்சி அல்ல என்பதை காந்திஜிக்கும் முன்னதாக தெளிவாக காங்கிரஸ் சார்பில் பிரகடனம் செய்தவர் நேரு.

அரபி மற்றும் பாரசீக மொழியில் ஆரம்பக் கல்வியை கற்ற காஷ்மீர பண்டிதர் மோதிலாலின் மகனாகப் பிறந்து, வெளிநாட்டில் ஆங்கிலக் கல்வி பெற்று, மேற்கத்திய நவீனத்துவத்தின் மீது பிடிப்புடன் மார்க்சிய சமத்துவத்தை அணுகி, இரண்டுக்கும் இடைப்பட்ட சோஷலிசத்தின் பெயரால் கலப்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்த நேருவால் சராசரி இந்தியத்துடன் இறுதிவரை சமரசம் செய்துகொள்ள இயலாமல் போனது உண்மை.

நாடெங்கிலும் விரவிக் கிடந்த லோக்கல் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூர் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி போட்டு சீர்திருத்தங்களை முடக்கியபோது கம்யூனிஸ்டுகள் பார்வையிலும் சந்தேகத்துக்கு உரியவராக அவர் மாறிப் போனார்.

நேருவின் தோல்விகள் நிஜமானவை. ஆனாலும் அவரது சாதனைகளையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான பங்களிப்பையும் மறைத்துவிடும் அளவுக்கு அவை அடர்த்தியானவை அல்ல.

அந்த மனிதருக்கு இந்த நாட்டின் முன்னேற்றம் தவிர்த்து எதுவுமே வேண்டியிருக்கவில்லை; உணவும் உறக்கமும்கூட அதற்கான தன் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் என்று அவர் நினைக்கிறார்..

என்று நேருவின் உள்துறை அமைச்சர் சர்தார் படேல் வழங்கிய நற்சான்றுக்கு மேலாக எந்தப் பாராட்டும் கிடைக்கப் போவதில்லை.

வரலாற்றை திரிக்கும் முயற்சிகள் வரலாற்றில் புதிதல்ல.

– கதிர்வேல்

From around the web