பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவி..  பள்ளி நிர்வாகம் தாக்கியதா..? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

 
Salem-school-ask-to-pay-fees

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் இந்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணத்தை  கட்ட சொல்லி பள்ளி நிர்வாகத்தினர் அடித்ததாகவும் இதனால் மனமுடைந்த அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதை கட்டத் தவறிய பள்ளி மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று இரவு தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து   மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், பெற்றோர்கள் சார்பிலும் தனி தனியாக புகார் மனு அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து மாணவியின் தாய் கூறுகையில், தாங்கள் விவசாய கூலிவேலை செய்து 2 குழந்தைகளை சுவாமி விவேகானந்தா தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும், 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை பணம் கட்ட  சொல்லி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்ததாகவும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் இதனால் மனமுடைந்து தனது பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு என்பதால் பணம் கட்டவில்லை என்றால் முழு தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று மிரட்டி வருவதாகவும், இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளியின் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவியின் தாயார் சின்னபொண்ணு கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் முருகேசனிடம் கேட்டபோது, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்த குழந்தைகளையும் தாக்கவில்லை, மிரட்டவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் இருவருக்கும் இதுவரை இந்த ஆண்டுக்கான பள்ளி கட்டணம் ரூ.300 மட்டுமே செலுத்தி உள்ளதாகவும், பள்ளி கட்டண தொகை கட்ட முடியாது என சம்மந்தப்பட்ட மாணவ மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும், இதற்கு உண்டான வீடியோ ஆதாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனால் வேண்டுமென்றே மாணவ மாணவியை அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும், தங்கள் பள்ளி 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதோடு இதுவரை 60க்கும் மேற்பட்டோர் மருத்துவராகியுள்ளனர் எனவும் தங்கள் பள்ளியின் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

பெற்றோரின் பரபரப்பு குற்றச்சாட்டும், பள்ளி நிர்வாகத்தின் மறுப்பும் அப்பகுதியில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web