தமிழ்நாடு விவாதிக்க வேண்டிய முக்கியமான செய்தியை பின் தள்ளிவிட்டார் சீமான்!

 
இறந்த பெரியாரை அழைத்து எம்ஜிஆர் தலைமையில் விழா எடுத்த சீமான்..

இரு வருடங்களுக்கு முன்னர், வடிவேலு சமூக ஒளி ஊடகங்களையும் கூடவே நம் மனங்களையும் ஆக்கிரமித்திருந்தார். இப்போது, சீமான் வடிவேலுவை முழுக்க ஓரம் கட்டி விட்டார்.

போகிற போக்கில் அவ்வப்போது  எதையாவது சீமான் அடித்து விட்டுப் போகிறார், எதிர் நிலையிலிருக்கும் மொத்த திமுக ஆதரவு யுடியூபாளர்களும் சீமானை நோக்கி பாயத் தொடங்கி விடுகிறார்கள்.

சமீபத்திய பெரியார் அவதூறு சற்று ரசபாசமாகி விட்டது; கைது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்படுகிறது. இடைத்தேர்தல் வரும் நேரத்தில் சீமானைக் கைது செய்து, அவருக்கு அனுதாபம் பெற்றுத் தருவதா என்ற நியாயமான கவலையும் அரசுக்கு இருக்கிறது.

நேற்று ஒரு பேட்டி பார்த்தேன். பேட்டி எடுப்பவர் செந்தில்வேல். தற்போது திமுக ஆதரவு யுடியூப் இன்புளுயென்ஸர். சீமானுக்கு எதிராக ரவுண்டு கட்டுபவர்களில் முக்கியமானவர். ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக இரண்டு விரல் பாபா முத்திரையை காண்பித்துக் கொண்டிருந்த நேரம். சீமான் போப் பிராஸிஸ் உட்பட உலகத் தலைவர்கள் ஒவ்வொருவர் படமாக எடுத்துக் காண்பித்து அவர்களும் பாபா முத்திரை காண்பிப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

இத்தாலி, பிரான்ஸ் முன்னாள் அதிபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் படத்தைக் காண்பிக்கும் போது அவர்கள் யார் என்று சீமானுக்கும் தெரியவில்லை, ‘இவர் யார் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று செந்திலையும் தன்னோடு சேர்த்து அசடாக்குகிறார்.

‘இவங்களைத் தவிர வேறு யாரும் போப் ஆக முடியாது’ யாரைத் தவிர? என்று செந்தில் கேட்கவில்லை. மாறாக ஏதோ பேய்க் கதை கேட்கும் பயத்தை கண்களில் காட்டி செந்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கூட ‘க்ளுக்’ என்று சிரித்து விடும் முட்டாள்தனத்தை, தமிழ்நாட்டின் முக்கியக் கட்சித் தலைவர் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்கிறார். அதை கண்கள் விரிய இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் புதிய தலைமுறை நிரூபர். ஏனெனில் அப்போது சீமான் ரஜினியின் முத்திரை தீமையின் அடையாளம் என்று ரஜினியை சாடிக் கொண்டிருந்தார்.

இப்படியாக தேவைப்படும் நேரத்தில் சீமானின் உளறல்களை எவ்வித எதிர்க் கேள்வியுமின்றி அனுமதித்து விட்டு இப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ஒருவர் கூட ‘ஆதாரத்தை நீங்கதானே தரவேண்டும்’ என்று எதிர் கேள்வி எழுப்பவில்லையே என்றால் எப்படி?

தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக பெரியார் அவரைத் தற்காத்துக் கொள்வார். அல்லது பெரியாரை நன்கு படித்த முக்கிய திராவிடர் இயக்க தலைவர்கள், பேராசிரியர்கள், சுபவீ போன்றவரகள் போதும்.

பெரியார் பிரச்சினையில் தமிழ்நாடு விவாதிக்க வேண்டிய முக்கியமான ஒரு செய்தி பின் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிப்பங்கீட்டில் உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு 40% அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் மாநிலங்களுக்கு சேர்த்து மொத்தமே 15%.

மக்கள் தொகை என்று எடுத்துக் கொண்டாலும், நான்கு தென் மாநிலங்களும் சேர்த்தால் உத்திர பிரதேசத்தை விட அதிக மக்கள் தொகை ஆனால் வரிப்பங்கீடு உத்திர பிரதேசத்தை விடக் குறைவு.

மொழியிலிருந்து உள்கட்டமைப்பு, வரலாறு என்று அனைத்திலும் தென் மாநில மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா, என்ற விவாதம் தேசிய ஊடகங்களில் கூட நடக்கிறது; இங்கு சீமானை துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- பிரபு ராஜதுரை, மூத்த வழக்கறிஞர்

From around the web