தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையுடன் தொடங்கியது

 
RNRavi

தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டசபை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழ்நாடு சட்டசபை கூடும்போது ஆளுநர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. வணக்கம் என தமிழில் சொல்லி உரையை  ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கினார்.

அதன்பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். இந்த உரை சுமார் 1.5 மணி நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

Appavu-translate-RNRavi-speech

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

ஒருவேளை இன்று மதியம் மீண்டும் சட்டசபையை கூட்டி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்தி ஒரே நாளில் முடித்துவிடவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏக்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரே நாளில் சட்டசபை கூட்டம் நிறைவு செய்யப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவடைந்த பிறகு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web