தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே; யுனெஸ்கோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 
School

தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்படுகின்றன என யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 59 ஆயிரத்து 152 பள்ளிக்கூடங்களில் 2,631 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்படுகின்றன என யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில் இது 4 சதவீதம் மட்டுமே, எனினும் இது கவலை அளிக்கக்கூடிய செய்தி என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யுனெஸ்கோ அமைப்பின் “நோ டீச்சர், நோ கிளாஸ் : இந்தியாவுக்கான கல்வி அறிக்கை - 2021 ” என்னும் அறிக்கையின் முடிவில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.  

இந்திய அரசின் கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 61 சதவீத பள்ளிகளில் நூலக வசதி உள்ளது. எனினும், அவை திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் 88 சதவீத பள்ளிகளில் நூலக வசதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 சதவீத பள்ளிகளில் மட்டுமே இண்டர்நெட் வசதி உள்ளது. ஒரு சதவீத பள்ளிகளில் மட்டுமே தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.96 சதவீத அங்கன்வாடி ஆசிரியர்கள் குறைந்த கல்வி தகுதியை உடையவர்களாக உள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் 0.54 சதவீதம் ஆசிரியர்களும், அதற்கு மேல் உள்ள பள்ளிகளில், 0.50 சதவீத ஆசிரியர்களும்   குறைந்த கல்வி தகுதியை உடையவர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் 0.24 சதவீதம் ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 0.13 சதவீத ஆசிரியர்களும்  குறைந்த தகுதியுடையவர்களாக உள்ளனர் என்பது அதிக கவலை தருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் முறையான போட்டித்தேர்வுகள் மூலமே  தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கல்வியாளர் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு செல்வதில் பாதுகாப்பான பயணம் என்னும் தலைப்பில் ‘சேவ்லைப் பவுண்டேசன்’ நடத்திய ஆய்வில், சென்னையில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள்  பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், பள்ளிகளின் அருகே நடைபாதைகள் போன்ற அமைப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web