உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது

 
TN Election

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பர்15-ந் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனிடையே  சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடங்கள் குறித்தும், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கிரிராஜன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பால் கனகராஜ், கராத்தே தியாகராஜன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

From around the web