பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா? என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?

 
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா? என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கிய எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான போட்டியில் எதிர்பார்த்த தொகுதிகளை விடவும் அதிகமாகவே பெற்றுள்ளது அதிமுக கூட்டணி.

அதிமுகவின் தயவால் வானதி சீனிவாசன் உட்பட பாஜக வேட்பாளர்கள்  4 பேரும் சட்டமன்றம் செல்கிறார்கள். கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. சேலம், கோவை மாவட்டங்களில் கோலோச்சியுள்ள அதிமுக அணி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வட மாவட்டகளில் பாமக துணையுடன் பரவலான வெற்றியைப் பெற்றுள்ள அதிமுக தென் மண்டலத்திலும் எதிர்ப்பார்ப்புகளை மீறி வெற்றி பெற்றுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையே கோவில்பட்டியில் வீழ்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியான கடம்பூர் ராஜு. 

மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் தோல்வியுற்றாலும், எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகள் பெரும்பாலோனோர் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் இழுபறிக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது பாஜகவை தவிர்த்து விட்டு கருணாஸ், தனியரசு உள்பட மேலும் சில சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு போட்டியிட்டு இருந்தால் திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்திருக்க முடியும் என்றே கருத முடிகிறது. பாஜகவுடன் சேர்ந்து செய்த நீட், எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் போன்ற பாவங்களும் இன்னமும் பாஜகவுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதும் தான் அதிமுக வேட்பாளர்கள், பொதுவான வாக்காளர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த வாக்காளர்களில் பலர் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாமல் கமல் ஹாசனின் மய்யத்திற்கும் , சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களித்துள்ளதாக களத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றது. அமமுக டிடிவி தினகரனும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கவில்லை. பலமான அதிமுகவாக போட்டியிடும் போது அமமுக தொண்டர்கள் தாய்க்கட்சிக்கு திரும்பி விடுவார்கள் என்றே தெரிகிறது.

தற்போதைய அதிமுகவுக்குத் தேவை, பாவங்களை எல்லாம் பாஜக தலையில் கழுவி விட்டு புத்துணர்வுடன் தமிழ்நாட்டு மக்களை எதிர்கொள்வது தான். இது அதிமுகவின் நிலைத்தன்மைக்கும் நல்லது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் கூட நல்லதாக அமையும் வாய்ப்புள்ளது. இரட்டை தலைமையில் உள்ள அதிமுகவில் இரட்டையர்கள் ஒரே பக்கமாக இருந்து டெல்லி இரட்டையர்களிடமிருந்து விடுதலை பெறுவார்களா? என்பதும் சந்தேகத்திற்குரியது தான்.

அனேகமாக,  எதிர்க்கட்சித் தலைவராக ஆகி விட்டு அடுத்ததாக கட்சியின் பொதுச்செயலாளராக ஆவதற்கான திட்டமிடலில் எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடும். அடுத்த 6 மாத காலத்திற்குள்ளாவது பாஜகவிலிருந்து விலகும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கலாம். அப்படி ஒரு நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்தால், இரட்டை இலை முடக்கம் என்ற ஆயுதத்தை பாஜக கையிலெடுக்கக்கூடும்.. பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், பாஜகவால் அதைச் செய்ய முடியாமல் போகக்கூடும்.

மேலும், வங்காளத்தில் மம்தா பானர்ஜி கொடுத்த சம்மடி அடியால், டெல்லிக்கே ஆபத்து என்ற அச்சத்தில் தமிழ்நாட்டு விவகாரங்களில் டெல்லியின் தலையீடு இனி குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி? தமிழ்நாடு அவருடைய முடிவுக்காகவும் காத்திருக்கிறது!

- மணி

From around the web