தீர்ப்பே வந்துருச்சு.. இனி எதற்கு விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்

 
Indrakumari

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி தன் மீதான ஊழல் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றகோரி தாக்கல் செய்த மனு காலாவதியாகிவிட்டது எனக்கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1991 - 1996 காலகட்டத்தில் அதிமுக அமைச்சராக இருந்த இந்திரகுமாரி காதுகேளாதோர் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் பள்ளியும் தொடங்குவதாக கூறி 15.45 லட்சம் அரசு நிதியை முறைகேடாக பெற்று ஊழலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய இந்திரகுமாரி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், சாட்சிகள் மீதான விசாரணைக்கு கால அளவு நிர்ணயம் செய்தது, முறையாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தவில்லை எனக்கூறி இந்திரகுமாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. எனவே மனுதாரரான இந்திரகுமாரியின் கோரிக்கை காலவதி ஆகிவிட்டதால் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரருக்கு உள்ள கோரிக்கைகளை மேல்முறையீட்டு தாக்கல் செய்யும்போது அதில் அனைத்து கோரிக்கையும் வையுங்கள் எனக்கூறி, இந்திரகுமாரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

Indrakumari

இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர். காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் 15.45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஆனால் பள்ளியே இல்லை.

இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் 2 தினங்கள் முன்பு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி இந்திரகுமாரிக்கும், அறங்காவலராக இருந்த அவரது கணவர் பாபுவிற்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. எனவேதான், உச்சநீதிமன்ற மனு காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web