பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

 
High-Court

தமிழ்நாட்டில் பேனர்களை வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் திருமணத்திற்கு வந்திருந்த திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைத்தபோது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு தரப்பில், ஏற்கனவே பேனர் கலாச்சாரத்தை தொடர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்றும் பேனர்கள் வைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு தான் செல்வதில்லை என அறிவித்துள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், “தமிழ்நாட்டில் பேனர்களை வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக திமுக மற்றும் தமிழ்நாடு அரசு ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

From around the web