தேசியக் கொடியை அவமதித்து பேசிய எஸ்.வி. சேகர்... விசாரணைக்கு தடை கேட்டு நீதிமன்ற கதவை தட்டி தப்பித்தார்.!

 
SVe-Shekher

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமெடி நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், காவியை கலங்கம் என்று குறிப்பிடும் தமிழ்நாடு முதல்வர் கலங்கமான தேசியக் கொடியைதான் ஆகஸ்ட் 15-ம் தேதி ஏற்ற போகிறாரா அல்லது காவியை மட்டும் கட் செய்துவிட்டு வெள்ளையும் பச்சையும், அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் இருந்தால் போதும் இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் அதிமுக உருப்பட வேண்டுமென்றால் அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சைபர் கிரைப் போலீசில் புகார் கொடுத்தார்.

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் நடிகர் எஸ்.வி.சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

From around the web