என்ன ரஜினி சார்! பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க!!

 
என்ன ரஜினி சார்! பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க!!

கொரொனா பரவல் காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று முடிவெடுத்தார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போ கொரோனா 2வது அலை உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் போது, அண்ணாத்த படப்பிடிப்பில் நடிச்சிக்கிட்டு இருக்கார். அதுமட்டுமல்ல. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறப்பு அனுமதி வாங்கி சூட்டிங் வேகமா நடக்குது. ஏற்கனவே அண்ணாத்த சூட்டிங்கில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தான் அரசியலுக்கே முழுக்கு போட்ட சூப்பர் ஸ்டார், இப்போ நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து மடிஞ்சிட்டு இருக்கும் போதும் கடமை தவறாமல் நடிச்சிக்கிட்டு இருக்கார்.

போகட்டும்! தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று ஆவேசமாப் பேசினாரே! ஞாபகம் இருக்கா? அதெப்படி சார் உங்களுக்கு அவ்வளவு கரெக்டா தெரிஞ்சிது. விவரத்தை ஆணையத்தில் வந்து சொல்லுங்கன்னு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பினாங்க. நேரில் வந்தா சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்ன்னு டபாய்ச்சிகிட்டு இருந்தார். அவருகிட்டே 15 கேள்விகளை எழுத்து மூலம் கேட்டது ஆணையம்.

பதில்களை எழுத்து மூலமா சூப்பர் ஸ்டாரின் வழக்கறிஞர் கொடுத்திருக்கார். நான் திட்டமிட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. போற போக்கில் தற்செயலாக நடந்த விசயம் அது. என்னிடம் வேறு எந்த தகவலும் கிடையாதுன்னு பதில் சொல்லியிருக்காரு நம்ம சூப்பர் ஸ்டார். அதாவது, அம்புட்டு ஆவேசமா” சமூக விரோதிகள் ஊடுறுவிட்டாங்கன்னு” சொல்லி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களை அவதூறாப் பேசிட்டு, இப்போ கூலா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லியிருக்கார்.

அரசியலுக்கு வர்றேன்னு சொல்லிட்டு கொரோனாவை காரணம் காட்டி வரமாட்டேன்னு பல்டி அடிச்சீங்க. இப்போ கொரோனா உக்கிரமா ஆடிக்கிட்டு இருக்கும் போது நைட் டூட்டி போட்டு படத்திலே நடிக்கிறீங்க. சமூக விரோதிகள் ஊடுறுவிட்டாங்கன்னு தூத்துக்குடியில் நேர்லே இருந்து பாத்த மாதிரி சொன்னீங்க. இப்போ எனக்கு ஒன்னும் தெரியாது, போற போக்கிலே பேசிட்டேன்னு மழுப்புறீங்க. உங்களை வாழ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்காக நீங்க பண்றதெல்லாம் சரிதானா ரஜினி சார்? 

-கேசவன், தூத்துக்குடி

From around the web