இந்திய கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை! பின்னணியில் சீனா?

இந்திய மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டுவர். ஒரு சின்ன இலங்கை தீவு இந்தியாவினால் பல நன்மைகளையும் உதவிகளையும் பெற்றுவரும்நிலையில் உதவிடும் அண்டைநாட்டுடனேயே உரசல் போக்கைகடைபிடிப்பது சந்தேகம் கிளப்புகிறது. இந்தியாவில் இருந்து உலர்மீன் [ கருவாடு] இறக்குமதி செய்ய அண்மையில் ஸ்ரீலங்கா தடை விதித்தது. இதனால் தூத்துக்குடி குளிர்பதன கிட்டங்கியில் ரூ 500 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் டன் கருவாடு தேங்கி கிடக்கிறது.
தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் பிடித்த மீன்களில் 25 % இலங்கை நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வர்த்தகர்கள் கொள்முதல் செய்வர். மாசி, கட்டா, நெத்திலி மீன் கருவாட்டுக்கு இலங்கையில் கிராக்கி உள்ளது. பாகிஸ்தான், மாலதீவுகளில் இருந்தும் இலங்கைக்கு உலர்மீன் ஏற்றுமதி ஆகிறது. 2020 நவம்பர் வரை இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உலர்மீனுக்கு கூடுதல் வரி விதித்தது இலங்கை. நாளடைவில் இந்தியாவில் இருந்து உலர்மீன் இறக்குமதிக்கு தடை விதித்து விட்டது.
ஏற்றுமதி முடங்கியதால் மீன் பிடித்துவந்த, மீனவர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை. . ஏற்றுமதியாளர்கள் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியவில்லை. எனவே மத்திய அரசு தலையிட்டு இந்திய உலர்மீன் இறக்குமதிக்கு இலங்கை விதித்த தடையை நீக்க வழி செய்ய வேண்டும் என மீனவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
ஆர்வக்கோளாறில் எதையாவது உளறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை குலைத்து விடக்கூடாது. நேபாளம்,பாகிஸ்தான்,ஸஇலங்கை நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதே சீனாவின் நோக்கம். இந்த இறக்குமதி தடைக்கு சீனாவின் தூண்டுதலும் காரணமாக இருக்கலாம். மெல்லிய ஆனால் நுட்பமான சிக்கலான இந்த பிரச்னைக்கு மத்திய அரசு விரைவாக நல்ல தீர்வு காணவேண்டும். இல்லையேல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
- வி.எச்.கே. ஹரிஹரன்