உயிரிழந்துவிட்டர் என நினைத்தவரை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சைக்கு அனுப்பிய பெண் இன்ஸ்பெக்டர்!

 
police-Rajeswari

உயிரிழந்துவிட்டதாக கருதியவரை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிகிறது.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை பார்க்கிறார். இவர் இரவு மழையில் நனைந்ததால் வாலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து டி.பி.சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். உதயகுமார் உடலில் அசைவு இருந்தது, இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி அலேக்காக தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார்.


பின்னர் அவரை, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரிடையாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web