பக்தவச்சலத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்குத் தான் இந்தப் பெயர்! அமெரிக்கத் தமிழர்களுடன் கார்த்திகேய சிவசேனாபதி!!
அமெரிக்க திமுக சார்பில் கிராம நலன் தற்சார்பு வாழ்வில் திமுக பங்கு என்ற தலைப்பில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி தொல்காப்பிய காலம் முதல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரையிலுமான தமிழர்களின் வாழ்வியல் நிலைகளையும் சந்தித்த இடர்பாடுகளையும் விவரத்தார்.
“சங்ககாலத்திற்குப் பிறகு தமிழர்களுக்குள், வர்ணங்கள் என்ற அடிப்படையை புகுத்தி கல்வி வாய்ப்பை மறுக்கச் செய்தவர்கள் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள். அதனால் தான் சங்ககாலத்திற்குப் பின் தமிழ் படைப்புகள் இல்லாமல் போனது.
பக்தி இலக்கியம் காலத்தில் தான் மீண்டும் படைப்புகள் வந்தன. வடமொழியான சமஸ்கிருதத்திற்கு எதிராக, எங்கள் கடவுளுக்கு எங்கள் மொழி தெரியும், எங்கள் தமிழ் மொழியிலேயே இறைவனை வழிபடுவோம் என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இயற்றினார்கள். பக்தி இலக்கியம் சமஸ்கிருதத்திற்கு எதிராக தோன்றியது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நீதிக்கட்சியின் ஆட்சியில் தான் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு கல்விக்கான போராட்டங்கள் எழுந்தது. முதன் முறையாக சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீடு அறிமுகமானது. தொடர்ந்து பெரியாரின் திராவிட இயக்கம் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். காமராஜர் முதல்வர் ஆனதும் அவரை கும்மிடிப்பூண்டியில் வெற்றி பெற வைத்ததுடன், ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை திறக்கச் செய்தவர் பெரியார்.
காமராஜரை தோற்கடித்தது திமுக என்ற ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தது காமராஜர் அல்ல, பக்தவச்சலம் தான் முதலமைச்சராக இருந்தார். தமிழ்நாட்டில் மிகவும் வெறுக்கத்தக்க முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர் அவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு ஊர்களில் இளைஞர்களை சுட்டுக் கொன்றார். வெள்ளக்கோவில், சென்னிமலை போன்ற சிற்றூர்களில் எல்லாமும் சுட்டுக் கொன்றனர்.
அவருடைய ஆட்சியில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அரிசிக்குப் பதில் மக்காச்சோளம் மக்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. இந்த இரு காரணங்களால் தான் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தோற்றது.2016ம் ஆண்டு வரை மிகவும் வெறுக்கத்தக்க முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தின் இடத்தை, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிடித்துக் கொண்டார். தமிழ்நாட்டில் யாரும் விரும்பாத முதலமைச்சராக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
2021ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார். தமிழர்களின் உரிமையை மீட்கவும் காக்கவும் நாம் நீண்டகாலத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பேசும் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறீர்கள். நம் தமிழ் இளைஞர்களை படிக்க வைத்து உலகமெங்கும் அனுப்பி வைத்துள்ளது தமிழர்களின் கல்விக்கு கலைஞர் ஆற்றிய மிகப்பெரிய கொடை,” என்று கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.
இணையவழியாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலை அமெரிக்க திமுக ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர்.