மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களையும் சம்மந்தப்பட்ட பள்ளிகளையும் என்ன செய்யலாம்?

 
Anbil-Mahesh

தமிழ்வழி கல்வி 1 ம்  வகுப்பில் மாதா பிதா குரு தெய்வம் என்று கோரஸாக வாசிக்க சொல்லி தந்தனர்.  பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் தவிர வேறு இணை  தொழில் எதுவும் செய்யமாட்டார்கள். இன்று ஆங்கிலவழிக்கல்வி மோகம் தலைக்கேறி விட்டது. அரசு கடைநிலை ஊழியர்,   பிள்ளையை பிரபல தனியார் சி பி எஸ் இ பாடத்திட்ட ஆங்கில வழி பள்ளியில் தான் சேர்க்கிறார்.. பள்ளிக்கட்டணம் சீருடை ஸ்பெஷல் கிளாஸ்  தனித்திறன் பயிற்சி  என மாணவரையும் பெற்றோரையும் பிழிந்து எடுத்து  வருகிறார்கள்.  பெற்றோர்களின் இந்த மோகத்தை பயன்படுத்தி ஆங்கிலவழி பள்ளிகள் கட்டண கொள்ளை அடிக்கின்றன.மாணவ மாணவியரின் பாடத்தில்  மதிப்பெண், விளையாட்டில் பதக்கம் இவற்றில் குறியாக உள்ளனர் மேல்தட்டு பெற்றோர். இவர்கள் பெரும்பாலும் பெரிய வர்த்தகர், அரசு அதிகாரிகள் ஆவார்கள்.

குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றம், உடல்மொழி,  பருவமாற்றம் , நட்பு வட்டம் இவைகளை பெற்றோர் கவனிப்பது இல்லை.  சிறுமி இளைஞியாக  மாறும் பருவத்தில்  உணர்வு, உணர்ச்சிக்கு அடிமையாகி விடுகிறார்கள். மிக சிலர் அவமானத்துக்கு அஞ்சி செய்த தவறுகளுடன் சமரசம் ஆகிவிடுகிறார்கள்.  நடந்துள்ள சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் மீது தப்ப முடியாமல் வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.  பள்ளி நிர்வாகிகள் தரப்பு வாக்குமூலம், உத்தரவாதம்  பெற்று ஆக வேண்டும்.                     

எந்த ஜாதி, மதம் சார்ந்தவர் நடத்தும் பள்ளியானாலும்    மாணவிகளுக்கு  செக்ஸ்தொல்லை நிகழக்கூடாது.  இனி பள்ளிகளில் மாணவியருக்கு ஆசிரியர்களின் பாலியல் தொல்லை நேராமல் இருக்க கல்வித்துறை, பெண்ணுரிமை ஆணையம், காவல்துறை, போக்ஸோ சட்ட அமலாக்கத்துறை, பெற்றோர் ஆசிரியர் சங்கம், இவை கலந்து ஆலோசித்து "வாட்டர் டைட்" விதிகளை உருவாக்க வேண்டும்.           

மாணவிகளுக்கு கட்டாயம், தற்காப்பு கலைகளான   கராத்தே  சிலம்பம் வர்மக்கலை  மற்றும் யோகா, நன்னெறி வகுப்புகள் தேவை.  பெற்றோர் மற்றும்  மாணவியருக்கு  மனோதத்துவ  நிபுணர் மூலம் "கவுன்சலிங்"  அவசியம். ஆண்கள் ஸ்பரிசம் குறித்த எச்சரிக்கையை  ஆசிரியை,  பெற்றோர் தான் மாணவிக்கு  தரமுடியும். டீச்சருக்கு "லவ் லெட்டர்"  கொடுத்த கதாநாயகனை,, மாணவி காதலிப்பது போல வெளிவந்த திரைப்படம் சக்கைபோடு போட்டது. டிவி தொடர்கள் இளைய தலைமுறையை குறை வைக்காமல் குட்டி சுவராக்கி வருகின்றன.

பத்மா சேஷாத்திரி பள்ளி  சம்பவம் அம்பலம் ஆன பிறகு இன்னும் சில பள்ளிகளில் இதுபோன்ற  நடந்த சம்பவங்களும்    "மளமள" வென வெளிவருகின்றன.  சம்பவம் வெட்கக்கேடானது.விரும்பத்தகாதது,  ஆசிரியர் நடத்தையை பள்ளி நிர்வாகம் தான் கண்காணிக்க வேண்டும். வகுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். "சென்ட்ரலைஸ்டு  மானிட்டர்" மூலம் பிரின்சிபால், தாளாளர்  இருவரும், நடக்கும் வகுப்புகளை கண்காணிக்க வேண்டும்.     

மாநிலத்தில் முதலிடம் என விருது கிடைத்தால் பெருமைப்படும் பள்ளிகள் இப்படி அவப்பெயர் கிடைத்தால் இனி அப்படி நடக்காது என்பதை உறுதிசெய்ய  வேண்டும். அரசியல்வாதிகளும், போலி சமூக சீர்திருத்த மீடியாக்களும் சாதி, மதம், கட்சி சாயம் பூசி குற்றப்பத்திரிகை வாசிக்க கூடாது. பள்ளியும் வேறு கேடயம் ஏந்தி நடந்த சம்பவத்துக்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது. எல்லா பள்ளிகளிலும் மாணவியருக்கு பாலியல் தொல்லை நேராது  என்பது நிர்வாகங்கள்  உறுதி செய்ய வேண்டும் பெற்றோருக்கு  உத்தரவாதம் அளிக்க வேண்டும்.விசாரணையில் அரசியல் தலையிட்டு திசைதிருப்ப கூடாது .

- வி.எச்.கே.ஹரிஹரன் 

From around the web