நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு எதிரானது அல்ல... பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

 
High Court

தமிழ்நாடு அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பாஜகவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில், ‘நீட்' தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பியது. இதன்பின்பு, உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதன்பின்பு, இந்த வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில்,

நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழு உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு முரணானது.

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு நியமிக்க முடியாது என கூறியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்சநீதிமன்றம்  உத்தரவுக்கு எதிரானதும் அல்ல. ஒன்றிய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை.

அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாகத் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை.

குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் ஒன்றிய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்கக் கோரலாம். அதேபோல நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம்.

குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது. மக்கள் கருத்துக் கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. என தமிழ்நாடு அரசு அமைத்த குழுவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

From around the web