பிரபலங்களின் மகள்களுக்கு பாலியல் மிரட்டல்கள்! இதற்கு தீர்வு என்ன?

சமூகவலைதளங்களின் மூலம் பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை அதிகரித்து வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு நபர் ஒருவர்ட்விட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிது. இதுமட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலையில், என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.
இந்நிலையில், ட்விட்டரில் ரித்திஷ் என்ற நபர் விஜய் சேதுபதியை டேக் செய்து அவரது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தார். அவரது ட்விட்டர் பக்க ப்ரொபைலில் நடிகர் அஜீத்தின் படம் வைக்கப்பட்டிருந்ததால் இந்தப் பதிவு தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கும் இதே போல் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும் சைபர் கிரைம் போலீசார், இணையத்தில் ஆபாச கருத்தை பதிவிட்ட நபர் மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நவீன தொழில்நுட்பத்தினால் சமூக வலைதளங்களை பலர் ஆக்கச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வரும் நிலையில் சிலர், எதிர்மறைச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து உலாவ முடியும் என்பதால் அதையே பலமாகப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், போலி கணக்குகளைத் தொடங்கினாலும், ஐபி முகவரி வைத்து சம்பந்தப்பட்ட நபரை எளிதில் அடையாளம் காண முடியும்.
சமூக வலைதளங்களில் ஒருவர் கோபத்திலோ ஆத்திரத்திலோ அவதுாறு கருத்துக்களைப் பதிவிடும் முன், எதிராளியின் இடத்தில் நம்மை முதலில் வைத்துப் பார்த்து சிந்தித்த பின்பே கருத்துக்களைப் பதிவிட வேண்டும். அவதுாறு கருத்துக்களைப் பரப்பினால் 7 ஆண்டுகள் ஜாமின் இல்லாத சிறைத் தண்டனையும் காத்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் சாதாரண வாக்குவாதங்களுக்கே ஆபாச வார்த்தைகளைப் பதிவிடுவோர் தொடங்கி அவதுாறு பரப்புவோர் வரை சைபர் கிரைம் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா, சட்டத்தை உறுதியாக அமல்படுத்துவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.