தமிழக சட்டமன்றத் தேர்தல்! 3வது அணியெல்லாம் கானல் நீர் தான்!!

விஜயகாந்த் சீரிய நோக்கத்துடன் தான் வீரியமாக தேமுதிக தொடங்கினார். ஒருகாலகட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் அடைந்தார். அதற்கு மேல் அவர் முன்னெடுத்த பாதை அவருக்கு சறுக்கலானது. உடல்நலம், தெளிவான யுக்தி இருந்திருந்தால் இன்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத சக்தி ஆகி இருப்பார் விஜயகாந்த்.
கேட்கும் எண்ணிக்கை மற்றும் கேட்டத் தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால், டிடிவி.தினகரனுடன் கூட்டணிக்கு முனைகிறார். திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி தேவை என்று முழங்கலாமே தவிர அதற்கான ஆயத்தப்பணிகளை யாரும் செய்யவில்லை. அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்று எந்த குடிமகனும் கேட்கவில்லை. அத்தனை இலவசங்களை தொடர்ந்து வழங்கமுடியுமா என்று வாக்காளர்கள் சிந்திக்கவில்லை.
இலவசங்கள் வேண்டாம், சாமானியன் மீது வரிச்சுமையை அதிகரிக்காதீர்கள், கல்வி, மருத்துவ வசதி மட்டும் இலவசம் ஆக்குங்கள் , மதுக்கடைகளை மூடுங்கள் என்று சொல்லுபவர்களை மக்கள் விரோதிகளாக சித்தரிக்கிறார்கள். அறிவுஜீவிகள் ,கமல் பக்கம் இருந்தாலும் ஓட்டுக்கு காசு தராமல் வெல்ல முடியாது. பட்டிமன்ற பேச்சாளர்கள் கமல், சீமான். விஜயகாந்த் பக்கம் இருந்தாலும் அவர்கள் தெருவில் இறங்கி கைகூப்பி வாக்கு சேகரிக்க வர மாட்டார்கள்.
கமல் கூட்டணியில் சரத்குமார், பாரிவேந்தர் கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை வாரி வழங்கியுள்ளார். ஒருவேளை விஜயகாந்த் கமல் கூட்டணியில் சேர்ந்தால் தாராளமாக கேட்கும் தொகுதிகளை அள்ளி தருவார். ஆனால், வேட்பாளர்களைத் தேட வேண்டிவரும். ஒரே காரணம் தேர்தல் செலவுகளுக்கு தடையின்றி செலவுசெய்ய திமுக, அதிமுக கட்சிகளிடம் மட்டும் தான் நிதி உள்ளது. அதனால் தான் 3 வது அணி என்பது ஆண்டிகள் காட்டும் மடம் போல ஆகிவிடுகிறது.
சுயகர்வம், சுயநலம் இன்றி கடுமையாக உழைக்கத் தொண்டர்களுக்காவது செலவு செய்ய வேண்டும். ஓட்டுக்கு காசு, மது, பிரியாணி வாங்குவது கேவலம் என்று வாக்காளர்கள் உணரும் வரை 3 வது அணி , நேர்மையாளர் அணி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளே திராவிட கட்சிகளுக்கு இணையாக செலவு செய்து தொண்டர்களையும் வாக்கு வங்கியையும் தக்க வைக்க முடியவில்லை. தமிழ்நாடு இன்று உள்ள நிலையில் வாக்காளர் விழிப்புணர்வு, 3 வது அணி என்பதெல்லாம் கானல் நீர் தான்!
-வி.எச்.கே.ஹரிஹரன்